Saturday, June 29

சாய்ந்தமருது வைத்தியசாலை சத்திர சிகிச்சை உபகரணங்கள் கபளீகரம்; உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் அமைச்சர்!


mansoorசாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் சத்திர சிகிச்கைப் பிரிவு உபகரணங்களை கபளீகரமாக வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டமை குறித்து முறைப்படி முறையிட்டால் அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.
ஒளிரும் கல்முனை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு கட்டிடத்திற்கு அடிக்கல் நடும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் என்.ஆரிப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது;
“சாய்ந்தமருது வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறை, சிற்றூழியர் பற்றாக்குறை மற்றும் மருத்துவ உபகரணங்களின் தேவைகள் என்பன மிக விரைவில் நிவர்த்தி செய்து கொடுக்கப்படும்.
முஸ்லிம் காங்கிரஸின் தலைமை என் மீது நம்பிக்கை வைத்து இவ்வமைச்சுப் பதவியினை எனக்கு வழங்கியுள்ளது. அதனடிப்படையில் எனது சேவை கிழக்கிலுள்ள முஸ்லிம்களுக்கு மாத்திரமின்றி தமிழ், சிங்கள மக்களுக்கும் கிடைக்கும் என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.
வைத்தியசாலைகளின் பணிகளை துரிதமாக செய்து கொள்வதற்காகவே வைத்தியசாலைகளில் அபிவிருத்திச் சபைகள் நிறுவப்பட்டுள்ளன. அதற்கமைவாக சாய்ந்தமருது வைத்தியசாலை அபிவிருத்திச் சபையின் செயற்பாடுகள் திருப்திகரமாக உள்ளதுடன் சபை அங்கத்தவர்கள் எனக்கு நன்கு பரீட்சயமானவர்கள். அவர்களின் நேரம், காலம், பணம் என்பவற்றை வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு செலவிடுவதனையிட்டு பாராட்டுகின்றேன்.
சாய்ந்தமருது வைத்தியசாலை கடந்த சுனாமி அனர்த்தத்தினால் முற்றாக பாதிக்கப்பட்டு தற்போது அரசசார்பற்ற நிறுவனத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு தனது சேவையை இப்பிராந்திய மக்களுக்கு வழங்கி வருகின்றது.
இவ்வைத்தியசாலைக்கு அரசசார்பற்ற நிறுவனத்தினால் வழங்கப்பட்ட சத்திர சிகிச்சைப் பிரிவு உபகரணங்கள், சலவை இயந்திரங்கள் என்பன சுகாதார திணைக்கள உயர் அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகத்தினால் வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அபிவிருத்திச் சபையினர் என்னிடம் தெரிவித்தனர்.
எனக்கு இவை பற்றி உரிய முறைப்படி நேர காலத்தோடு அறிவிக்கவில்லை. தற்போது உரிய முறைப்படி அறிவிக்குமிடத்து அதற்கு உரிய நிவாரணம் பெற்றுத்தரப்படும்” எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல், ஏ.எல்.தவம், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஏ.பஸீர், எம்.ஐ.எம்.பிர்தௌஸ், ஏ.நஸார்தீன், முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பொருளாளர் ஏ.சீ.யஹியாகான் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment