முஸ்லிம் காங்கிரஸின் கட்டுப்பாட்டிலுள்ள கல்முனை மாநகர சபையின் ஆளும்
கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான கூட்டம் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம்
தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
கல்முனை மாநகர சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களின் குழுக்கூட்டத்தில்
மேயர் சிராஸ் மீராசாஹிப் மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.உமர் அலியுடன்
நடந்து கொண்ட விதத்தினையடுத்தே ஆளும் கட்சி உறுப்பினர்களிடையே முறுகல்
ஏற்பட்டது. இந்த முறுகல் இக்கூட்டத்தின் போது சுமூக நிலைக்கு
கொண்டுவரப்பட்டது.
கல்முனை மாநகர சபையின் பிரதி மேயர் நிசாம் காரியப்பர் உட்பட ஆறு முஸ்லிம்
காங்கிரஸ் உறுப்பினர்கள் கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற மாநகர சபையின்
மாதாந்த கூட்டத்தினை பகிஷ்கரிப்பு செய்தனர்.
இந்த சர்ச்சை தொடர்பில் கட்சியின் தலைமைக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்தே முஸ்லின் காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள்
அனைவரும் கட்சி தலைவரினால் கொழும்புக்கு அழைக்கப்பட்டு குறித்த பிரச்சினை
ஆராயப்பட்டு சுமூக நிலைக்கு கொண்டுவரப்பட்டது.
அத்துடன் கல்முனை மாநகர சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களின்
குழுக்கூட்டத்திற்கு கல்முனை தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும்
நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மாகாண சபை உறுப்பினர் ஆகியோரை அழைப்பது
எனவும் இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் எம்.ரீ.ஹசனலி, பாராளுமன்ற உறுப்பினர்
சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
ஏ.எம்.ஜெமீல், கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் மற்றும் பிரதி
முதல்வர் நிசாம் காரியப்பர் உட்பட கல்முனை மாநகர சபையின் ஆளும் கட்சி
உறுப்பினர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment