தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலவல்கள் அமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.எச்.எம்.ஜெமீல் தமது நூற்சேர்க்கைகளை அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நடைபெற்றது.
நூலகர் எம்.எம். றிபாய்டீன் தலைமையில் நடைபெற்ற இந்நூற்சேர்க்கை கையளிப்பு விழாவில் பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் எஸ்.எம்.முகம்மது இஸ்மாயில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன் கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.மௌனகுரு, கல்விமான் எஸ்.எச்.எம்.ஜெமீல் தொடர்பாக சிறப்புரையாற்றினார்.
தமது சேர்க்கைகளிலிருந்து கல்விமான் எஸ்.எச்.எம்.ஜெமீல் ஆயிரத்து ஐநூறுக்கு மேற்பட்ட நூற்களை இந்நிகழ்வில் அன்பளிப்புச் செய்தார். இதில் அவரால் எழுதப்பட்டதும் தொகுக்கப்பட்டதுமான நூல்களும் அடங்கும். உப வேந்தர் பேராசிரியர் எஸ்.எம்.முகம்மது இஸ்மாயில், கல்விமான் எஸ்.எச்.எம்.ஜெமீலுக்கு நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவித்தார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமுமான எம்.ரி.ஹஸன் அலி, சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எம்.நௌஸாத், பதிவாளர் எச்.அப்துல் சத்தார், நிதியாளர் எம்.குலாம் றசீட், பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், எஸ்.எச்.எம்.ஜெமீலின் துணைவியார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பல்கலைக்கழக நூலகத்தில் ‘எஸ்.எச்.எம்.ஜெமீல் பிரத்தியேக நூலகம்’ எனும் நூற்சேர்க்கை நிலையமொன்றும் ஜெமீலின் துணைவியாரால் திறந்து வைக்கப்பட்டதுடன் ஏராளமான நூற்களும் காட்சிப்படுத்தப்பட்டன.
இந்நூற் சேர்க்கையானது இஸ்லாமிய கற்கை துறை சார்ந்தோருக்கும் ஏனைய ஆய்வாளர்கள், துறைசார்ந்தவர்கள், பல்கலைக்கழக மாணவர்களுக்கும் மிகப் பயனுள்ளவையாக அமையுமென நூலகர் எம்.எம்.றிபாய்டீன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment