கிழக்கு வளாக துணைவேந்தர் பதவியில் சிங்கள அதிகாரி: கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு துணை வேந்தர் ஒருவரை நியமிப்பதற்காக தமிழர்கள் மூவரின் பெயர்கள் சிபார்சு செய்யப்பட்டு, அவர்களில் ஒருவரை ஜனாதிபதி நியமிப்பதற்கு முன்னதாக குறுகிய கால நிர்வாகத்துக்காக தகுதிவாய்ந்த அதிகாரியாக பணியில் இருந்து வரும் ஒருவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டமை தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக பிரதியமைச்சர் முரளிதரன் குறிப்பிட்துள்ளார்.
கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தரின் கடமைகளுக்காக “தகுதிவாய்ந்த அதிகாரி” என்ற பொறுப்பில் இருந்தவரையே நியமிப்பதாக தகவல் வெளியான நிலையில், அந்த நடவடிக்கையைக் கண்டித்து பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாணவர்களின் இந்தப் போராட்டம் நியாயமானது என்றும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பி.பி.ஸி. தமிழோசையிடம் தெரிவித்துள்ளார் .
இந்த சூழ்நிலையில், உயர்கல்வி அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க அந்த அறிவித்தலை உடனடியாக ரத்து செய்து, புதிய துணை வேந்தரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தம்மிடம் உறுதியளித்துள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார் .