June 17, 2011 05:11 pm
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான இடமாற்றம் காரணமாக அம்பாறை மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளதையடுத்து அப்பிரசேத்திலுள்ள ஒருசில பாடசாலைகளுக்கு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.புஸ்பராஜா, எம்.எல்.துல்கர்நஹீம், எம்.எல்.ஏ.அமீர், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.தௌபீக் உள்ளிட்ட குழுவினர் விஜயம் செய்து தற்போதைய நிலைமைகளை அவதானித்தனர்.
அதன் பின்னர் சாய்ந்தமருது கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தலைமையில் ஊடகவியலாளர் சந்திப்பும் நடைபெற்றது.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, 2003ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் மாகாண சபையின் 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகளை ஏனைய மாகாண சபைகள் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டன.
எனினும் தற்போதைய மாகாணக் கல்விப் பணிப்பாளர் குப்பைத் தொட்டியில் கிடந்த சுற்றறிக்கைகளை தூசுதட்டி ஆளுநரிடம் கொடுத்து நல்லவராக நடித்து பைத்தியக்காரத்தனமான ஆசிரியர் இடமாற்றத்தை மேற்கொண்டுள்ளார்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளாகிய நாம் கிழக்கு மாகாண சபையில் இருக்கும் போது ஆளுநாராகவுள்ள தனிமனிதனால் இந்த இடமாற்றத்தை செய்ய முடியுமென்றால் மக்கள் பிரதிநிதிகள் எதற்கு ? மாகாண சபை எதற்கு ? இதனைப் பார்க்கும் போது மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் வெட்கப்படவேண்டியவர்களாகக் காணப்படுகின்றோம்.
13ஆவது திருத்தச் சட்டத்தின்படி நியமனம், இடமாற்றம், ஒழுக்காற்று நடவடிக்கை என்பவற்றை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் ஆளுநரிற்கு வழங்கப்பட்டுள்ள போதிலும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அமைச்சர்களின் ஒத்துழைப்புடனேயே இவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இதனையே ஏனைய மாகாண சபைகள் மேற்கொண்டு வருகின்றன. எனினும் கிழக்கு மாகாண சபை மாத்திரம் சர்வாதிகார ஆட்சி நடாத்தி வருகின்றது.
கிழக்கு மாகாண சபையில் 2011.06.14 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானத்திற்கிணங்க 2012.01.01 ஆம் திகதி நடைமுறைப்படுத்தும் வகையில் தற்போது வழங்கப்பட்டுள்ள இடமாற்றங்களை இரத்து செய்வதென தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் எஸ்.சந்திரகாந்தன் கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றங்கள் எதுவித தடையுமின்றி நடைபெறுமமென ஊடகங்களுக்கு தெரிவித்திருப்பது வேடிக்கையாகவுள்ளது. இதனால் ஆசிரியர்களின் நிலை என்னவென்று புரியாது இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் திண்டாடி வருகின்றனர் எனவும் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.
No comments:
Post a Comment