Wednesday, February 20

உலகில் எங்குமில்லாதவாறு இலங்கையில் மாத்திரம் ஹலால் விஸ்வரூபம் பெற்றிருக்கிறது - ஜெமீல்


EPC-Jameel(அஸ்லம் எஸ்.மௌலானா)

நாட்டில் பாரிய யுத்தத்தில் ஈடுபட்ட பெரும் ஆயுத சக்தியான புலிகள் இயக்கத்தை அழித்தொழித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசுக்கு சிறியளவிலான இனவாதக் கும்பல் ஒன்றை அடக்குவது ஒன்றும் பெரிய காரியமாக இருக்காது என்பதால் அது தொடர்பில் அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் கோரிக்கை விடுத்தார்.

நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்தும் நோக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் பொது பல சேனா இயக்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் கண்டனப் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் மாதாந்த சபை அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை திருமலையிலுள்ள மாகாண சபையின் சபா மண்டபத்தில் தவிசாளர் ஆரியவதி கலப்பதி தலைமையில் நடைபெற்றது.

இதன்போது மதிய இடைவேளைக்குப் பின்னர் குறித்த கண்டனப் பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றுகையில் அவர் மேலும் கூறியதாவது;

"சில வருடங்களுக்கு முன்னர் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு இன்று நாட்டில் அமைதியும் சமாதானமும் இனங்களுக்கிடையில் ஐக்கியமும் நிலவி வருகின்ற நிலையில் பொதுபல சேனா அமைப்பு, ஹலால் விவகாரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் முஸ்லிம்கள் மீது பல்வேறு வகையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் போராட்டங்களை நடாத்தி வருகின்றது.

பொது பல சேனா எனும் பௌத்த கடும்போக்குவாத அமைப்பு மேற்கொண்டு வருகின்ற தேவையற்ற நடவடிக்கைகளினால் நாட்டில் இன ஐக்கியத்திற்கு குந்தகம் ஏற்படுவதோடு வீண் குழப்பங்களுக்கும் வழி வகுக்கின்றன. இதனால் முஸ்லிம்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.

பொது பல சேனாவின் இனவாத செயற்பாடுகளை சாதாரண சிங்கள மக்கள் விரும்பவில்லை. அதற்கு அவர்கள் ஆதரவு தெரிவிக்கவுமில்லை.

சிங்கள மக்களையும் ஹலால் உணவு உண்ணுமாறு முஸ்லிம்கள் நிர்ப்பந்திப்பது போன்று அந்த அமைப்பினர் பொய்ப்பிரசாரம் செய்து இரு மதத்தினரையும் மோதவிட முயற்சிக்கின்றனர்.

ஹலால் என்பது இஸ்லாமியர்களின் மார்க்க ரீதியிலான அடிப்படை உரிமையாகும் அதனை தடுக்க முற்படுவதானது அடிப்படை உரிமை மீறலாகும்.

இந்த ஹலால் உணவு விடயமானது மத ரீதியானது மாத்திரமல்ல சுத்தம், சுகாதாரத்தையும் உத்தரவாதப் படுத்துகிறது. அதனால்தான் மாற்று மதத்தினர் கூட ஹலால் உணவுகளை தேடி வாங்குகின்றனர்.

அதனால் உற்பத்தியாளர்களும் ஏற்றுமதியாளர்களும் ஹலாலை விரும்பி ஏற்று நடைமுறைப்படுத்தி வருகின்றனர். ஹலால் எந்தவொரு மதத்தினருக்கும் நிறுவனத்திற்கும் முஸ்லிம்களால் நிர்ப்பந்திக்கப்படவில்லை.

ஹலாலின் தாற்பரியத்தை புரிந்து கொண்டு உலக நாடுகள் அனைத்தும் அதனை நடைமுறையில் பேணி வருகின்றன. தாய்லாந்தில் அந்நாட்டின் பிரதமரின் நிர்வாகத்தின் கீழ் ஹலால் திணைக்களம் செயற்பட்டு வருகின்றது.

ஆனால் உலக வரலாற்றில் எந்த நாட்டிலும் இடம்பெறாத ஹலால் எதிர்ப்புப் போராட்டம் இலங்கையில் மாத்திரம் முதன்முறையாக விஸ்வரூபம் பெற்றிருக்கிறது. இதன் பெயரால் முஸ்லிம்களுக்கு பல்வேறு வகையிலும் நெருக்கடிகளும் அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் மூலம் நாட்டில் வீண் குழப்பங்களையும் கலவரங்களையும் ஏற்படுத்துவதற்கு பொதுபல சேனா அமைப்பினர் எத்தனிக்கின்றனர். இதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது.

நாட்டில் பாரிய யுத்தத்தில் ஈடுபட்ட பெரும் ஆயுத சக்தியான புலிகள் இயக்கத்தை அழித்தொழித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசுக்கு சிறியளவிலான இனவாதக் கும்பல் ஒன்றை அடக்குவது ஒன்றும் பெரிய காரியமாக இருக்க மாட்டாது. ஆகையினால் அரசு இது தொடர்பில் உடனடியாக ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

இல்லையேல் நாட்டில் இனக்கலவரம் ஒன்று வெடிப்பது தவிர்க்க முடியாமல் போய்விடும் அஞ்சுகின்றோம்.

ஆகையினால் பொதுபல சேனாவின் இனவாத செயற்பாடுகளை கிழக்கு மாகாண சபை ஏகமனதாக வன்மையாக கண்டிக்க வேண்டும் என்பதுடன் அதன் இனவாத செயற்பாடுகளை உடனடியாகத் தடுத்து நிறுத்துவதற்கும் அவர்களின் நெருக்குவாரங்களில் இருந்து முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்கும் அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இச்சபை வலியுறுத்த வேண்டும் என்ற பிரேரனையை ஒற்றுமைக்கு முன்மாதிரியான கிழக்கு மாகாணத்தின் இந்த உயர் சபையில் முன்மொழிகிறேன்" என்று குறிப்பிட்டார்.

இப்பிரேரணை தொடர்பில் ஆளும் தரப்பு சிங்கள- முஸ்லிம் உறுப்பினர்களிடையே காரசாரமான விவாதம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment