கிழக்கு மாகாண சபை, சம்பிரகமுவ மாகாண மற்றும் வடமத்திய மாகாண சபை ஆகியவற்றின் தேர்தல்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் நடத்தப்படவுள்ளன.
இதற்கான ஏற்பாடுகளை இலங்கையின் தேர்தல்கள் திணைக்களம் மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பில் அண்மையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தனுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பேச்சு நடத்தியிருந்தார்.
இதன் அடிப்படையில் தமது மாகாணசபையை கலைத்து தேர்தலை நடத்துமாறு, கிழக்கு மாகாண முதலமைச்சர் விரைவில் கடிதம் ஒன்றை ஜனாதிபதியிடம் கையளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த மாகாண சபைகளுக்கான ஆயுட்காலம் முடிவடையாதபோதும் தற்போது அரசாங்கத்துக்கு கிராம மட்டத்தில் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி தேர்தலை நடத்திவிடவேண்டும் என்று கட்டாயம் எழுந்துள்ளது.
நாட்டின் பொருளாதார சீர்கேடு மற்றும் விலையுயர்வுகள் என்பவற்றால் நகர மக்கள் மத்தியில் அரசாங்கத்துக்கான செல்வாக்கு குறைந்து வருகிறது எனினும் கிராமப் பகுதிக்கு இன்னும் வறுமை நிலை உரியவகையில் சென்றடையவில்லை.
இந்த பொருளாதார நிலையை விரைவில் சீராக்கமுடியாது என்று அரசாங்கம் நம்புகிறது. இதன் அடிப்படையில் வறுமை கிராமங்களை தாக்கும் முன்னர் அங்குள்ள மக்களின் வாக்குகளை பெற்று மீண்டும் மாகாணசபைகளின் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்பதே அரசாங்கத்தின் உத்தேசமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வடக்கு மாகாணசபை தேர்தல் ஏனைய மாகாணங்களின் தேர்தல்கள் முடிவடைந்த பின்னர் 2013 ஆம் ஆண்டிலேயே நடத்தப்படும் என்று அரசாங்க தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment