Sunday, June 30

கல்முனை சாஹிறா கல்லூரியில் வெற்றிகரமாக இடம்பெற்ற ZESDO அமைப்பின் இரத்ததான நிகழ்வு


 செஸ்டோ அமைப்பின் ஏற்பாட்டில் 'உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்' எனும் தொனிப்பொருளில் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையினால் இரத்ததான நிகழ்வு இன்று கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையில் இன்று (30-06-2013) நடைபெற்றது. ZESDO அமைப்பின் உறுப்பினர்களான அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பணி புரியும் MCMC. ரிழா (Nurse), SHM. ஜர்மின் (MLT) ஆகியோர் இதை ஏற்பாடு செய்திருந்தனர்.
செஸ்டோ அமைப்பின் தலைவர் எஸ்.எச்.எம்.அனஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்தியர்களான ரீ.எம்.எஸ். வெலிகடராச்சி, என்.எம்.மெடகொடகெட்டி மற்றும் அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை இரத்த வங்கி பொறுப்பு தாதி உத்தியோகத்தர் எஸ்.எச்.ஹனீம் ஆகியோரின்  வழி காட்டலில் இந்த இரத்த தான நிகழ்வு இடம்பெற்றது.

நாம் அரசை நம்பியிருக்கவில்லை சொந்த நிதியிலேயே இயங்குகிறோம் : கல்முனை மேயர்


அரச நிதி எமக்கு முற்றாக கிடைப்பதில்லை என்று கூறமுடியாது ஆனாலும் அதை நம்பி எமது மாநகர சபை இயங்கவில்லை, எமது வருமானத்தை வைத்தே நாம் எமது நகரத் தேவைகளை நிறைவேற்றுகிறோம் என்று தெரிவித்துள்ளார் கல்முனை மேயர் ஷிராஸ் மீராசாஹிப்.
நாம் கட்சித் தலைமைக்கு முழுமையாகக் கட்டுப்பட்டவர்கள், எல்லா பிரச்சனைகளையும் கட்சித்தலைமை தீர்க்க வேண்டிய அவசியமும் இல்லை என கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையில் கூறிய அவர், எமக்கிருக்கும் நெருக்குதல்களையும், பழிவாங்கல்களையும் மீறி நகரசபைக்குக் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டே நாம் சிறப்பாக இயங்குகிறோம் எனத் தெரிவித்தார்.
13ம் திருத்தச்சட்டத்தினை நிராகரிப்பது எமக்கிருக்கும் உரிமைகளை பறித்தெடுப்பது என்றும் சுட்டிக்காட்டிய அவர் முஸ்லிம் காங்கிரஸ் இலங்கை முஸ்லிம்களின் தேவைகள் அறிந்து இயங்கும் கட்சி எனவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினம் இடம்பெற்ற வாராந்த முஸ்லிம்குரல் ஒலிபரப்பின் மக்கள் களம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

Saturday, June 29

நிந்தவூர் பிரதேச செயலகத்தின் புதிய கட்டிடத் திறப்புவிழா




 
 
 
 
 
 
 
 
 
 
 
நிந்தவூர் பிரதேச செயலகத்தின் புதிய கட்டிடத்திறப்புவிழா இன்று 29 06 2013 ஆம் திகதி காலை 10 மணிக்கு பிரதேச செயலாளர் ஹாஜியானி திருமதி ரிபா ஜலீல் அவர்களது தலைமையில்  நடைபெற்றது .
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பொது நிருவாக உள்நாட்டலுவல்கள்  அமைச்சர்  WDJ செனெவிரெட்னெ அவர்கள் கலந்து  கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட முஸ்லீம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் பைசால் காசிம் ,திருமதி சிரியாணி,மாகாண சபை அமைச்சர் உதுமாலெப்பை,கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திசனயாக ,மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன்,அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் L D  அல்விஸ்  மற்றும் அம்பாறை மாவட்ட உதவியாரசாங்க அதிபர்களும்,நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் ,பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிந்தவூர் பிரதேசமானது கிட்டத்தட்ட 31000 மக்கள் தொகையையும்,25 கிராம சேவகர்  பிரிவுகளையும் கொண்ட ஒரு புராதன கிராமமாகும் இங்கு நெற்செய்கையும்,மீன்பிடியுமே பிரதான தொழில்களாக காணப்படுகின்றன .நவீன முறையில் வடிமக்கப்பட்டு சுமார் 45 மில்லியன் ரூபா செலவில் நிருமாநிக்கப்பட்டுள்ள புதிய கட்டடத்தொகுதிபயன்பாட்டுக்கு வருவதிலிருந்து  இட நெருக்கடியால் இதுவரை காலமும் சேவை வழங்குவதில்  ஏற்பட்ட இடர்பாடுகள் நீக்காபட்டிருப்பதால் மக்களுக்கு சிறந்த சேவை  எதிர்காலத்தில் கிடைக்கப்பெறும் என்று இந்நிறுவனத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரியொருவர்  தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரியில் புதிய பயிலுனர் அனுமதி


aa
2013-2015 கல்வியாண்டுக்கான புதிய பயிலுனர் அனுமதி எதிர் வரும் 03.07.2013 ந் திகதி புதன் கிழமை காலை 09.00 மணிக்கு அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரியில் நடைபெறுமென பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
நேர்முகப் பரீட்சைகளின் முடிவுகளின் படி 190 பயிலுனர்கள் பின்வரும் 07 கற்கை நெறிகளுக்குத் தெரிவாகியுள்ளனர்.
1. விஞ்ஞானம் – 30
2. கணிதம் – 30
3. வர்த்தகமும்கணக்கியலும்- 20
4. ஆரம்ப நெறி – 50
5. இஸ்லாம் – 15
6. தமிழ் – 30
7. விசேட கல்வி -15
மேற்படி பயிலுனர்களுக்கான அனுமதிக் கடிதங்கள் தபாலில் இடப்பட்டுள்ளன. கடிதம் கிடைத்தவர்கள் மாத்திரம் ஜுலை 03 ம் திகதி கல்லூரிக்கு உரிய ஆவணங்களுடன் வருகை தந்து அன்றைய தினம் தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு பீடாதிபதி வேண்டிக்கொள்கின்றார்.

புதிய பயிலுனர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என பீடாதிபதி மேலும் தெரிவித்தார்.

பல பெண்களை ஏமாற்றிய மன்மதன் கல்முனையில் சிக்கினார் !

20130629-072507.jpg

பல பெண்களை கையடக்கத்தொலைபேசி மூலம் ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை பறித்து வந்த நுவரெலியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கல்முனை பஸ் தரிப்பு நிலையத்தில் வைத்து 32 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதவான் ஏ.கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
குறித்த சந்தேகநபர் கையடக்கத் தொலைபேசி ஊடாக பெண்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி காதலித்து திருமணம் செய்வதாக நடித்து பணம், நகை என்பவற்றை அபகரித்து வந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

சாய்ந்தமருது வைத்தியசாலை சத்திர சிகிச்சை உபகரணங்கள் கபளீகரம்; உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் அமைச்சர்!


mansoorசாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் சத்திர சிகிச்கைப் பிரிவு உபகரணங்களை கபளீகரமாக வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டமை குறித்து முறைப்படி முறையிட்டால் அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.
ஒளிரும் கல்முனை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு கட்டிடத்திற்கு அடிக்கல் நடும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சாய்ந்தமருதில் இடம்பெற்ற ஆசாத் சாலியின் மக்களுடனான சந்திப்பு


தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆசாத் சாலி அவர்களின்  மக்களுடனான சந்திப்பு இன்று(28) வெள்ளிக்கிழமை மாலை சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள சீ ப்ரீஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.


தேசிய ஐக்கிய முன்னனியின் அம்பாறை மாவட்ட கிளை  ஏற்பாடு செய்திருந்த இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன், கலாநிதி. விக்ரமபாகு கருணாரத்ன

(தலைவர் - நவ சம சமாஜ கட்சி),  சரத் மனோமேந்திரா (தலைவர் நவ சிஹல உறுமய கட்சி), ஹேமசிறி ஹப்பு ஆராச்சி (தலைவர் - எக்சத் ஜனதா கட்சி) ஆகியோருடன் கல்முனை மாநகரசபை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Friday, June 28

தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று காலை பல்கலைக்கழக வாளகத்தில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
பல்கலைக்கழக மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவருக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டமையை கண்டித்தும் குறித்த மாணவனை மீண்டும் கற்றல் செயற்பாடுகளுக்கு சேர்த்துக்கொள்ளுமாறு வலியுறுத்தியும் மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
பகிடி வதை சம்பவம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு குறித்த மாணவனுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து முன்னோக்கிச் செல்வதற்கு முயற்சித்தபோது பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலை பொலிஸார் மறித்ததாக எமது பிராந்திய செய்தியாளர் கூறியுள்ளார்.
இதனால் பல்கலைக்கழக ஊழியர்களும் விரிவுரையாளர்களும் நுழைவாயிலுக்கு வெளியே நீண்டநேரம் காத்திருக்க நேரிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்களின் இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் எஸ்.எம்.எம்.இஸ்மாயிலுடன் தொடர்பினை ஏற்படுத்துவதற்கு முயற்சித்தபோதிலும் அது பலனளிக்கவில்லை.

அடிக்கல் விழாக்களை நடத்தி காலம் கடத்தும் கல்முனை அரசியல்வாதிகள்!


கல்முனைப் பிரதேசத்தில் கடந்த பல வருடங்களாகக் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எந்தவொரு பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தையும் தற்போதய அரசியல்வாதிகள் எவரும் செய்வதாக இல்லை என இப்பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அபிவிருத்தி என்ற  பேரில் அடிக்கல் நடும் விழாக்கள், அங்குரார்ப்பன நிகழ்வுகள் என்பன மிகக் கோலாகலமாக ஏற்பாடுகள் செய்யப்படுகின்றனவே தவிர திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படுவதாக இல்லை எனவும் கூறுகின்றனர்.
அடிக்கல் நடும் விழாக்கள், அங்குரார்ப்பன வைபவங்கள் என்பனவற்றிற்கு கல்முனையிலிருந்து சாய்ந்தமருது வரை மற்றும் மருதமுனை பிரதான பாதைகள் பல்லாயிரக்கணக்கான ரூபா செலவிடப்பட்டு பச்சை நிறப் பொலித்தீன்களாலும்  பல நிற பல்புகளாலும் அலங்கரிக்கப்படுகின்றன.
பொது மேடை ஒன்று போடப்பட்டு கட்சியிலுள்ள முக்கியஸ்த்தர்கள் தொடக்கம் தலைவர் வரை நள்ளிரவையும் தாண்டி தமது பக்க நியாயங்களையும் தாங்கள் பொறுமை காத்திருப்பதையும் நாம் சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறோம் சரியான நேரத்தில் சரியான முடிவையும் எடுப்போம் எனவும் கூறுகின்றனர்.

சாய்ந்தமருது பிராந்திய சிவில் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்


(எம்.வை.அமீர்) 
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராம சேகவர் பிரிவுகளில் இருந்து பிரிவுக்கு ஐவர் வீதம் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை ஒன்றிணைத்து விழிப்பூட்டும் நிகழ்வு ஒன்று 27-06-2013 மாலை 7 மணியளவில் சாய்ந்தமருது ‘ரியாளுள் ஜன்னா’ வித்தியாலத்தில் அந்தப்பாடசாலையின் அதிபர் தலைமயில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை போலீஸ் நிலைய பிரதம போலீஸ் பொறுப்பதிகாரி AWA கfப்பாரும் விசேட அதிதியாக கல்முனை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி ALA வாஹீத் மற்றும் கல்முனை முன்னாள் பிரதி முதல்வர் AA வசீர் மற்றும் உலமாக்களும் போலீசாரும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இங்கு சிறப்புரையாற்றிய பிரதம போலீஸ் பொறுப்பதிகாரி,
சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் கடமைகள் தொடர்பிலும் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் சம்மந்தமாகவும் விரிவான உரை ஒன்றை நிகழ்த்தினார்.
தொடர்ந்து உரையாற்றும் போது சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மக்களுக்கும் போலீசாருக்கும் இடையில் இணைப்பு பாலமாக திகழ வேண்டும் என்றும் கல்முனை போலீஸ் நிலைய எல்லைக்குள் இடம்பெறும் சில சீர் கேடுகளையும் இப்படியான சீர் கேடுகள் பிராந்திய மக்களை தவறான பாதைக்கு இட்டுச்செல்லும் என்றும் இங்கு இடம்பெறும் தறுகளை திருத்திக் கொள்வதற்காக சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் முஸ்லீம்கள் செறிந்து வாழும் இது போன்ற பிரதேசத்தில் இடம்பெறும் சீர் கேடுகள் மாற்றுச்சமுகத்தின் மத்தியில் மிகுந்து பேசப்படும் என்றும் உதாரணத்துக்கு தலைக்கவசம் இல்லாது வாகனம் செலுத்த சிலர் கோருவதாகவும் இலங்கையில் சட்டமாக்கப்பட்டுள்ள விடையத்தை தன்னிடம் அனுமதி கோரி இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ள தற்கொலைக்கு தன்னிடம் அனுமதி கோருவதாகவும் தெரிவித்தார்.

கல்முனை மேயர் லண்டன் விஜயம் - இலண்டன் ரெட்பிரிட்ஜ் நகர மேயருடன் சந்திப்பு


கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் பிரத்தியேக விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமை ( 23.06.2013) இலண்டன் பயணமானார். இதன் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இலண்டன் கிளையின் தலைவர் எம்.எஸ்.ஹலீமின் ஏற்பாட்டில் நேற்று இலண்டன் ரெட்பிரிட்ஜ் நகரத்தின் மேயர் பெலிசிட்டி பேங் மற்றும் பிரதி முதல்வர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.
இக்கலந்துரையாடலின் போது கல்முனை மாநகர அபிவிருத்தி, உட்கட்டுமான வசதிகள், சுனாமியின் பின்னரான கல்முனை, திண்மக்கழிவு அகற்றல் மற்றும் சுற்றுச்சூழல் என்பன தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
அத்தோடு ரெட்பிரிட்ஜ் நகர சபையின் நடவடிக்கைகள், பயன்படுத்துகின்ற தொழில்நுட்ப யுக்திகள், மக்கள் தொடர்பாடல் முறை, நிர்வாக முகாமைத்துவ முறை, முறைப்பாட்டு முகாமைத்துவ முறை மற்றும் மாநகர சபைக்கான நிதியீட்டல் முறைமைகள் தொடர்பாக ரெட்பிரிட்ஜ் நகர முதல்வரினால் விளக்கமளிக்கப்பட்டது. இவை எதிர்கால கல்முனை மாநகர சபை நடவடிக்கைக்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுவதாக கல்முனை மாநகர முதல்வர் தெரிவித்தார். அத்துடன் ரெட்பிரிட்ஜ் மாநகர முதல்வர் கல்முனை மாநகர சபைக்கு வருகை தருவதற்கான அழைப்பினையும் சிராஸ் மீராசாஹிப் விடுத்தார்.
இதன் போது கல்முனை மாநகரசபையின் தேவைகள் அடங்கிய மகஜர் ஒன்று ரெட்பிரிட்ஜ் நகர முதல்வரிடம் கையளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
இச்சந்திப்பின்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இலண்டன் கிளையின் உறுப்பினர்களான சியாத் ஏ. கபூர், எம்.ஜெசீல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Thursday, June 27

சாய்ந்தமருதில் "பல்லின சமூகத்தில் முஸ்லிம்களின் வாழ்வொழுங்கு" கலந்துரையாடல்


"பல்லின சமூகத்தில் முஸ்லிம்களின் வாழ்வொழுங்கு"  என்ற தலைப்பில் சிறப்புரையும் கலந்துரையாடலும் எதிர்வரும்  29-06-2013 சனிக்கிழமை "சமூக  ஆய்விற்கான நிலையம் சாய்ந்தமருது " இனால் சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதில் அஷ் ஷேய்க் எம். ஏ.எம். மன்சூர் (நழீமி) (பணிப்பாளர், மிஷ்காத், இஸ்லாமிய ஆய்வு நிறுவனம்) சிறப்புரை ஆற்ற உள்ளார்.

முஸ்லிம் சமூகத்தின் சமகால நிலைமைகளையும், சவால்களையும் கருத்திற்கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கலந்துரையாடலில் எமது பிரதேசத்தின் பல் துறை சார் நிபுணத்துவம் கொண்டவர்களும் புத்தி ஜீவிகளும் பங்கேற்கவுள்ளனர். எனவே இதில் அனைவரையும் பங்கேற்குமாறு "சமூக  ஆய்விற்கான நிலையம், சாய்ந்தமருது " வேண்டிக்கொள்கிறது. 



இடம்:பரடைஸ் வரவேற்பு மண்டபம், சாய்ந்தமருது

காலம்: 29-06-2013 (சனிக்கிழமை) பி.ப. 4.00 மணிக்கு

சிறப்புரை: அஷ் ஷேய்க் எம். ஏ.எம். மன்சூர் (நழீமி) (பணிப்பாளர், மிஷ்காத்,      இஸ்லாமிய ஆய்வு நிறுவனம்)

ஏற்பாடு: சமூக  ஆய்விற்கான நிலையம், சாய்ந்தமருது



கல்முனை சாஹிறாவில் ZESDO அமைப்பினால் மாபெரும் இரத்த தான நிகழ்வு ஏற்பாடு



















எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (30-06-2013) கல்முனை சாஹிறா கல்லூரியில் Zahirians' Education and Social Development Organization (ZESDO) அமைப்பினால் மாபெரும் பொது இரத்த தான நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது காலை எட்டு மணி முதல் மாலை நான்கு மணி வரை இடம்பெறும்.

இந்த இரத்த தான நிகழ்வில் கலந்து கொண்டு இரத்த தானம் செய்ய விரும்புவோர், Mr. S.H.M. Jarmin ( 0713217194, 0772995986) , Mr. M.C.M.C. Rila (0779944171) ஆகியோரை தொடர்பு கொள்ளுமாறும் முப்பதாம் திகதி காலை கல்முனை சாஹிறா கல்லூரிக்கு சமூகமளிக்குமாறும் வேண்டப்படுகிறார்கள்.

அண்மைக்காலமாக ZESDO அமைப்பு கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேசங்களில் பல்வேறுபட்ட கல்வி, சமூகம், அபிவிருத்தி சார்ந்த விடையங்களில் சிறந்த பங்களிப்பை ஆற்றி வருவது குறிப்பிட தக்கது.


கல்முனை சிவில் பாதுகாப்பு குழுக்கூட்டம் (படங்கள்)


 
 
 
 
 
 
 
 
 
 
கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனைக்குடி பிரதேசங்களின் கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள 14 பிரிவுகளை அடக்கிய சிவில் பாதுகாப்புக்குழுக்கூட்டம் 26-06-2013 கமு அல்- பஹ்றியா மகாவித்தியாலயத்தில் கல்முனை பொலிஸ்    நிலைய பொறுப்பதிகாரி ஏ. டப்ளியூ. ஏ. கபார் தலைமையில் நடைபெற்றது.
இந்த சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் கல்முனை பொலிஸ் நிலைய சிவில் பாதுகாப்பு குழுக்களுக்கான பொறுப்பதிகாரி வசந்த ஐ.பி., கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எல்.ஏ.வாஹிட், பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். றஸாக் மற்றும் சிவில் பாதுகாப்புக் குழு அங்கத்தவர்கள் கிராம சேவகர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். இங்கு கிராம சேவகர் சார்பாக கிராம சேவகர் ஏ.ஏ. அலாவுதீன் இக்குழு உறுப்பினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக எடுத்துக் கூறினார்.

Wednesday, June 26

கல்முனை பிரதேச வர்த்தக பிரமுகர்களுக்கு வரி தொடர்பாக விளக்கமளிக்கும் செயலமர்வு


 
 
 
 
 
 
 
 
 உள்நாட்டு இறைவரி திணைக்கள  தகவல் கிளை கல்முனை வர்த்தகர் சம்மேளனத்தின் அனுசரணையில் ஒழுங்கு செய்திருந்த கல்முனை பிரதேச வர்த்தக பிரமுகர்களுக்கு வருமான வரி , நாட்டை கட்டியெழுப்புதல் வரி மற்றும் பெறுமதிசேர் வரி சம்பந்தமாக தெளிவுபடுத்தும் செயலமர்வொன்று இன்று மாளிகைக்காடு பிஸ்மில்லாஹ் ரெஸ்டோரன்டில் இடம்பெற்றது.

உள்நாட்டு இறைவரி திணைக்கள தகவல் பிரிவு பிரதி ஆணையாளர் ஜீ.எல்.ஜீ.விமலரெட்ன தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில்

உள்நாட்டு இறைவரி திணைக்கள பிரதி ஆணையாளர் எம்.ஐ.எம்.முஸம்மில் , வரிமதிப்பீட்டாளர் எம்.வை.எம்.நயீம் ஆகியோர் வரி தொடர்பான விளக்கங்களை வர்த்தக பிரமுகர்களுக்கு வழங்கினார்கள்.

கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த அதிகளவிலான வர்த்தக பிரமுகர்கள் இச் செயலமர்வில் கலந்து கொண்டனர்.






Tuesday, June 25

கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின் மாணவர்தின நிகழ்வு (படங்கள்)


கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின் க.பொ.த உ.த- 2013 மாணவர்தின நிகழ்வு இன்று (25) பாடசாலையின் எம்.எஸ். காரியப்பர் கூட்ட மண்டபத்தில்  வர்த்தககலைப்பிரிவு பகுதித்தலைவர் மௌலவி யு.எல்.எஸ். ஹமீட் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.
ஜெமீல் அவர்களும், கௌரவ அதிதியாக கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் யு.எல்.எம். ஹாஸீம் மற்றும் பாடசாலை அதிபர் ஏ. ஆதம்பாவா, பாடசாலையின் பிரதி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது மாணவர்களின் மலர் வெளியீடு இடம்பெற்றதோடு, நினைவுப்பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புனித நோன்பு காரணமாக ஒலுவில் துறைமுக திறப்புவிழா ஓகஸ்ட் மாதத்துக்கு மாற்றம் - பைசால் காசிம்

 
 
 
 
 
 
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், ஒலுவில் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள துறைமுகங்களை திறக்கவேண்டும் என ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோளை அடுத்து, எதிர்வரும் ஜூலை மாதத்தில் இத்துறை முகத்தை திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்திருந்தார்.


இருந்தும் எதிர்வரும் ஜூலை  மாதம் புனித நோன்பு ஆரம்பமாகின்ற படியால் இதன் திறப்புவிழாவை ஓகஸ்ட் மாதத்துக்கு மாற்றுமாறு பாராளுமன்ற உறுப்பினரால் மீண்டும் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு செவிசாய்த்த ஜனாதிபதி இத்திறப்புவிழா நிகழ்வை ஓகஸ்ட் மாதத்தில் மேற்கொள்ள உத்தரவிட்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம்  தெரிவித்தார்.

கிழக்கு மாகாண அமைச்சரவை விரைவில் மாற்றம்..?

 
 
 
 
 
 
 
 
 
கிழக்கு மாகாண அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்படலாம் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 
கிழக்கு மாகாண ஆளுனருக்கும், அமைச்சர்கள் மற்றும் மாகாணசபையின் ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையை அடுத்தே, இந்த மாற்றம் இடம்பெறலாம் என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. 
கிழக்கு மாகாணசபையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து மாகாண ஆளுனர் வைஸ் அட்மிரல் மொகான் விஜேவிக்கிரம, மற்றும் கிழக்கு முதல்வர் நஜீப் அப்துல் மஜீத் ஆகியோரை அழைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நேற்று முன்தினம் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.

கிழக்கு மாகாண சபையை கலைத்து தோ்தல் ஒன்றை நடத்துவதா என்பது தொடர்பாக ஜனாதிபதி ஆலோசனை

கிழக்கு மாகாண சபை ஆளுநர் மற்றும் முதலமைச்சருடன் மாகாண அமைச்சர்களும் உறுப்பினர்களும் முரண்பட்டுள்ள நிலையில் மாகாண சபையின் அமைச்சரவையை கலைத்து புதிய அமைச்சரவையை நியமிப்பதா அல்லது கலைத்து விட்டு தோ்தல் ஒன்றை நடத்துவதா என்பது தொடா்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இப்பிரச்சினை தொடர்பாக முன்னாள் முதலமைச்சா் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையினான குழுவினா் ஜனாதிபதியை சந்தித்ததாகவும் அறிய முடிகின்றது.

அதேவேளை நேற்றிரவு நடத்தப்பட்ட உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்றில் கிழக்கு மாகாண சபை குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி தமிழத் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை அமைத்தால் மாகாண சபையை கலைக்கப்பது எனவும் ஜனாதிபதி ஆலோசித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஹரீஸ் எம்.பி. வங்குரோத்து அரசியல் செய்யும் நிலையில் இல்லை - ஏ.ஏ.பஷீர்



மாநகர சபை உறுப்பினர் முபீத்தினால் பாலர் பாடசாலைக்கு காலையில் வைத்த அடிக்கல்லை உடைத்தெறிந்து விட்டு பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் மாலையில் நீதியமைச்சரைக் கொண்டு வந்து மீண்டும் பாலர் பாடசாலைக்கு அடிக்கல் வைக்கும் அளவுக்கு முஸ்லிம் காங்கிரசோ, ஹரீஸ் எம்.பியோ வங்குரோத்து அரசில் செய்யும் நிலையில் இல்லை என்பதுடன் மாநகர சபை உறுப்பினர் முபீத் விடயம் அறியாமல் மனநோயாளி போல் உளரியிருப்பதைப் பார்க்கும் போது தாம் கவலையடைவதாக கல்முனை மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வரும் இந்நாள் மாநகர சபை உறுப்பினருமான ஏ.ஏ.பஷீர் தெரிவித்துள்ளார்.


மாநகர சபை உறுப்பினர் முபீத் பாலர் பாடசாலைக்கு காலையில் வைத்த அடிக்கல்லை ஹரீஸ் எம்.பியின் குண்டர்கள் உடைத்தெறிந்து விட்டு மாலையில் நீதியமைச்சரைக் கொண்டு வந்து மீண்டும் பாலர் பாடசாலைக்கு அடிக்கல் வைத்ததாக கூறி ஊடகங்களுக்கு மாநகர சபை உறுப்பினர் முபீத் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

Monday, June 24

ஐ.தே.க.வின் கோட்டையாக இருந்த மருதமுனையை மு.கா.வின் தளமாக என்னால் மாற்ற முடிந்துள்ளது -அமைச்சர் ஹக்கீம்



தலைவர் அஷ்ரப்புடைய காலத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் கோட்டையாக இருந்த மருதமுனை முஸ்லிம் காங்கிரஸின் தளமாக என்னால்தான் மாற்றியமைக்க முடிந்துள்ளது என முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மருதமுனை அல்-மதீனா வித்தியாலயத்தில் திதுலன வேலைத்திட்டத்தின் கீழ் 20 லட்சம் ரூபா செலவில் அமையவுள்ள கணினி கூட கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதிபர் ஏ.ஆர்.நிஃமத்துல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் அணிக்கான கல்முனைப்பிராந்திய அமைப்பாளர் சறோ தாஜிதீன் உள்ளிட்ட பலர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

மக்கள் இன்று எம்மிடமிருந்தும் அபிவிருத்தியினை எதிர்பார்க்கின்றனர். அதற்கான பல்வேறு திட்டங்களை நாமும் முன்னெடுத்து வருகின்றோம். சுனாமிக்குப் பின்னர் தகரக் கொட்டகைக்குள் ஆரம்பிக்கப்பட்ட மதீனா வித்தியாலயத்தில் இவ்வாறானதொரு கட்டிடத்தை ஒதுக்கீடு செய்வதில் நாம் மகிழ்ச்சி அடைகின்றோம். சுனாமியின் பின்னரான அமைவிடம் தொடர்பில் இப்பாடசாலை பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்த நிலையிலும் நாம் மிகவும் நிதானமாக அவற்றையெல்லாம் அவதானித்தோம். இன்று அதன் பிரதிபலிப்புக்களைப் பார்க்கும் போது பூரிப்பு ஏற்படுகின்றது.

முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய தளமாக கல்முனை என்றும் இருந்து வரும் நிலையில் தலைவரின் காலத்தில் ஐ.தே.க.வின் கோட்டையாக இருந்து எம்மை ஏற்றுக்கொள்ளாத மக்களையெல்லாம் இன்றும் எம் பக்கம் அழைத்து வந்திருக்கின்றோம். மருதமுனை மக்களின் பெரும் பகுதியினர் எம்மோடு கைகோர்க்கும் முக்கிய தளமாக இக்கிராமம் மாறி இருக்கின்றது. இது என்னுடைய தலைமைத்துவத்தினாலேயே முடிந்திருக்கின்றது. இவ்விடயம் ஆரோக்கிமானதாகவோ சிலவேளை துரதிஷ்ட வசமானதாகவோ இருக்கலாம்.

பாடசாலை நிருவாகத்தினர், தாய்மார்கள், பெற்றோர்கள் பெருமளவில் வருகை தந்திருக்கும் இந்நிகழ்வு எனக்கு சந்தோஷமளித்திருக்கின்றது. எமது அரசியல் மற்றும் சமூகம் சார் முன்னெடுப்புக்கள் குறித்து விரைவில் மனம் திறந்து பேசவுள்ளோம் என்றார்.

அரசியல்வாதிகள் அபிவிருத்தித்திட்டங்கள் என்று கூறி கற்களை நடுகிறார்கள் பின்னர் அந்த இடத்தில் கல்வைத்த தடயமே இல்லாமல் போய்விடுறது- ஆரிப் சம்சுடீன்



மாணவர்கள் தூய எண்ணத்துடன் செயற்படும்போதுதான் அவர்களிடையே சிறந்த ஆளுமை உருவாகும். இவ்வாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  ஆரிப் சம்சுடீன் குறிப்பிட்டார்.

இன்று (24) காலை கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற கணினி நிலையத்திற்கான அடிகல் நடும் விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றும்போது குறிப்பிட்டதாவது,
நவீன யுகத்தின் சவால்களுக்கு முகம்கொடுக்கும் வகையில் மாணவர்கள் தயார்படுத்தப்பட வேண்டும்.  கணினி உபயோகத்தின் தேவை இன்று நம்மிடையே பிண்ணிப்பிணைந்ததாக மாறிவிட்டது. கணினி அறிவின் அவசியம் எல்லோராலும் உணரப்பட்டுள்ள நிலையில், நமது பிரதேச மாணவர்களும் அதன் பயனை  அடையக் கூடியவர்களாக மாற வேண்டும். இப்பாடசாலை மாணவர்களின் கணினி அறிவை வளர்க்கும் நோக்குடன் இன்று இக்கணினி நிலையத்துக்கான அடிக்கல் நடப்பட்டுள்ளது.
எல்லா அரசியல் வாதிகளும் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் என்று கூறி கற்களை நடுகிறார்கள். பின்னர் அந்த இடத்தில் கல்வைத்த தடயமே இல்லாமல் போய்விடுறது. இந்தக் கலாசார்தை நான்  செய்ய விரும்பவில்லை.
மக்களை ஏமாற்றும் நோக்கமும் எனக்கில்லை. நூறு அடிக்கற்களை வைப்பதை விட ஒரு கல்லை வைத்துவிட்டு அந்த இடத்தில் உரிய வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதுதான் எனது ஆசை. அந்தவகையில் இப்பாடசாலைக்கு இந்தக் கணினி நிலையத்தை கொண்டு வருவற்கான நிதியைப் பெற்றமையானது புதையல் தோண்டி எடுத்த ஒரு அனுபவமே என்னுள் பேசிக்கொண்டிக்கிறது,
அத்தகையதொரு பிரயத்தனத்தின் மத்தியில் இப்பாடசாலையில் ஒரு கணினி நிலையம் உருவாக வேண்டும் என்ற தூய எண்ணத்துடன் முன்னெடுக்கப்பட்டுள்ள இத்த கணினி நிலையத்துக்கான பணிகள் இன்னும் ஒரு மாதத்துக்குள் நிறைவு செய்யபடும் என நிர்மாண ஒப்பந்தக்காரர்கள் உறுதியளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இப்பாடசாலை மாணர்களின் பரீட்சை அடைவு மட்டங்கள் இப்பிரதேசத்தின் ஏனைய பாடசாலைகளின் மாணவர் தேர்ச்சியுடன் ஒப்பிடும்போது குறைந்த நிலையிலுள்ளதாக அறிய முடிகிறது. இந்நிலையிலிருந்து முன்னெற்றகரமானதொரு நிலை இப்பாடசாலையில் உருவாக வேண்டும். அதற்கு இப்பாடசாலை அதிபர் முதல் அசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் என்பன ஒன்றினைந்து செயற்படுவீர்கன் என்று நம்புகின்றேன் என்று கூறிய அவர் இப்பாடசாடலையின் கல்வி  விருத்தியில் எனது அக்கறைதொடர்ந்தும் இருந்து வருமென்றார்.
இவ்விழாவில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம். ஹாசிம். கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நௌபல்,  மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள  பெற்றோர் ஆசிரியர் மாணவர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

அம்பாறை மாவட்ட இளைஞர்களிடமிருந்து தொழிற் பயிற்சிகளுக்கு விண்ணப்பம் கோரல்


அம்பாறை மாவட்டத்தில் இயங்கும் 16 தொழிற்பயிற்சி பயிற்சி நிலையங்களினால் வழங்கப்படும் 47 பயிற்சிநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 2013ஆம் ஆண்டின் இரண்டாம் தொகுதி பயிற்சிநெறிகளுக்காக எதிர்வரும் 30ஆம் திகதி வரை இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அதிகமான கற்கைகளுக்கு அனுமதிபெற தரம்-9 சித்தியடைந்திருத்தலே போதுமானது என்றும் மாவட்ட அலுவலகம் அறிவித்துள்ளது.  
இதற்கமைய அம்பாறை மாவட்டத்தின் தமிழ்பேசும் பிரதேசங்களில் அமைந்துள்ள நிந்தவூர் (மாவட்ட) தொழிற்பயிற்சி வளாகத்தினால் வழங்கப்படும் தையல் மற்றும் சாரதிப் பயிற்சி பயிற்சிகளுக்கும், சம்மாந்துறை தொ.ப.நிலையத்தின் வாகன திருத்துனர், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் தேசிய சான்றிதழ், மோட்டார் வைண்டிங், ஆடைதொழிற்சாலை தரக் கட்டுப்பாட்டாளர், அதிவேக தையல் இயந்திர இயக்குனர், பேக்கரி தொழில்நுட்பம் போன்ற பயிற்சிகளுக்கும் மத்திய முகாம் நிலையத்தினால் வழங்கப்படுகின்ற நிர்மாண கைவினைஞர், நீர்க்குழாய் பொருத்துனர், வீட்டு மின்னிணைப்பாளர், தையல், ஒட்டுவேலை செய்பவர், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர், முச்சக்கரவண்டி திருத்துனர் பயிற்சிநெறிகளுக்கும் பொத்துவில் தொ.ப.நிலையத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர், சமையல் கலைஞர், உணவு விடுதி, வீட்டு மின்னிணைப்பாளர், அறை பராமரிப்பாளர், மர கைவினைஞர், ஆகிய கற்கைகளுக்கும் காரைதீவு பயிற்சி நிலையத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் தேசிய சான்றிதழ், நீர்க்குழாய் பொருத்துனர், அலுமீனியம் பொருத்துனர், நிர்மாண கைவினைஞர் ஆகிய கற்கைகளுக்கும் அக்கரைப்பற்று நிலையத்தினால் வழங்கப்படும் மோட்டர் வைண்டிங், வீட்டு மின்னிணைப்பாளர், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர் மற்றும் மர பூச்செதுக்குனர் கற்கைநெறிகளுக்கும் சாய்ந்தமருது தொழிற்பயிற்சி நிலையத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் தேசிய சான்றிதழ், வீட்டு மின்னிணைப்பாளர் பயிற்சிகளுக்கும் இறக்காமம் மற்றும் ஆலையடிவேம்பு பயிற்சி நிலையங்களால் வழங்கப்படும் மர கைவினைஞர் கற்கைநெறிக்கும் கல்முனை பயிற்சி நிலையத்தின் நீர்;க் குழாய் பொருத்துனர் பயிற்சிக்கும் இப்போது விண்ணப்பிக்கலாம்.
இதுதவிர, சிங்கள மொழிமூலத்திலான அம்பாறை தொழிற்பயிற்சி நிலையம், அம்பாறை விஷேட தொ.ப. நிலையம் மற்றும் தெகியத்தக்கண்டிய, தமண, மகா ஓயா, வீரகொட போன்ற பிரதேசங்களிலுள்ள தொழிற்பயிற்சி நிலையங்களினால் வழங்கப்படுகின்ற கற்கைகளுக்கும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

மருதமுனையில் முஅத்தீன், பள்ளிவாயல் சேவையாளர்களுக்கான செயலமர்வு


செஸ்டோ சிறிலங்கா அமைப்பின் சமய கலாசார பேரவையின் ஏற்பாட்டில் முஅத்தீன் மற்றும் பள்ளிவாயல் சேவையாளர்களுக்கான ஒருநாள் செயலமர்வொன்று 23-06-2013 மருதமுனை மத்திய பள்ளிவாயலில் இடம்பெற்றது.
அமைப்பின் தலைவர் எம்.எம்.முஸ்னி தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில்  தென்கிழக்குப் பல்கலைக்கழக உதவி விரிவுரையாளர் ஏ.ஜே.எம். வஸீல் இறைபணி பற்றிய சமகால சமூக நோக்கும்  உளவியல் விளக்கமும், அக்கரைப்பற்று உதவி பிரதேச செயலாளர் அஸ்ஸெய்க் ரம்ஸான் இறை பணி வரலாறும் அதன் மகத்துவமும் , அட்டாளைச் சேனை கல்விக் கல்லூரி விரிவுரையாளர்  அஸ்ஸெய்க் அன்ஸார் மௌலானா  இறை பணியாளர்களின் பொறுப்புக்களும் சமூக கடமைகளும் , பொதுச் சுகாதார பரிசோதகர் பைசல் முஸ்தபா பள்ளிவாயல்களின் அக புற சுத்தமும்  திண்மக்கழிவு முகாமையும் , உம்முல் குரா முகாமைத்துவப் பணிப்பாளர்  எம்.ஐ ஹுஸைனுத்தின் சரியான உச்சரிப்புடன் அதான் கூறுவோம், மருதமுனை தாருல் ஹுதா மகளிர் அரபுக் கல்லூரி அதிபர் எம்.எல். முபாரக் மதனி இறை பணியாளர்களை தொழில்வாண்மையுடையவர்களாக மாற்றுதல், சமாதான கற்கை நிலைய பணிப்பாளர் டாக்டர் ரியாஸ் கருத்துப் பரிமாற்றம் ஆகிய  தலைப்புக்களில் உரைகள் இடம் பெற்றன.
கலந்து கொண்டவர்களுக்கான ஊக்குவிப்புப் பணம் மற்றும் சான்றிதழ்களும் இதன் பொது வழங்கப்பட்டன.

அலரிமாளிகையில் கி. மா. சபை தொடர்பாக இடம் பெற்ற கலந்துரையாடல் சம்பந்தமாக அமைச்சர் உதுமாலெப்பையின் விளக்கம்



அண்மையில் அலரிமாளிகையில் கிழக்கு மாகாண சபை தொடர்பாக இடம் பெற்ற கலந்துரையாடலில் நடந்த நிகழ்வாக தன்னைப்பற்றி பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்றும், அவ்வாறு ஆதாரபூர்வமற்றவகையில் ஊடகங்கள் செயற்பட்டு வருவது தொடர்பில் தனது கவலையையும், மனவேதனையையும் தெரிவித்துக் கொள்வதாகவும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்துள்ளார்.

அண்மையில் பத்ரிகை ஒன்றில் வெளியான செய்தி தொடர்பில் இன்று (23)வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையியே கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையினால்  மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

அம்பாறையில் நடைபெற்ற ஊடகவியலாளர் கூட்டம் + செயலமர்வு குறித்து விசாரணை




அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் விசேட கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) ஜனாதிபதி விளையாட்டு பயிற்சி நிலைய கேட்போர் கூடத்தில் சம்மேளனத்தலைவர் மீரா எஸ். இஸ்ஸடீன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பே இராணுவத்தினர் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
இக்கூட்டத்தில் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சம்மேளனத்தின் வருடாந்த மாநாடு நடாத்துவது பற்றிய முக்கிய விடயங்கள்
பற்றியே ஆராயப்பட்டது.

Sunday, June 23

தென்கிழக்கு பல்கலைகழக கலைகலாச்சார பீடாதிபதி பாலீளுள் ஹக் காலமானார்




தென் கிழக்கு பல்கலைகழக கலை கலாச்சார பீடாதிபதி கே,எம்,எம், பாலீளுள் ஹக் காலமானார். இன்னாலில்லாஹி  வயின்னா இலைஹி ராஜிஊன் இவர் கடந்த சில மாதங்களாக நோய் வாய்ப்பட்டிருந்த இவர் இன்று (23.06.2013)மாலை 5.30 மணியளவில் அக்கரைப்பற்று ஆதார வைத்திய சாலையில் காலமானார்.

மாவடிப்பள்ளி பெரியபாலம், சின்னப்பாலம் இரண்டையும் திருத்துமாறு மக்கள் கோரிக்கை



காரைதீவு – மாவடிப்பள்ளி பிரதான வீதியிலுள்ள பெரிய பாலம் மற்றும் சிறிய பாலம் இரண்டையும்  உயர்த்தி இப் பாலங்களுக்கூடாக இரு வாகனங்கள் சிரமமின்றி பயணிக்கக் கூடியவாறு அகலமாக்குவதற்கு அம்பாறை மாவட்ட அரசியல்வாதிகள் ஒன்றுபட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    இப் பாலங்கள் இரண்டும் மிகவும் குறுகியதாகவும் ஒரே நேரத்தில் இரு வாகனங்கள் பயணிக்க முடியாமலும் உள்ளன. இதுமாத்திரமல்லாமல் மழை பெய்யும் காலங்களில் சிறிய பாலம் வெள்ள நீரில் அப்படியே மூழ்கி பாதையில் வாகனப் போக்கு வரத்துச் செய்ய முடியாத நிலையும் அடிக்கடி ஏற்படுகின்றது. இதனால் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பல சிரமங்களை அனுபவிப்பதுடன் உயிர் ஆபத்துக்களையும் எதிர் நோக்குகின்றனர் இச் சிறிய பாலத்தை உயர்த்துவதுடன் மாவடிப்பள்ளி எல்லையிலிருந்து  காரைதீவு சந்தி வரையும் வீதியும் அகலப்படுத்தப்பட்டு உயர்த்தப்படல் வேண்டும் என்ற வேண்டுகோளும் விடுக்கப்படுகின்றது.

    கல்முனையிலிருந்து அம்பாறைக்கும் அம்பாறையிலிருந்து கல்முனை, காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களுக்கும் நாளாந்தம் பல நூற்றுக் கணக்கான வாகனங்கள் இப்பாலங்களினூடாகவே பயணிக்க வேண்டியிருக்கிறது.

Saturday, June 22

கிழக்கு ஆளுநரையும், முதலமைச்சரையும் மாற்றுவதென்றே பேச்சுக்கே இடமில்லை - மஹிந்த



கிழக்கு மாகாண ஆளுனர் அட்மிரல் மொகான் விஜயவிக்ரம மற்றும் முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் ஆகியோரை மாற்றுவது என்ற பேச்சுக்கே இடமில்லையென ஐனாதிபதி மகிந்த ராஐபக்ஸ திட்டவட்டமாக எடுத்துரைத்துள்ளார்.
கிழக்கு மாகாண சபையில் வீனான பிரச்சனைகளை தோற்றுவிக்கும் விமலவீர திஸாநாயக்காவை தற்போதைக்கு மாற்ற வேண்டிய நிலை தோன்றியுள்ளதாகவும் ஐனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் முதலமைச்சர் ஆகியோரை நேற்று முன்தினம் அலரிமாளிகைக்கு அழைத்து கலந்துரையாடிய போதே ஐனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு மாகாண அமைச்சர்கள் ஆளுனருடன் முரண்பட்டுக்கொண்டும், ஆளும் தரப்பு உறுப்பினர்கள் முதலமைச்சருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்திக்கொண்டு சபை அமர்வு பகிஸ்பரிப்பிலும் ஈடுபட்டு வரும் சூழ்நிலையிலேயே மேற்படி ஐனாதிபதி அதிரடி அறிவிப்பை விடுத்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் தற்போதைய ஆளுனரும், முதலமைச்சரும் தான் தொடர்ந்து இருப்பார்கள். அதில் மாற்றம் ஏற்படுத்தும் எண்ணம் அரசுக்கு கிடையாது.ஆளுனர் மற்றும் முதலமைச்சருடன் முரண்பாட்டை தோற்றுவிக்கும் பிண்ணனியில் உள்ளவர்களை நான் அறிவேன். அவர்களின் எண்ணம் ஒரு போதும் பலிக்காது எனவும் ஐனாதிபதி தெரிவித்தார்.
அதே வேளை விமலவீர திஸாநாயக்க வீணாண முரண்பாடுகளை தோற்றுவிக்கின்றார். ஆளுனர் முதலமைச்சர் மாறாவிட்டாலும் கல்வியமைச்சசை வேரொருவருக்கு வழங்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது என்று ஐனாதிபதி கடும் தொனியில் குறிப்பிட்டார்.
இதேவேளை கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்காவையும் விசேடமாக அழைத்து எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

ஹரீஸ் எம்.பி.க்கு எதிராக மாநகர சபை உறுப்பினர் முபீத் சீற்றம்

 

காலையில் பாலர் பாடசாலைக்கு நான் அடிக்கல் வைத்ததை உடைத்தெறிந்து விட்டு மாலையில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் நீதியமைச்சரைக் கொடுவந்து அடிக்கல் நாட்டுகிறார். இந்த கேவலமான அரசியல் வங்குரோத்து நிலையை கண்டிக்கிறேன் என கல்முனை மாநகர சபை உறுப்பினர் சீ.எம். முபீத் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபையின் உறுப்பினர்களுக்கான நிதியிலிருந்து நற்பிட்டிமுனையில் பாலர் பாடசாலை ஒன்றை கட்டுவதற்காக அடிக்கல் வெள்ளிக்கிழமை (21) காலையில் சீ.எம். முபீதினால் இடப்பட்டது. ஆனால் மாலையில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸின் குண்டர்களால் அது உடைக்கப்பட்டு அவர்களால் அடிக்கல் நடப்பட்டது. இந்நிகழ்வை வன்மையான கண்டித்த உறுப்பினர் முபீத் இது விடயமாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

Friday, June 21

சாய்ந்தமருது காரியப்பர் வித்தியாலயத்திற்கு ரவூப் ஹக்கீம் அடிக்கல் நாட்டினார்





திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத்தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான எச்.எம்.எம். ஹரீஸின் முயற்சியினால் ஒளிரும் கல்முனை “ திதுலன ” 51 வேலைத்திட்டத்தின் கீழ் 2வது வேலையைான சாய்ந்தமருது பொலிவேரியன் கிராம எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயத்திற்கான புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் விழா இன்று காலை (21) கல்லுாரி அதிபர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில்  ஸ்ரீ லங்கா முஸ்லிம காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம். மன்சூர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம். ஜெமீல், ஏ.எல். தவம், மற்றும் கல்முனை முதல்வர் ஸிராஸ் மீராசாஹிப் கட்சியின் அங்கத்துவத்திற்கான தேசிய  பணிப்பாளர் ஏ.சீ. யஹ்யாகான்,ஆகியோருடன், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் கட்சிப்போராளிகள், பொதுமக்கள் பாடசாலை மாணவர்கள்எனப்பலரும் கலந்துகொண்டனர். இன்று பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களுடன், பாராளுமன்ற உறுப்பினரின் முயற்சியால் தொடர்ந்தும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

'ஒளிரும் கல்முனை' - சாய்ந்தமருதுவில் மஸ்ஜிதுல் குபா எனும் பள்ளிவாயல்


திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத்தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத்தலைவருமான எச்.எம்.எம். ஹரீஸின் முயற்சியினால் ஒளிரும் கல்முனை “ திதுலன ” 51 வேலைத்திட்டத்தின் கீழ் முதலாவது வேலையைான சாய்ந்தமருது கடற்கரை பிரதேசத்தில் மஸ்ஜிதுல் குபா எனும் பள்ளிவாயல் முதல்கட்டமாக சுமார் 20 இலட்சம் ரூபா செலவில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஏ. பஸீர் தலைமையில் இடமபெற்ற இந்நிகழ்வில் எச்எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாரை மாவட்ட பொருளாளர் ஏ.சீ. யஹியாகான் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம். பிர்தௌஸ், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.பாயிஸ், சாய்ந்தமருது ஜூம்ஆ பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் வை.எம். ஹனீபா உட்பட பள்ளிவாயல்களின் நிர்வாகிகள், ஊர்ப்பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.


Wednesday, June 19

கிழக்கில் முஸ்லிம்கள் தொடர்பில் அரசுக்கு அச்சமாம்


unp-logo_CI1வடக்கு-கிழக்கு மாகாண சபைகளை இணைப்பதற்கான சட்டமூலம் தற்போது இல்லாதொழிக்கப்பட்டுவிட்டது. எனினும் கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள், வடக்கில் வாழும் தமிழ் மக்களுடன் இணைந்து வட-கிழக்கை இணைக்கும் நடவடிக்கையொன்றை மேற்கொள்ளலாம் என்ற அச்சம்  அரசாங்கத்திடம் உள்ளது. என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அதன் காரணமாகவே மாகாண சபைகளை இணைக்கும் தீர்மானத்தை எதிர்த்து பாராளுமன்றத்தில் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் கிழக்கில் வாழும் முஸ்லிம்கள், தமிழ் மக்களுடன் இணைந்து போக நினைத்தாலும் அங்குள்ள சிங்கள மக்கள் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.