Tuesday, May 7

'அம்பாரை மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைகளை உடனடியாக தீர்த்துவையுங்கள்


அம்பாரை மாவட்ட விவசாயிகள் எதிர் நோக்கும் பிரதான சில பிரச்சினைகளை தீர்க்கும் படி முஸ்லிம் மக்கள் கட்சி கிழக்கு மாகாண அமைச்சர் நசீர் அஹமதிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீதினால் அமைச்சருக்கு நேரடியாக எழுதப்பட்ட கடிதத்திலேயே இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது
கிழக்கு மாகாண மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை எழுத்து மூலம் தங்களிடம் ஒப்படைத்தால் அவற்றை உடனடியாக நிறைவேற்றித்தரத்தயார் என அண்மையில் ஊடகங்களில் கூறியிருந்தீர்கள்.  இதற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவும் தங்களுடன் உடன்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தீர்கள்.
இதற்கமைய அம்பாரை மாவட்ட கரையோர விவசாயிகள் எதிர் நோக்கும் இரண்டு பிரதான பிரச்சினைகளை உங்கள் கவனத்துக்கு எழுத்து மூலம் கொண்டு வருகிறேன்.
1.        அம்பாரை மாவட்டத்தின் காரைதீவு தாம்போதி. இது எனக்குத்தெரிந்த வரை நாற்பது வருடங்களுக்கு மேலாக உள்ள பிரச்சினையாகும். மழைக்காலத்தில் இந்த தாம்போதி நிறைந்து பாதைக்கு மேல் நான்கு அடி உயரத்தைத்தாண்டி வெள்ளம் ஓடும். இதன் காரணமாக கல்முனைக்கு அல்லது சம்மாந்துறைக்குச்செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமலும் நீரைப் பொருட்படுத்தாமல் செல்லும் வாகனங்கள் கட்டையிலேயே போய் சேருவதையும் காணலாம். அத்துடன் காலை வேளையில் பாடசாலைக்கு, தொழிலுக்கு செல்வோர் தமது பயணங்களை மேற்கொள்ள முடியாமல் தவிப்பதையும் காணலாம். இந்த தாம்போதியை நான்கு அடி உயரத்துக்கு உயர்த்தி, நீளமான பாலம் ஒன்றை அமைப்பதன் மூலம் இதற்கு தீர்வு காண முடியும்.
2.        ஒரு காலத்தில் இரண்டு போகங்கள் விளைச்சல் காணும் நிலையிலிருந்த கல்முனை தீவட்டை காணிப்பிரதேசம் இப்போது ஒரு போகம் கூட வெள்ள பாதிப்பின்றி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு பிரதான காரணம் மாவடிப்பள்ளியூடாக வரும் நீரோடை சரியான முறையில் விரிவு படுத்தப்பட்டு ஆழமாக அகழப்படவில்லை என்பதே. இதன் காரணமாக மழைக்காலங்களில் தண்ணீர் ஓட வழியின்றி வயல்களை பதம் பார்க்கிறது. அம்பாறை மாவட்டம் பல எம்பீக்களையும், மாகாண சபை உறுப்பினர்களையும், அமைச்சர்களையும் கண்டும் இப்பிரச்சினை இன்னமும் நீள்வதன் மூலம் மக்கள் வாக்குகளை பெற்ற இத்தகைய கையாலாகாதவர்கள் எந்தளவுக்கு மக்களை ஏமாற்றியுள்ளார்கள் என்பதை மாரி காலத்தில் இக்காணிகளை பார்வையிடுவதன் மூலம் காணலாம்.
ஆகவே இந்த நீரோடை, அம்பாறை சிங்கள பகுதிகளில் இருப்பது போன்று ஆழமாக தோண்டப்பட்டு இருமருங்கிலும் கருங்கற்களால் கட்டப்பட வேண்டும். இதனை ஒரே நேர்கோட்டில் கி;ட்டங்கி வரை கொண்டு சென்று முடிப்பதன் மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்பது எமது கட்சியின் கோரிக்கையாகும். 

No comments:

Post a Comment