Friday, June 17

இடமாற்றங்கள் எவ்வகையிலும் இரத்தாகாது


தினகரன் ௧௭-௦௬-2011




எத்தகைய நிலையிலும் ஆசிரிய இடமாற்றங்களில் மாற்றமில்லை. வழங்கப்பட்டுள்ள இடமாற்றங்கள் ரத்துச்செய்யப்படமாட்டாது என்ற உறுதியான நிலைப்பாட்டிலேயே முதலமைச்சரும் உள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம். டி. ஏ. நிஷாம் தெரிவித்தார். அதேவேளை; மாணவர்களை ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதிக்கக்கூடாது என்ற கண்டிப்பான பணிப்புரையை சகல அதிபர்களுக்கும் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.ஆசிரிய இடமாற்றங்களை ரத்துச் செய்யக்கோரி நேற்றும் கிழக்கில் கல்முனை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில பாடசாலைகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் இன்றைய தினமும் பெருமளவிலான கிழக்கு மாகாண பாடசாலைகள் ஆர்ப்பாட்டத்திலீடுபட உத்தேசித்துள்ளதாக பாடசாலை வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளிவருகின்றன. இந்நிலையில் இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விவகாரம் தொடர்பில் அவர் மேலும் தெவிக்கையில்;
ஆசிரிய இடமாற்றத்தைக் கண்டித்து நேற்று கல்முனையில் ஐந்து பாடசாலைகளிலும் மட்டக்களப்பில் மூன்று பாடசாலைகளிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இங்கு மாணவர்கள் பாடசாலைக்கு வருவதைத் தடுத்துள்ளனர்.
எவ்வாறெனினும் ஆசிரியர்கள் அவர்களது உரிமைகளைக் கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடியும். பெற்றோரும் அவ்வாறுதான், ஆனால் மாணவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் இத்தகைய செயல்பாடுகளில் ஈடுபட முடியாது. ஒரு பிழையான கலாசாரம் வளர்க்கப்படக் கூடாது. இது விடயத்தில் பாடசாலை அதிபர்கள் முக்கிய கவனம் செலுத்துவது அவசியம்.
நேற்றைய தினம் மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பில் ஒரு செய்தியாளர் மாநாட்டை நடத்தினார். அதன்போது இடமாற்றம் ரத்துச் செய்யப்படமாட்டாது என்ற அவரது நிலைப்பாட்டையும் அவர் வெளியிட்டார்.
அரசாங்கமும் வழங்கப்பட்ட இடமாற்றங்களை ரத்துச் செய்வதில்லை என்ற நிலைப்பாட்டிற்கு ஆதரவாகவே உள்ளது. அத்துடன் பெரும்பாலான பாடசாலைகளில் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே ஆசிரியர்கள் கற்பித்தல் பணியில் உள்ளனர் என்பதும் கருத்திற்கொள்ளப்படவேண்டும்.
சில பாடசாலைகளில் முதலாம் தரம் முதல் 12ம் தரம் வரையான வகுப்புகள் உள்ளபோதும் ஆசிரியர்கள் மூன்றோ நான்கோ பேர்களே உள்ளனர். மேலதிக ஆசிரியர்களுக்கே இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது என்பதை சகலரும் உணர்ந்து செயற்படுவது அவசியம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)

No comments:

Post a Comment