இனிமேலும் கட்சிகளை நம்பி மோசம் போகாமல்
த.தே.கூட்டமைப்பில் ஒரு முஸ்லிம் பிரிவை அமைக்க த.தே.கூட்டமைப்பின் தலைவர்
சம்பந்தன் இப்போதிருந்தே கரிசனை காட்ட வேண்டும்.த.தே.கூட்டமைப்பை
அண்மையில் முஸ்லிம் காங்கிரஸ் கை விட்டது எல்லோருக்கும் தெரியும்.
கிழக்கில் நடந்தவை வேதனையளிக்கிறது.எவ்வாறு மஷூர் மௌலானா போன்றோர் தந்தை
செல்வாவுக்கு துணை நின்றார்களோ அதேபோன்று தமிழ் ஆர்வங்கொண்ட முஸ்லிம்
இளைஞர்களை சம்பந்தனும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என உயர் நீதி மன்றத்தின்
ஓய்வுபெற்ற நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயரும் செனட்டருமான மஷூர் மௌலானாவின்
அகவை எண்பது நிறைவு விழா நேற்று மாலை 5 மணிக்கு கொழும்பு தமிழ்ச்சங்கத்தில்
நடைபெற்றது. உயர் நீதி மன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர்
சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தலைமையுரையாற்றும்போதே
அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,இன்று பெரும்பான்மை சிங்கள மக்கள்
முழுமைபெற்ற இலங்கையர் சிறுபான்மையினரிடையே இருக்கக்கூடும் என்பதைக்கூட
ஏற்க மறுக்கின்றனர்.சிங்களத்தையும் பௌத்தத்தையும் தெரிந்து
வைத்துக்கொண்டால் அவர்கள் உண்மையான இலங்கையர்கள் என்று நினைத்து
விடுகின்றார்கள் ஆனால் எனது கருத்துப்படி மூன்று மொழிகளையும், நான்கு
மதங்களின் அடிப்படைகளையும் அறிந்து நாட்டின் பல்வேறு கலாசார முறைகளைக்
கண்டு கேட்டறிந்த ஒருவரே உண்மையாளன இலங்கையர் என்று கூறப்படலாபம் என
நம்புகிறேன். ஏனெனில் இலங்கை பல்லின,பல்மொழி,பல்மதங்கள் வாழும் நாடு.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற கட்சிப்பெயர் தமிழர்களையும்
முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் பெயராக அமைந்திருப்பதை நாம் அவதானிக்க
வேண்டும்.
தமிழ் தேசியமும் முஸ்லிம் தேசியமும் ஒருங்கிணைந்து கடமையாற்ற தமிழ்
தேசியக்கூட்டமைப்பு ஆவண செய்ய வேண்டும். வேண்டுமெனில் எதிர்வரும் வடமாகாண
சபைத்தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர்களை த.தே.கூட்டமைப்பு நிறுத்தலாம்.
மர்ஹூம் அஷ்ரப் மு.கா. வை ஆரம்பித்து எவ்வாறு பல்துறை சார்ந்த முஸ்லிம்
மக்களையும் கட்சிக்குள் கொண்டு வந்தாரோ அதைப்போன்று த.தே.கூட்டமைப்பும் பல
கட்சிகளில் இருக்கும் முஸ்லிம்களையும் தம் வசம் ஈர்க்க வேண்டும்.
முடியுமானால் அமைச்சர் பஷீர் சேமகுதாவூதையும் கூட்டுச் சேர்த்துக்கொள்ள
வேண்டும்.
முதலில் முஸ்லிம் மக்களின் அபிலாஷைகள் என்ன என்பதை தமிழ்த் தலைவர்கள்
புரிந்து கொள்ள வேண்டும். அதன் பின் அதற்கேற்ப செயற்படவும் வேண்டும்.
தமிழ்,முஸ்லிம் தலைமையின் கீழ் ஒன்று பட்ட கட்சியாக பரிணமிப்பதன் மூலமே
தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை ,போராட்டத்தை வலுவாக முன்னெடுக்க முடியும்.
இது தமிழ் பேசும் மக்களுக்குள் போட்டி அரசியல் நடத்துவதற்கான காலமல்ல.
அத்தகைய போட்டி அரசியலுக்கான களங்களை உருவாக்குபவர்கள் தமிழ் பேசும்
மக்களுக்கு எதிரான சில சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு துணை
போகின்றவர்களாகவே அமைவார்கள். சோரம் போகும் தலைமைத்துவத்தை உண்மையான
முஸ்லிம்கள் வரவேற்க மாட்டார்கள். நேர்மையான தலைவர்களையே முஸ்லிம் மக்கள்
போற்றிப் புகழ்ந்து வாழ்ந்து வந்துள்ளார்கள்.
அரசியல் வாதிகள் சுயநலத்துடன் நடந்து தம்மையும் தம் சுற்றத்தாரையும் தமது
வாக்காளர்களையும் பயனடையச் செய்வதை நான் கண்டிக்கவில்லை. ஆனால் அவ்வாறான
சுயநல நடவடிக்கைகள் தமிழ் பேசும் மக்களின் பொது நலத்தையும் சுயகௌரவத்தையும்
பாதிக்கும் என்றால் அதை நாம் கண்டிக்காது இருக்கமுடியாது.
இன்று வரையில் பதவி,பணம், பகட்டுப் பேச்சுக்கெல்லாம் பலியாகாதிருக்கும்
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பாராட்டுக்குரியவர்கள் எனவும் தெரிவித்தார். |
No comments:
Post a Comment