Friday, June 17

ஆசிரியர் இடமாற்றத்தை கைவிடக்கோரி கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் கொண்டுவர முடிவு

ஆசிரியர் இடமாற்றத்தை கைவிடக்கோரி கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் கொண்டுவர முடிவு


June 17, 2011  03:10 pm

கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுவரும் ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான சிக்கல் தற்போது பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

மாணவர்களின் நன்மையை கருத்திற் கொண்டு செயற்படாத சில சுயநல அரசியல்வாதிகள் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள ஆசிரியர் நியமனத்தை பகடைய்காயாக பயன்படுத்தி வருகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள ஆசிரியர் நியமனத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு கிழக்கு மாகாண அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

எனினும் மாகாண அமைச்சரவையின் இத்தீர்மானத்தை கிடப்பில் இட்டு ஆளுநரின் கட்டளைப்படி ஆசிரியர் இடமாற்றங்களுக்கான கடிதங்கள் வலயக் கல்விப் பணிமனையால் ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஆசிரியர் இடமாற்றத்தில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து ஆராய கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினர் இன்று கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை உள்ளிட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்திருந்தனர்.

பாடசாலைகளுக்கு இவர்கள் விஜயம் செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட கிழக்கு மாகாண கல்வி அமைச்சர், கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தை 01.01.2012 அன்று வழக்குமாறு வலியுறுத்தவுள்ளதாகவும் அதற்கு முன்னர் இடமாற்றம் வழங்கப்பட்டால் மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் எதிர்வரும் 21ம் திகதி கிழக்கு மாகாண சபை அமர்வில் ஆசிரியர் இடமாற்றத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு தீர்மானம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அதற்குப் பின்னரும் ஆசிரியர் இடமாற்றம் வழங்கப்பட்டால் சபை நடவடிக்கையில் இருந்து வெளியேறுவோம் எனவும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் உள்ளிட்ட சிலர் இன்று குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் ஆசிரியர் இடமாற்றத்தை இடைநிறுத்துமாறுக் கோரி சம்மாந்துறை பிரதேசத்தில் இன்று பொது மக்கள் மாணவர்கள் சேர்ந்து ஆர்பாட்டம் ஒன்றை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment