Thursday, February 21

அம்பாறை நில அதிர்வுகளின் ஒலி அலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன - என்.பீ்.விஜயானந்த


அம்பாறை வடினாகல பகுதியை அண்மித்த வலயத்தில் இடம்பெறுகின்ற நில அதிர்வுகளின் போது ஏற்படுகின்ற ஒலி அலைகளை அடையாளம் கண்டுள்ளதாக  புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவிக்கின்றது.
சேனாநாயக்க சமுத்திர சரணாலாய பகுதியிலிருந்து இந்த ஒலி அலைகள் எழுவதாக பணியகத்தின் தலைவர் என்.பீ்.விஜயானந்த குறிப்பிட்டார்.
வடினாகலயை அண்மித்த பகுதிகளில் நில அதிர்வுகளின் போது ஏற்படுகின்ற ஒலி அலைகள் அதற்குரிய மானிகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் இயற்கையான நில அதிர்வுகளின்போது எற்படுகின்ற ஒலி அலைகளை மானிகளில் அளவிட முடியாது எனவும் அவர் கூறினார்.
இதன் காரணமாக இந்த நில அதிர்வுகள் மனித செயற்பாடுகளின் பிரதிபலனாக இருக்கலாம் என்ற சந்தேகம் தோன்றியுள்ளதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அந்த பிரதேசத்திலுள்ள சகல அதிகாரிகளிடமும் விசாரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அரசாங்கத்தின் தலையீட்டினாலோ அல்லது வேறு தனியார் கைத்தொழில் துறையினாலோ இத்தகைய செயற்பாடுகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த பிரதேசத்தில் ஏற்படுகின்ற நில அதிர்வுகள் மனித செயற்பாடுகளின் பிரதிபலனாக அமைந்துள்ளனவா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நிபுணர்களினால் பல்வேறு கோணங்களில் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment