2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் கணித பிரிவில் அம்பாறை மாவட்டத்தில் முதலாமிடத்தை கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி மாணவன் முஹம்மட் சஸ்னி பெற்று பொறியியல் துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சாய்ந்தமருது -16 அஹமட் வீதியில் வசிக்கும் முஹம்மட் ஹனீபா சித்தி ஹுஸைமா தம்பதிகளின் மூன்றாவது புதல்வனான சஸ்னி மாவட்டத்தில் முதலாமிடத்தையும் தேசிய ரீதியில் 169 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.
இவர் தனது ஆரம்பக்கல்வியை சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ் வித்தியாலயத்தில் கற்று புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த பின்னர் இடைநிலை மற்றும் உயர்நிலைக்கல்வியை கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியில் கற்றார். அங்கு க.பொ.த.சாதாரண தரத்தில் எட்டு ”ஏ” மற்றும் ஒரு ”பி” சித்திகளையும் பெற்று உயர்தரத்திற்கு தெரிவாகி கணிதப்பிரிவில் இணைந்த கணிதம், பௌதிகவியல், இரசாயணவியல் போன்ற பாடங்களைக் கற்று அதில் அதி கூடிய ”ஏ” சித்திகளைப் பெற்று பொறியியல் துறைக்கு தெரிவாகியுள்ளார்.
இம்மாணவன் சித்தியடைவதற்கு எடுத்த முயற்சி தொடர்பாக வினவிய போது அதற்கு அவர் கூறுகையில்…………………………………………………….
நான் முதலில் அல்லாஹ்க்கு நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன்.ஏனெனில் அவனுடைய அருளாலும் நாட்டத்தாலும் தான் எனக்கு இந்நிலைக்கு வரமுடிந்தது. அடுத்ததாக எனக்கு கல்வி கற்றுத்தந்த ஆசிரியர்களுக்கும் நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன் எனக் கூறி ஆரம்பித்த அவர்
தான் தினமும் கற்கும் பாடங்களை அன்றே மீட்டிக்கொள்வதாகவும். ஆசிரியர்களை மதித்து அவர்கள் கூறும் அறிவுரைகளையும் வழிகாட்டல்களையும் முழுமையாக பின்பற்றுவதாகவும் வகுப்பறைக் கற்றலில் முழுமையாக கவனம் செலுத்துவதாகவும் பாட விடயங்களில் ஏற்படும் சந்தேகங்களை உடனுக்கு உடன் உரிய ஆசிரியர்களிடம் கேட்டு தெளிவு பெற்றுக் கொள்வதாகவும் கற்கும் பாடங்களுக்குரிய வினாக்களை கடந்தகால வினாப்பத்திரத்தில் இருந்து பெற்று அதை உடனே பயிற்சிகளைப் பெற்றுக்கொள்வதோடு வீட்டிலும் கற்றுக் கொள்வதுடன் கல்லூரி நூலகத்தையும் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டதோடு அதிகமாக வினாக்களுக்கு விடையளித்துப் பார்த்து நண்பர்களுக்கு பாடங்களைக் கற்கும் போது உதவி செய்வதோடுஅதன் மூலம் தானும் தெளிவு பெற்றுக் கொள்ளவதாக தெரிவித்தார்.
ஏனைய மாணவர்களுக்கு நீங்கள் என்ன கூறவிரும்புகிறீர்கள் எனக் கேட்ட போது……………………………………………………………………………
என்றும் ஆசிரியர்கள் சொற்படி கேட்டு நடப்பதோடு பாடசாலையின் ஒழுக்ககட்டுப்பாட்டையும் கடைப்பிடித்து ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் மதித்து நடந்தால் நிச்சயம் இறைவன் வெற்றியைத் தருவான். என மேலும் கூறினார்.
No comments:
Post a Comment