அம்பாறை மாவட்டத்திலுள்ள சகல சமூகங்களையும் அரவணைத்துக் கொண்டு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் அமைச்சினூடாக இந்த மாவட்டத்தில் என்னால் முடியுமான பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொள்ளவுள்ளேன் என்று அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் அம்பாரை மாவட்ட அமைப்பாளரும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் இணைப்பாளருமான ஏ.சி.யஹ்யாகான் தெரிவித்தார்.
கல்முனையிலுள்ள அவரது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அமைச்சர் வடக்கு மாகாணத்தில் செய்துள்ள அபிவிருத்தியுடன் அம்பாரை
மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தியை ஒப்பிட்டு பார்க்கும் போது
நாம் அபிவிருத்தியில் எவ்வளவோ பின்னிற்கின்றோம் என்பதை அறிந்து கொள்ளலாம்.
அம்பாரை மாவட்ட இணைப்பாளராக நான் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து
அமைச்சருடன் மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பாக தொடர்ந்தும்
கலந்துரையாடியதன் பயனாக பல இலட்சம் ரூபா நிதிகளை எனக்கு ஒதுக்கி
தந்துள்ளார். கடந்த காலங்களில் உரிமைகள் என்கின்ற மாயையை காட்டி மக்களை சில
கட்சிகள் தம்வசம் வைத்துக் கொண்டன. இப்போது அவைகளை மக்கள் நம்பத் தயாராக
இல்லை. மக்களின் தேவையெல்லாம் அபவிருத்தி என்பதை புரிந்து கொண்டுள்ளோம்.
மயோன் மாவத்தை 10இலட்சம் செலவிலும் மாவடி வீதி, பழைய மார்கட் வீதி போன்ற
வீதிகள் 20இலட்சம் செலவிலும் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. இது போன்று
25பட்டதாரிகளுக்கு அரசதுறையில் வேலைவாய்ப்பு, 35பேருக்கு அரசாங்க செலவில்
சாரதி அனுமதிப்பத்திரம் என்பனவும் பெற்றுக் கொடுத்துள்ளேன்.
அமைச்சரின் அலுவலகத்திற்கு புதன்கிழமைகளில் சென்று பார்த்தால் அவரின்
இன, மத பேதமற்ற செயற்பாடுகளை கண்டு கொள்ளலாம். இவ்வாறான அமைச்சர் ஒருவருடன்
இணைந்து கொண்டு சேவை செய்வது எனக்கு கிடைத்த பாக்கியமாகவே கருதுகின்றேன்.
அமைச்சர் வெகுவிரைவில் அம்பாரை மாவட்டத்திற்கு விஜயம் செய்து இங்கு
தங்கியிருந்து மக்களின் குறைகள், தேவைகள் குறித்து கலந்துரையாடவுள்ளார்”
என்றும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.உதுமாலெப்பை, செயலாளர் ஏ.றியாத், எம்.றியால் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment