Monday, July 4

சாய்ந்தமருது















கிழக்கே வங்காள விரிகுடாவின் அற்புதக் கடற்கரையினாலும் மேற்கே கரைவாகுப் பசுமையினாலும் வடக்கே கருணையுள்ளங்கொண்ட கல்முனைக்குடியினாலும் தெற்கே மானங்காத்த மாளிகைக்காட்டினாலும் அலங்கரிக்கப்பட்டுக் காணப்படும் சாணக்கியம் 
கொண்ட எமது மண் இந்த சாய்ந்தமருது மண்....இதன் சமூக, சமய, கல்வி, கலாச்சார, அரசியல், மற்றும் இதர விடயங்கள் இவ்விணைவலையமைப்பின் ஊடாக ஆராயப்படும்...

அம்பாறை நிர்வாக மாவட்டத்தின் கல்முனை தேர்தல் தொகுதியில் தனி முஸ்லிம் மக்களை மட்டும் கொண்டிருக்கும் ஓர் ஊர்தான் சாய்ந்தமருதாகும். இது தென்கிழக்குப் பகுதியில் நீண்டகால வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட ஒரு பழம்பெரும் பிரதேசமாகும். அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்தில் மருதம், நெய்தல் ஆகிய நிலத் திட்டியைக் கொண்டதாக சாய்ந்தமருது அமைந்திருப்பது இவ்வூரின் வளத்தினை எடுத்துக் காட்டுகின்றது.  முதலில் கல்முனை பிரதேச செயலகத்தின் ஒரு பிரிவாக இயங்கி வந்து, 04-02-2001 இலிருந்து சாய்ந்தமருது ஒரு தனி பிரதேச செயலகமாக செயற்பட துவங்கியது.



                                           சாய்ந்தமருது பிரதேச செயலகம்
 

கடந்த2010 ம் ஆண்டின் கணக் கெடுப்பின் பிரகாரம் 7118 குடும் பங்களும்,  27652 மக்கள் சனத் தொகையும் 16, 936 வாக்காளர்களும் இங்கு வாழ்ந்து வருகின்றனர். சனத்தொகையில் ஆண்கள் 50.4% வீதமும், பெண்கள் 49.6% வீதமும் காணப்படுகின்றனர்.மற்றும் பதினேழு கிராம சேவகப் பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு பிரதேச செயலகத்தையும் கொண்ட ஒரு தொன்மையான பிரதேசமாகவும் சாய்ந்தமருது காணப்படுகின்றது. இதன் சனத்தொகை அடர்த்தி வீதம்3072 / sq.Kmஆகும். 


ஒரு ஜூம்ஆப் பள்ளிவாசல் உட்பட 22 பள்ளிவாசல்கள், ஒரு ஹிப்ளு மத்ரஸா, ஒரு அரபுக் கல்லூரி, ஒரு தேசிய (ஸாஹிரா) பாடசாலை உட்பட 8 பாடசாலைகள், ஒரு கோட்டக் கல்வி அலுவலகம், மக்கள் வங்கி, கிராமிய வங்கி, இலங்கை வங்கிக் கிளை, தனியான பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் என்பனவைகளும் இங்குள்ளன.



ஒரு தபால் நிலையம், 3 உப தபால் நிலையங்கள், இரு மாடிகளைக் கொண்ட சந்தைக் கட்டிடங்கள், பாரியளவிலான வர்த்தக நிலையங்கள், பொது நூலகம், தொழில் பயிற்சி நிலையங்கள், ஒரு மாவட்ட வைத்தியசாலை, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் என்பனவற்றையும் இவ்வூர் கொண்டுள்ளது.

சன சமூக அமைப்புகள், விளை யாட்டுக் கழகங்கள், தன்னார்வ அமைப்புக்கள், இலக்கிய அமைப்புக்கள் போன்றவைகளும் உள்ளன. மற்றும் விளையாட்டு மைதானம், மீன்பிடித் துறைமுகம் என்பன அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வூரின் மொத்த நிலப்பரப்பளவு 7சதுர கிலோ மீற்றராகும்.


    இக் கிராமத்தில்தான் இலங்கையின் முதலாவது பயிற்றப்பட்ட முஸ்லிம் பெண் ஆசிரியை பாத்துமுத்து ஹலால்தீன், இலங்கையின் முதலாவது முஸ்லிம் பெண் பல்கலைக் கழக வேந்தர் தேசபந்து ஜெஸிமா இஸ்மாயில், இலங்கையின் முதலாவது முஸ்லிம் பெண் மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.எல்.என். மைமூனா  ஆகியோர் பிறந்து முஸ்லிம் சமுகத்திற்கு புகழ் தேடித் தந்திருக்கிறார்கள்.
    இது மாத்திரமல்லாமல் சாய்ந்தமருது கிராமம் சரித்திர முக்கியத்துவம் பெற்றுள்ள ஒரு கிராமம் எனவும் அறிவிக்கப்படுகின்றது.
    கடல் வழியாக வந்த ஒல்லாந்தக் குழுவினர் இலங்க்கையில் முதன் முதலாகக் காலடி வைத்த இடம் சாய்ந்தமருது எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது 1602 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 02 ஆம் திகதி எனவும் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், ஒல்லாந்தரது கப்பலொன்றின் தளபதியான ஜொரிஸ் வான் ஸ்பில் பேர்கன் என்பவரே சாய்ந்தமருதில் தரையிறங்கி, பின்னர் சம்மாந்துறையில் தங்கியிருந்து அங்கிருந்து கண்டிக்குச் சென்று முதலாம் விமல தர்ம சூரியன் மன்னனைச் சந்தித்தான்.இப்பயணத்தின் போது மட்டக்களப்பு பிரதேசத்தில் தான் சந்தித்த சோனகர் (Mooren)  மற்றும் துலுக்கர் (Tureken) பற்றியும் தனது நாட் குறிப்பேட்டில் விபரித்துள்ளான். (Journal of Spilbergen 1602- Translation by K.D. Paranavitane-1997 Page 23 ) எனவும் ஆதாரம் காட்டப்படுகின்றது.


சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் ஆரம்பகால வரலாறு 

முஸ்லிம்கள் ஓரிடத்தில் குடியேறி அங்கு வாழத் தொடங்கியதும் அவர்கள் வசிப்பதற்குரிய வீடுகள் அமைக்கும் போது பள்ளிவாசல் ஒன்றையும் அமைத்துக் கொள்வது இஸ்லாமிய வரலாறாகும்.
சாய்ந்தமருதில் முஸ்லிம்கள் வாழத் தொடங்கிய காலத்தில் ஊரின் தென் பகுதி காடாக இருந்துள்ளது. அக்காட்டுப்பகுதியில் மரங்களை வெட்டியெடுத்து இப்பொழுது பெரிய பள்ளிவாசல் அமைந்திருக்கும் இடத்தில் மரங்களையும் இலுக்குகளையும் கிடுகுகளையும் கொண்டு சிறிய பள்ளிவாசலொன்றை தற்காலிகமாக அமைத்துக் கொண்டார்கள். இது முன்னர் முகைதீன் பள்ளிவாசல் என அழைக்கப்பட்டது.
12ஆம் நூற்றாண்டில் தஃவாப் பணிக்காக பக்தாத் நகரில் இருந்து முகைதீன் அப்துல் காதர் ஜெய்லானி அவர்களின் சிஷ்யர் இலங்கை வந்ததாகவும் அவர் அக்கால சிங்கள அரசனின் (கஜபாகு) புதல்வனது தீராத நோயைக் குணப்படுத்தியதினால் அவருக்கு அந்த அரசன் கரைவாகுவை பரிசாகக் கொடுத்து அங்கு காணப்பட்ட பள்ளிவாசல்களை முகைதீன் பள்ளிவாசல் என அழைக்கப்பட வேண்டும் என கட்டளையிட்டதாகவும் முன்னோர்கள் கூறுகின்றனர்.
இப்பள்ளிவாசல் 1691ஆம் ஆண்டளவில் மட்டக்களப்புக் கச்சேரியில் அடை அறவீட்டுக் கணக்கராக கடமைபுரிந்த சதக்குலெவ்வை என்பவரினால் பரிபாலிக்கப்பட்டு வந்துள்ளது. 1870ம் ஆண்டில் பிரதம மரைக்காயர் மீராலெவ்வைப் போடி வன்னியனார் காலத்தில் சுமார் 1000 பேர் தொழக்கூடிய இடவசதியுள்ள பள்ளிவாசலாக மாற்றம் பெற்றது. 1961ம் ஆண்டில் பிரதம மரைக்காயர் ஜனாப் மு.அ. அப்துல் கபூர் காலத்தில் பள்ளிவாசலின் முன்பக்கமாக மண்டபமொன்று அமைத்து முகப்பு வேலைகளும் செய்யப்பட்டு இப்பள்ளிவாசல் புதுப்பொலிவுடன் விழங்கியது. தற்போதைய பள்ளிவாசல் கட்டடம் சுமார் 5000 பேர் தொழக்கூடிய இடவசதி கொண்ட நவீன இருமாடிக் கட்டடமாக கட்டுவதற்கு 1985ம் ஆண்டு பிரதம மரைக்காயர் அல்ஹாஜ் M.I.M. மீராலெவ்வை காலத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டு 2003ம் ஆண்டு பூர்த்தி செய்யப்பட்டது.

மரைக்கார் சபை நிர்வாகம்:

சாய்ந்தமருது மரைக்காயர் சபையின் 62 அங்கத்தவர்களும் இவ்வூரில் பிறந்து நிரந்தரமாக வாழும் குடி மரைக்காயர்மார்களாகும்.  இவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வக்பு சபைச் சட்டத்தின் கீழ் நம்பிக்கையாளர்களைத் தெரிவு செய்வார்கள். நம்பிக்கையாளர்களாக நியமிக்கப்பட்டவர்களிலிருந்து உத்தியோகத்தர்கள் தெரிவு நடைபெறும். மரைக்காயர் நியமனத்தின் போதும் நம்பிக்கையாளர் தெரிவின் போதும் குடி ரீதியாகவும், மஹல்லா ரீதியாகவும் தகுதியானவர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படும். முன்னர் முக்கிய பிரமுகர்கள், உத்தியோகத்தர்கள் என்ற வகையிலும் விசேட மரைக்காயர்மார்கள் தேவைக்கேற்ப நியமிக்கும் வழக்கம் இருந்துள்ளது. சகல விடயங்களிலும் மரைக்காயர் சபையும், நம்பிக்கையாளர் சபையும் இணைந்தே செயற்படுகின்றன.

ஜும்ஆப் பள்ளிவாசலின் புதிய யாப்பு 1999இல் அறிமுகப்படுத்தப்பட்டு, 22-01-2006ல் திருத்தப்பட்டது. இப்புதிய யாப்பின்படி மரைக்காயர் சபை ஷஷசாய்ந்தமருது – மாளிகைக்காடு இஸ்லாமிய சமய, சமூக, கலாசார பரிபாலன சபை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இச்சபை, சாய்ந்தமருது, மாளிகைக்காடுப் பிரதேசங்களில் உள்ள ஜும்ஆப் பள்ளிவாசல்களையும், ஏனைய பள்ளிவாசல்கள், குர்ஆன் மத்ரஸாக்கள், ஸியாரம்கள், மையவாடிகள் மற்றும் வக்பு செய்யப்பட்ட சொத்துக்கள், நிறுவனங்கள் ஆகியவற்றையும் நிர்வகித்து வருகின்றது. அத்துடன் சாய்ந்தமருதிலும், மாளிகைக்காடு, காரைதீவு பகுதிகளிலும் இஸ்லாமிய சமய, கலாசார, சமூகநல நடவடிக்கைகளைப் பரிபாலனம் செய்து வருகின்றது. முன்னர் மாவடிப்பள்ளிக்கிராமத்தின் சமய கலாசார நடவடிக்கைகள் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் மரைக்காயர் சபையினாலேயே மேற்கொள்ளப்பட்டன.
மரைக்காயர் சபை செயற்பாடுகள்:
சமூக இணக்க செயற்பாடுகள்/ நீதி/ ஒழுங்கு ஆகியவை
கோடு, கச்சேரி, கிராம சபை இல்லாத காலத்தில் ஊரவர்களுக்கிடையில் ஏற்படும் பிணக்குகள் – சச்சரவுகளைக் குடும்பத் தலைவர்கள் ஓரிடத்தில் கூடி விசாரணை செய்து தீர்ப்பு வழங்கியுள்ளனர். இவ்வாறான பொது இடமாகப் பள்ளிவாயல் திகழ்ந்துள்ளது.
திருமணப்பிணக்கு, கொடுக்கல் வாங்கல்களில் மோசடி, காணிப் பிரச்சினை, மார்க்கத்திற்கு மாறான செயல்கள் என்பனவற்றை விசாரணை செய்து தீர்ப்பளித்து சுமூகமான வாழ்க்கைக்கு பள்ளிவாயல் உதவியது.
மேற்கூறிய விடயங்கள் விசாரணை செய்யும் அதிகாரம் குடும்பத்தலைவர்களிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தன. அவை பின்னர் மரைக்காயர் சபையாக மாறியுள்ளது.
ஊரில் திருமணப் பிணக்குகள் ஏற்பட்டால் மரைக்கார் சபையிடம் முறைப்பாடு கொண்டு செல்லப்படும். இது ஒரு வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையின் பின்பே நடைபெற்றது. இதனைத் தீர விசாரணை செய்வதற்காக மரைக்கார் சபை கூடும்.
மரைக்கார் சபையின் தீர்வுகளை ஏற்காவிடின் உரியர்களுக்கு சில கட்டுப்பாடுகளை வைப்பர். அதனால் ஊர் மக்கள் மரைக்கார்மார்களின் மதியுரைகளைக் கேட்டு நம்பி நடந்தனர்.

பிரதம மரைக்காயர்மார்கள்

  1. சதகுலெவ்வை (அடை அறவீட்டுக் கணக்கர் -மட்டக்களப்பு கச்சேரி)
  2. ச.லெ. நெய்ந்தகண்டு
  3. நெ.க. மீரா உசன்லெவ்வை
  4. மீ.உ. தம்பி நெய்ந்தை காரியப்பர் (1817ல் மட்டக்களப்பு தென்பகுதி இஸ்லாமியர்களின் தலைவர் (காரியப்பர்)
  5. த.நெ. மீரா உசையின் காரியப்பர் (பொலிஸ் தலைமை அதிகாரி)
  6. த.நெ. மீராலெவ்வைப் போடி வன்னியனார் (மட்டக்களப்பு மாவட்ட முதல் முஸ்லிம் வன்னிமை)
  7. த.நெ. முகம்மது காசிம்லெவ்வை ஹாஜியார் (பொலிஸ் விதானை)
  8. மீ.உ.கா முஸ்தபாலெவ்வை போடியார் (பொ.த. பதிவாளர்,D.O)
  9. மீராலெவ்வை போடி வன்னிமை முகம்மது யூசுப்லெவ்வை போடியார் (தோம்புதோர்)
  10. மீராலெவ்வை போடி வன்னிமை முகம்மது மீராசாஹிபு லெவ்வை போடி மரைக்கார்
  11. மு.கா. முகம்மது முகைதீன் காரியப்பர் (பொ.த)
  12. மு.அ. அப்துல் ஹமீட்
  13. மு.யூ. ஆதம்லெவ்வைப் போடி (பதிவாளர்) (1945)
  14. மு.மீ. முகம்மதுக் காசீம் (குழந்தைப் போடியார்)
  15. மு.யூ. ஆதம்லெவ்வை (வ.வி)
  16. மு.அ. அப்துல் கபூர் மரைக்கார்
  17. எம் வை.இஸ்மாலெவ்வை விதானை
  18. எம் எம் ஆதம்பாவா (கி.ச. தலைவர்)
  19. எம் சி. அஹமது (மு.பா.உ)
  20. அல்-ஹாஜ்எம் ஐ எம் மீராலெவ்வை (ஓ.பெ.ஆங்கிலக்கல்வி அதிகாரி) (1983-2000)
  21. அல்-ஹாஜ் M.C.A ஹமீட் (ஓ.பெ. அதிபர்) (2000-2001)
  22. ஜனாப் I.A. முகைதீன் J.P (முன்னாள் ஆளணி முகாமையாளர்) (2002-2005, 2008)
  23. அல்-ஹாஜ் Dr.M.I.M. ஜமீல் (2005-2007)
  24. அல்-ஹாஜ் மௌலவி A.A.றஸ்ஸாக் (ஓ.பெ. மௌலவி ஆசிரியர், உலமாசபைத் தலைவர் (2007-2008)
  25. அல்-ஹாஜ் M.C.A.அஸீஸ் (சட்டத்தரணி) (2001-2002, 2009-2012)
  26. அல்-ஹாஜ் வை.எம். ஹனீபா (ஓ.பெ. அதிபர்) (2012-)

7 comments:

  1. Salam Jaleel,

    Altogether 22 mosques, 15 is old info.

    Thanks
    Saja

    ReplyDelete
  2. தனி முஸ்லிம்கள் வாழும் பிரதேசத்தில்நாம் நமது வாழ்வில் இஸ்லாமிய விழுமியங்களை பேணி நடப்பதன் முதல் நடவடிக்கையாக எதிர்நோக்கும் ரமலான் மாத நோன்பு காலத்திலேனும் பர்ளு தொழுகைகளை ஜாமத் ஆக தொழுவதற்கு ஏற்ற வகையில் வர்த்தகர்கள் கடைகளை பூட்டி ஊழியர்களுக்கும் உதவி செய்வார்களா? ரமலான் மாதம் முடிந்த பின்னரும் இச்செயல்ப்பாட்டை தொடர்வதக்கும் வல்ல நாயன் அருள் புரியவேண்டும், முன்மாதிரி சமுகத்தை உருவாக்குவதற்கான அடித்தளத்தை 100 % முஸ்லிம் வாழும் இவ்வூரிலிருந்து தொடங்கினால் என்ன? பள்ளி நிர்வாகிகளும்,உலமாக்களும் ஊர் மக்களும் கூடிய அக்கறை எடுக்கவேண்டும், வல்ல நாயன் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக, சாய்ந்தமருது இணைய தளமும் தனது உயர் பங்களிப்பை வழங்கவேண்டும்.

    ReplyDelete
  3. தனி முஸ்லிம்கள் வாழும் பிரதேசத்தில்நாம் நமது வாழ்வில் இஸ்லாமிய விழுமியங்களை பேணி நடப்பதன் முதல் நடவடிக்கையாக எதிர்நோக்கும் ரமலான் மாத நோன்பு காலத்திலேனும் பர்ளு தொழுகைகளை ஜாமத் ஆக தொழுவதற்கு ஏற்ற வகையில் வர்த்தகர்கள் கடைகளை பூட்டி ஊழியர்களுக்கும் உதவி செய்வார்களா? ரமலான் மாதம் முடிந்த பின்னரும் இச்செயல்ப்பாட்டை தொடர்வதக்கும் வல்ல நாயன் அருள் புரியவேண்டும், முன்மாதிரி சமுகத்தை உருவாக்குவதற்கான அடித்தளத்தை 100 % முஸ்லிம் வாழும் இவ்வூரிலிருந்து தொடங்கினால் என்ன? பள்ளி நிர்வாகிகளும்,உலமாக்களும் ஊர் மக்களும் கூடிய அக்கறை எடுக்கவேண்டும், வல்ல நாயன் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக, சாய்ந்தமருது இணைய தளமும் தனது உயர் பங்களிப்பை வழங்கவேண்டும்.

    ReplyDelete
  4. தனி முஸ்லிம்கள் வாழும் பிரதேசத்தில்நாம் நமது வாழ்வில் இஸ்லாமிய விழுமியங்களை பேணி நடப்பதன் முதல் நடவடிக்கையாக எதிர்நோக்கும் ரமலான் மாத நோன்பு காலத்திலேனும் பர்ளு தொழுகைகளை ஜாமத் ஆக தொழுவதற்கு ஏற்ற வகையில் வர்த்தகர்கள் கடைகளை பூட்டி ஊழியர்களுக்கும் உதவி செய்வார்களா? ரமலான் மாதம் முடிந்த பின்னரும் இச்செயல்ப்பாட்டை தொடர்வதக்கும் வல்ல நாயன் அருள் புரியவேண்டும், முன்மாதிரி சமுகத்தை உருவாக்குவதற்கான அடித்தளத்தை 100 % முஸ்லிம் வாழும் இவ்வூரிலிருந்து தொடங்கினால் என்ன? பள்ளி நிர்வாகிகளும்,உலமாக்களும் ஊர் மக்களும் கூடிய அக்கறை எடுக்கவேண்டும், வல்ல நாயன் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக, சாய்ந்தமருது இணைய தளமும் தனது உயர் பங்களிப்பை வழங்கவேண்டும்.

    ReplyDelete