முஸ்லிம்கள் ஓரிடத்தில் குடியேறி அங்கு வாழத் தொடங்கியதும் அவர்கள்
வசிப்பதற்குரிய வீடுகள் அமைக்கும் போது பள்ளிவாசல் ஒன்றையும் அமைத்துக்
கொள்வது இஸ்லாமிய வரலாறாகும்.
சாய்ந்தமருதில் முஸ்லிம்கள் வாழத் தொடங்கிய காலத்தில் ஊரின் தென் பகுதி
காடாக இருந்துள்ளது. அக்காட்டுப்பகுதியில் மரங்களை வெட்டியெடுத்து
இப்பொழுது பெரிய பள்ளிவாசல் அமைந்திருக்கும் இடத்தில் மரங்களையும்
இலுக்குகளையும் கிடுகுகளையும் கொண்டு சிறிய பள்ளிவாசலொன்றை தற்காலிகமாக
அமைத்துக் கொண்டார்கள். இது முன்னர் முகைதீன் பள்ளிவாசல் என
அழைக்கப்பட்டது.
12ஆம் நூற்றாண்டில் தஃவாப் பணிக்காக பக்தாத் நகரில் இருந்து முகைதீன்
அப்துல் காதர் ஜெய்லானி அவர்களின் சிஷ்யர் இலங்கை வந்ததாகவும் அவர் அக்கால
சிங்கள அரசனின் (கஜபாகு) புதல்வனது தீராத நோயைக் குணப்படுத்தியதினால்
அவருக்கு அந்த அரசன் கரைவாகுவை பரிசாகக் கொடுத்து அங்கு காணப்பட்ட
பள்ளிவாசல்களை முகைதீன் பள்ளிவாசல் என அழைக்கப்பட வேண்டும் என
கட்டளையிட்டதாகவும் முன்னோர்கள் கூறுகின்றனர்.
இப்பள்ளிவாசல் 1691ஆம் ஆண்டளவில் மட்டக்களப்புக் கச்சேரியில் அடை
அறவீட்டுக் கணக்கராக கடமைபுரிந்த சதக்குலெவ்வை என்பவரினால்
பரிபாலிக்கப்பட்டு வந்துள்ளது. 1870ம் ஆண்டில் பிரதம மரைக்காயர்
மீராலெவ்வைப் போடி வன்னியனார் காலத்தில் சுமார் 1000 பேர் தொழக்கூடிய
இடவசதியுள்ள பள்ளிவாசலாக மாற்றம் பெற்றது. 1961ம் ஆண்டில் பிரதம மரைக்காயர்
ஜனாப் மு.அ. அப்துல் கபூர் காலத்தில் பள்ளிவாசலின் முன்பக்கமாக
மண்டபமொன்று அமைத்து முகப்பு வேலைகளும் செய்யப்பட்டு இப்பள்ளிவாசல்
புதுப்பொலிவுடன் விழங்கியது. தற்போதைய பள்ளிவாசல் கட்டடம் சுமார் 5000 பேர்
தொழக்கூடிய இடவசதி கொண்ட நவீன இருமாடிக் கட்டடமாக கட்டுவதற்கு 1985ம்
ஆண்டு பிரதம மரைக்காயர் அல்ஹாஜ் M.I.M. மீராலெவ்வை காலத்தில் ஆரம்பித்து
வைக்கப்பட்டு 2003ம் ஆண்டு பூர்த்தி செய்யப்பட்டது.
No comments:
Post a Comment