Wednesday, May 15

கல்முனை மாநகர சபைக்கு ஆசிய மன்றத்தின் உதவிகள் தொடரும்



கல்முனை மாநகர சபையில் ஆசிய மன்றம் நடைமுறைப்படுத்திவரும் உள்ளூர் பொருளாதார ஆட்சி செயற்திட்டத்தினை மேலும் இரண்டு வருடங்களிற்கு தொடர்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையினை கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (14.05.2013) முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபினால் ஆசிய மன்றத்தின் சிரேஷ்ட தொழில்நுட்ப ஆலோசகர் சுபாகரனிடம் கையளிக்கப்பட்டது. இதன் மூலம் 2015ம் ஆண்டு ஜூன் மாதம்வரை ஆசிய மன்றத்தின் இச்செயற்பாடு கல்முனை மாநகர சபையில் தொடரப்பட உள்ளது. 
இங்கு இவ் ஒப்பந்தத்தின் மூலம் எதிர்வரும் காலங்களில் ஆசிய மன்றம் செயற்படுத்த உள்ள திட்டங்கள் தொடர்பில் சிரேஷ்ட தொழில் நுட்ப ஆலோசகர் கருத்துரைக்கையில். மாநகர சபையின் வருமானங்களை அதிகரிப்பதன் மூலம் பொது மக்களுக்கு வழங்கப்படுகின்ற சேவையில் அதிகரிப்பினை ஏற்படுத்த முடியும். எனவே வருமானங்களை அதிகரிப்பதற்கான வழிவகைகளையும் ஆலோசனைகளையும் ஆசிய மன்றம் வழங்கும். அத்தோடு கல்முனை மாநகர சபையினால் வழங்கப்படுகின்ற சேவைகளை சினேக பூர்வ வாடிக்கையாளர் சேவையாக அமைப்பதற்கும் துணை புரியும். மாநகர சபையின் வருமான மூலங்களாக 60 வருமான மூலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த வருமான மூலங்களில் கல்முனை மாநகர சபையில் அமுல்படுத்தப்படாத வருமான மூலங்களை இனங்கண்டு அவற்றை அமுல் படுத்துவதற்கான வழிவகைகளையும் நாம் செய்ய உள்ளோம் எனத்தெரிவித்தார்.  ​ 
ஆசிய மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.வலீத் கருத்து தெரிவிக்கையில். கல்முனை மாநகர சபையானது முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் தலைமையில் உத்தியோகத்தர்களின் அர்பணிப்புடன் மிகவும் சிறப்பாக செயற்பட்டு வருகின்ற ஒரு சபையாக மிளிர்ந்து கொண்டிருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். கல்முனை மாநகர சபையின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்பதில் முதல்வர் உன்னிப்பாக செயற்பட்டுவருகின்றார். இதன்விளைவாக முதல்வர் பதவியேற்ற போது 2.5 மில்லியனாக இருந்த மாநகர சபையின் நிலையான வைப்பு தற்போது 20 மில்லியனாக காணப்படுகின்றது. இவ்வருமான அதிகரிப்பினை கவனத்தில் கொண்டு  மாநகர சபைகளுக்கு ஆசிய மன்றத்தினால் ஒதுக்கீடு செய்யப்படும் நிதியில் ஏனைய சபைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியினை விட கல்முனை மாநகர சபைக்கு கூடுதலான நிதியாக 14 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது எனத்தெரிவித்தார். 
முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநகர பொறியியலாளர் ஹலீம் ஜௌசி, கணக்காளர் எல்.ரீ.சாலிதீன், ஆசிய மன்றத்தின் சிரேஷ்ட தொழில் நுட்ப ஆலோசகர் சுபாகரன், திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.வலீத், முதல்வரின் பிரத்தியேக செயலாளர் ஏ.எல்.எம்.இன்சாத் ஆகியோர் கலந்து கொண்டனர். 

1 comment:

  1. https://www.facebook.com/pages/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-FM/210682259059338?fref=ts

    ReplyDelete