Sunday, May 5

சாய்ந்தமருது அரசியல்வாதி மனப்பால் குடிக்கிறார் - சிராஸ் மீராசாஹிப்


அரசியலில் என்னை ஓரம் கட்டும் நோக்கத்தோடு செயல்படும் சதிகாரர்களின் வெளிப்பாடே எனது பிரத்தியேக செயலாளரின் வீடு தாக்கப் பட்டுள்ளமை என கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை இரவு சாய்ந்தமருதில் உள்ள கல்முனை மாநகர முதல்வரின் பிரத்தியேக செயலாளர் ஏ.எல்.எம்.இம்சாதின் வீட்டின் மீது கல்லெறி தாக்குதல் சம்பவம் இடம் பெற்றது. இத்தாக்குதலினால் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன. இச்சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு பொலிசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
நான் அரசியலுக்குள் பிரவேசித்த நாள் முதல் சாய்ந்த மருதில் உள்ள உள்ளுர் அரசியல் வாதி ஒருவர் எனக்கெதிராக செயற்பட்டு வருகின்றார். ஏன்னை அரசியலில் இருந்து ஒதுக்க வேண்டும் என்பதே அவரது இலக்காக உள்ளது. இந்த சம்பவம் மாத்திரமின்றி  இதற்கு முன்னரும் எனது உயிருக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தன.
நான் முதல்வராக கல்முனை மாநகர சபையை பொறுப்பேற்றதிலிருந்து பல அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருகின்றேன் இவற்றையெல்லாம் பொறுக்க முடியாத இந்த அரசியல்வாதி என்னால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்திப் பணிகளை தடுத்து நிறுத்துவதிலும், இவ்வாறான கீழ்தரமான சதி வேலைகளை செய்வதிலும் தனது அடியாட்களை ஏவி வருகின்றார். இதன் ஒரு அங்கமாகவே  எனது பிரத்தியேக செயலாளரின் நேற்றைய வீட்டுத் தாக்குதலையும் நான் நோக்குகின்றேன்.
என்னுடன் நெருக்கமானவர்களை இவ்வாறான இழி செயலை செய்து என்னிலிருந்து பிரிப்பதற்கும், எனது அபிவிருத்தி பணிகளை தடுத்து நிறுத்த முயற்சிப்பதன் மூலமும் என்னை அரசியலில் இருந்து ஓரம் கட்டலாம் என நினைப்பது பகல் கனவாகும் என முதல்வர் சிராஸ் மீராசஹிப் தனது கண்டன அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இரண்டு ஆண்டுகளின் பின்னர் புதியதொரு முதல்வரை கல்முனை மாநகர சபைக்கு கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படும் இந்த அரசியல் வாதி அண்மையில் மாநகர சபை உறுப்பினர்களை கூட எனக் கெதிராக செயல்படுமாறு குழப்பி எனக்கெதிராக அபாண்டமான பழிகளை சுமத்தி வருகின்றார் என்னை முதல்வர் பதவியில் இருந்து விலக்கி விட்டால் அவர் மாத்திரம் சாய்ந்தமருதில் அரசியல் செய்யலாம் என்ற எண்ணத்தில் மனப்பால் குடிக்கின்றார் என முதல்வரின் கண்டனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment