மாளிகைக்காடு கமு/அல்-ஹுசைன் வித்தியாலய பிரதி அதிபர் மௌலவி யூ.எல்.எம்.காசிம் வியாழக்கிழமை (2012.02.௦2) தமது 60 வயதுப் பூர்த்தியுடன் தனது 39 வருடகால ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு பெறுகின்றார். அவரது சேவையை நினைவு கூருமுகமாக அவர் கடந்து வந்த பாதையின் முக்கிய நிகழ்வுகளை இங்கு மேலோட்டமாக நோக்குதல் பொருத்தமானது.
சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இவர் தனது பள்ளிக்கல்வியை சாய்ந்தமருது கமு/மல்ஹருஸ் ஸம்ஸ் வித்தியாலயத்திலும், கமு/ஸாஹிறாக் கல்லூரியிலும் கற்று 1964ம் ஆண்டு மார்க்கக் கல்வியையும் கற்றுக் கொண்ட இவர் 1972ல் மௌலவிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். பின்னர் 1973.07.01 ம் திகதி மௌலவி உதவி ஆசிரியராக அ/நாச்சியாதீவு முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் கடமையேற்று சேவை செய்தார்.
1975.12.31ல் இடமாற்றம் பெற்ற இவர் 1976.01.01 முதல் கமு/மல்ஹருஸ் ஸம்ஸ் வித்தியாலயத்தில் மௌலவி உதவி ஆசிரியராக கடமையாற்றும்போதே 1982.02.01 முதல் 31.12.1983 வரை அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலையில் அசிரியர் பயிற்சியைப் பெற்றுக் கொண்டார். அதே பாடசாலையில் தனது சேவையைத் தொடர்ந்த இவர் 01.04.1994 முதல் இடமாற்றம் பெற்று கமு/அல்-ஹுசைன் வித்தியாலயத்தில் பிரதி அதிபராக இன்றுவரை கடமையாற்றி வருகிறார். 2004.12.26ல் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் கடும் பாதிப்பிற்கு உள்ளான இப்பாடசாலையின் கல்வி அபிவிருத்திக்கும் பௌதீக வள வளர்ச்சிக்கும் என்னோடு தோளோடு தோள் நின்று உழைத்த ஒருவர் இவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.
இவரது சேவைகள் கல்வியோடு மாத்திரம் நின்றுவிடவில்லை. சமய விடயங்களிலும், சமூக சேவைகளிலும் இவரது ஈடுபாடு எந்தளவிற்கு இருந்தது என்பதை சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் மறைக்காயர் சபை உறுப்பினராகவும், சாய்ந்தமருது தஃவா இஸ்லாமிய்யா கலாபீட தலைவராகவும் இன்று வரை சேவையாற்றி வருவது சிறந்த எடுத்துக்காட்டாகும்.
சிறந்த ஆசிரியராகவும், பிரதி அதிபராகவும் தனது சேவைகளைச் செய்து எல்லோரினதும் நன்மதிப்பைப் பெற்று இன்று ஓய்வு பெறுகிறார். அவரது ஓய்வுகால வாழ்க்கை நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமும் நிறைந்ததாக அமைய வேண்டுமென எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்திக்கிறேன்.
அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.ஏ.நழீர்
அதிபர்
கமு/அல்-ஹுசைன் வித்தியாலயம்
மாளிகைக்காடு.
thanks: Kalasem
No comments:
Post a Comment