Saturday, June 22

ஹரீஸ் எம்.பி.க்கு எதிராக மாநகர சபை உறுப்பினர் முபீத் சீற்றம்

 

காலையில் பாலர் பாடசாலைக்கு நான் அடிக்கல் வைத்ததை உடைத்தெறிந்து விட்டு மாலையில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் நீதியமைச்சரைக் கொடுவந்து அடிக்கல் நாட்டுகிறார். இந்த கேவலமான அரசியல் வங்குரோத்து நிலையை கண்டிக்கிறேன் என கல்முனை மாநகர சபை உறுப்பினர் சீ.எம். முபீத் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபையின் உறுப்பினர்களுக்கான நிதியிலிருந்து நற்பிட்டிமுனையில் பாலர் பாடசாலை ஒன்றை கட்டுவதற்காக அடிக்கல் வெள்ளிக்கிழமை (21) காலையில் சீ.எம். முபீதினால் இடப்பட்டது. ஆனால் மாலையில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸின் குண்டர்களால் அது உடைக்கப்பட்டு அவர்களால் அடிக்கல் நடப்பட்டது. இந்நிகழ்வை வன்மையான கண்டித்த உறுப்பினர் முபீத் இது விடயமாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நான் அபிவிருத்தியை தடுக்கவில்லை. ஆனால் நான் முயற்சித்த அபிவிருத்தியை முடக்கி இவர்கள் அபிவிருத்தி செய்ய வந்தமையால்தான் பல மறைந்து கிடக்கும் உண்மைகளை சொல்ல விளைகிறேன்.   ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மறைந்து கடந்த 12 ஆண்டுகளாக கல்முனைத் தொகுதியை பிரதிநிதித்துவம் செய்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சிறிது கால இடைவேளையைத் தவிர தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினராகவும் மேயராகவும் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரீசும் இதுவரை கல்முனைத்தொகுதிக்கு அபிவிருத்தி செய்யப்போகிறோம் என்று வெற்று அறிக்கைகளை மட்டுமே விட்டுக்கொண்டு இருந்தனர்.

ஹரீஸ் முதல்தடவை பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டபொழுது 4 கோடி ரூபா செலவில் புனித நகர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கல்முனையை அபிவிருத்தி செய்யப்போவதாக அறிக்கை விட்டார். ஆனால் 40 ரூபா கூட செலவு செய்யவில்லை. அதன் பின் அடிக்கடி பெரும்பெரும் அபிவிருத்தித்திட்டங்கள் செய்யப்போவதாக அறிக்கை விடுத்து வந்தார். ஆனால் செய்த அபிவிருத்தி எல்லாம் அமைச்சர் அதாஉல்லா கொண்டுவந்த பாலத்தை போடாமல் தடுத்ததும், அமைச்சர் உதுமாலெப்பை கொண்டுவருகின்ற வீதிகளை போடவிடாமல் தடுப்பதும் மற்றவர்கள் எதையாவது செய்யவந்தால் அதனைத்தடுப்பதும்தான்.

இன்று அவர் குடியிருக்கின்ற பள்ளி வீதி கூட அவர்போட்ட தடைகளையும் மீறி அமைச்சர் உதுமாலெப்பையினால் போடப்படுகின்றது. அதேபோல் கல்முனை கடற்கரைப்பள்ளிவீதி, கல்முனை மாளிகைக்காடு கடற்கரை வீதி போன்ற பல வீதிகள் அமைச்சர் உதுமாலெப்பையினால் போடப்படுகின்றன. இதனைச் சகித்துக்கொள்ள முடியாமல் அவரின் அடிவருடிகளைக்கொண்டு அங்குரார்ப்பன பெயரப்பலகையை இரவு நேரங்களில் உடைத்தெறிவது இவரது பிரதான அபிவிருத்திகளில் ஒன்றாகும்.

சுனாமி  இடம்பெற்றதைத்தொடர்ந்து சர்வதேச தொண்டர் நிறுவனங்கள் கோடிக்கணக்கான பணத்தைக்கொண்டுவந்து அம்பாரை கரையோரப் பிரதேசமெல்லாம்  அபிவிருத்தி நடவடிக்கைகளைச் செய்தபொழுது குடியிருப்பதற்கு ஆட்கள் இல்லாமல் எஞ்சிக்கிடக்குமளவு வீடுகள் அமைத்துக்கொடுத்தபொழுது வீடு கிடைக்காமல் பல வருடங்கள் காத்திருந்து பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு முன்னால் பல தடவை சத்தியாக கிரகங்கள்செய்து ஈற்றில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஸாட் பதியுதீனின் தலையீட்டினால் வீடமைத்துக்கொடுக்கப்பட்டதும் இந்த ஹரீஸ் எம்.பி. பிரதிநிதித்துவப்படுத்தும் கல்முனைத்தொகுதியில்தான்.

தொண்டர் நிறுவனங்கள் கொண்டுவந்த பணத்தைக் கொண்டு கல்முனை சந்தையை உருப்படியாகக் கட்ட முடியாமல் போனது இந்த ஹரீஸ் எம்.பி. கல்முனை மாநகர சபையில் மேயராக இருந்தபொழுதுதான்.

இவ்வாறு இவர்களது தடைகளையெல்லாம் தாண்டி தொண்டர் நிறுவனங்கள் சுனாமியால் பாதிக்கப்பட்ட பிரதேசம் என்ற அடிப்படையில் கல்முனை பிரதேசத்தில் கட்டிய சில வடிகான்களை தான் செய்த அபிவிருத்தியாகக் காட்டுவதும் இந்த கல்முனையில்தான்.

இந்த வருடம் தேசத்திற்கு மகுடம் (தயட்ட கிருள)  நடைபெற்றதை முன்னிட்டு சுமார் 6 ஆயிரம் மில்லியன் ரூபாய்கள் அம்பாரை, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் காத்தான்குடிக்கு  மாத்திரம்  750 மில்லியன் ரூபாவிற்கு மேலான பணம் ஒதுக்கப்பட்டது.  அதேபோன்று ஏறாவூருக்கு பல நுாறு மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டன. அம்பாரை தொகுதிக்கு இவற்ரைப்போல பல மடங்கு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் முழுக்கல்முனைத்தொகுதிக்கும் 330 மில்லியன் ரூபாய்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டது. காத்தான்குடி ஏறாவூர் போன்ற ஊர்களுக்கே அங்கிருந்த எம்.பிக்களின் நாக்கில் பலமிருந்ததனால் முன்பு குறிப்பிடப்பட்டது போன்று இதனைவிடப்பெரும்தாகை ஒதுக்கப்பட்டபொழுது ஒரு பாரிய கல்முனைத்தொகுதிக்கு இச்சிறிய தொகை ஒதுக்கப்பட்டது கல்முனைத்தொகுதி பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தின் கெட்டித்தனத்தை பறை சாட்டியதாகும்.

விரலுக்கேற்ற வீக்கம் என்பார்கள் பரவாயில்லை. 330 மில்லியன் ரூபாயானது கல்முனைக்கு வரும் என்று கல்முனை மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் 3 மில்லியன் ரூபாய் கூட கல்முனைக்கு வரவில்லை என்ற உண்மை கல்முனைத்தொகுதி மக்கள் ஜீரணித்த ஒன்றாகும்.

இப்பொழுது திடீரென ஒளிரும் கல்முனை என்ற பெயரில் திருவிழா கொண்டாடுகிறார்கள். அந்தத்திருவிழா ஏற்கனவே கல்முனை மாநகர சபை உறுப்பினராகிய எனக்கு ஒதுக்கப்பட்ட  பணத்தில் என்னால் வெள்ளி (21) காலையில் அடிக்கல் நாட்டப்பட்டது. அவ்வடிக்கல்லை மாலையில் பிடுங்கி எறிந்துவிட்டு அமைச்சரைக்கொண்டுவந்து அடிக்கல் நாட்டி அதே பாலர் பாடசாலையை அதே மாநகர சபைப் பணத்தைப் பாவித்து கட்ட எத்தனிக்கிறார்கள். எனது வீதிகளுக்காயினும் மாநகர சபைப்பணம் என்ற அடிப்படையில் செலவுசெய்து நான் கட்ட நினைப்பது தவறா ? 

இதனைத்தடுத்து அடாவடி காட்டி தன் பெயரை வரவைக்கவேண்டுமென்று நினைப்பதுதான் கல்முனையை ஒளியூட்டுவதா ? என கேட்க விரும்புகிறேன்.
வரலாற்றில் முதல் தடவையாக ஒளிரும் கல்முனைப்பெருவிழாவில் பாடசாலைக்கடடிடங்கள் புனருத்தாரணம் செய்யும் பணிகளை அமைச்சரைக் கொண்டு வந்து ஆரம்பித்து வைக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் கல்வித்திணைக்களம் குறித்த சில பாடசாலைகளைத் தெரிவு செய்து அங்குள்ள கட்டிடங்களில் சிறிய சிறிய புனருத்தாரணங்களைச் செய்வது வழமையாகும். இம்முறை கல்வி அமைச்சு நாடு பூராகவும் 5 பாடசாலைகளைத் தெரிவுசெய்து புனருத்தாரண் நடவடிக்கைகளைச் செய்கிறார்கள். இதற்கான பாடசாலைத்தெரிவுகளை ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் இல்லாவிட்டாலும் கல்வித்திணைக்களம் செய்துதான் இருக்கும். ஆனால் அதுவும் ஒளிரும் கல்முனைத்திட்டத்தின் பாரிய அபிவிருத்தியாக அமைச்சர் ஆரம்பித்திருக்கிறார். போதாக்குறைக்கு ஒளிராமல் இருக்கின்ற வீதி மின்விளக்குகளை மாற்றவேண்டியது அல்லது புதிய மின்விளக்குகளை பொருத்தவேண்டியது மாநகர சபையின் கடமையாகும். ஆனால் அதுவும் கல்முனை ஒளிரும் அபிவிருத்தி திட்டத்தின் ஒரு திட்டமாக அமைச்சர் வந்து அங்குரார்ப்பணம் செய்து வைக்கிறார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் 5000 பாடசாலை புனருத்தாரன திட்டத்தின் கீழ் ஒரு தொகுதிக்கு ஆகக் குறைந்தது 25 பாடசாலைகளாவது தெரிவுசெய்யப்பட்டிருத்தல் வேண்டும். ஆனால் ஒளிரும் கல்முனைத்திட்டம் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலின்படி உருப்படியாக 5 பாடசாலைகள் கூட தெரிவுசெய்யப்படவில்லை. என்றால் அதுவும் கல்முனைப்பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தின் கெட்டித்தனம்தான் என்றால் அது மிகையாகாது.

இவற்றில் உருப்படியாக இரண்டொரு பாதைகள் “கார்பட்” பாதைகளாக பொடப்பட இருக்கி்ன்ற செய்திகளைக் குறிப்பிடலாம். ஆனால் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு கிழக்கின் நவோதயம் என்ற திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான ரூபாய் அபிவிருத்தித்திட்டங்களை செய்தும் கல்முனைப் பிரதேசம் அதிலிருந்து முற்றாக புறக்கணிக்கப்பட்டதும் கல்முனைப்பிரதிநிதித்துவத்தின் கெட்டித்தனம்தான்.

இருப்பினும் இப்பொழுதாவது 2 பாதைகள் கல்முனைக்கு வருகின்றன. அதுவும் பாராளுமன்ற உறுப்பினரின் சொந்தப்பாதையை வேறு ஒரு அமைச்சர் போட்டுக்கொடுத்தபின் வருகின்றன என்றால் கொண்டுவந்த இரண்டு பாதைகளுக்குமாக பாராளுமன்ற உறுப்பினரைப் பாராட்டுவதா ? அல்லது ஏனைய பிரதேசங்களில் எத்தனை பாதைகளும் எத்தனை அபிவிருத்தித்திட்டங்களும் இந்த கிழக்கின் நவோதயம் அபிவிருத்தித்திட்டத்மதின் கீழும் தேசத்திற்கு மகுடம் திட்டத்தின் கீழும் இடமபெற்றிருக்கின்றபொழுது கல்முனைக்கு இரண்டு பாதைகளையும், 4 பாடசாலை திருத்த வேலைகளையும் நடக்குமா ? நடக்காதா ? என்ற சில்லறை அடிக்கல் நாட்டு நிகழ்வுகளையும் கொண்டுவந்து ஒளிரும் கல்முனை என்று அதற்கு பட்டம் சூட்டுவது கல்முனை மக்கள் நிஜமாகவே மடையர்கள்தான் என்ற நிலையிலா ?

மறைந்த தலைவர் கனவு கண்ட புதிய கல்முனை நகர அபிவிருத்தி என்று ஊடகங்களில் விளம்பரங்களைக்கொடுத்து சில்லறை வேலைத்தி்டங்களைக் கொண்டவந்து பூச்சாண்டி காட்டாமல் தேசத்திற்கு மகுடம் கண்காட்சிக்கு ஒதுக்கப்பட்ட 6 ஆயிரம் மில்லியன் ரூபாயில் கல்முனைத் தொகுதிக்கரிய பங்கை அல்லது ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட 330 மில்லியன் ரூபாவையாவது கொண்டுவாருங்கள். அத்தோடு கிழக்கின் நவோதய அபிவிருத்தித்திட்டங்களாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட அல்லது செலவு செய்ய்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாய்களில் ஒரு சில 100 கோடி ரூபாய்களையாவது கொண்டுவாருங்கள் என்றும் வேண்டுகின்றோம்.

அதைவிடுத்து மாநகர சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் நான் பாலர் பாடசாலை கட்டப் போகின்றபொழுது என்னால் நாட்டப்பட்ட அடிக்கல்லை பிடுங்கி எறிந்துவிட்டு அதற்கு பதில் அடிக்கல்லை நாட்டி பெயரெடுக்க முற்படுவதையும், கல்வித்திணைக்களம் வருடாந்தம் செய்யும் திருத்த வேலைகளை அமைச்சரைக் கூட்டிவந்து அங்குரார்ப்பனம் செய்து அதில் பெயர்வாங்க முற்படுகின்ற வெட்கம்கெட்ட விளம்பரங்களை தவிர்த்துக்கொள்ளமாறும் வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment