Thursday, June 21

மட்டக்களப்பில் சீபிளேன் விமான சேவை பரீட்சார்த்தம் :விரைவில் சேவை ஆரம்பம்(பட இணைப்பு)

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய சிவில் விமான சேவைகள் அமைச்சின் அங்கீகாரத்தில் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு வரை (சீபிளேன்) கடல் விமான சேவையை நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதன் பொருட்டு கொழும்பு சீதுவைப் பிரதேசத்திலுள்ள தண்டன் ஓயா வாவியிலிருந்து இந்தப் பரீட்சார்த்த விமானம் புறப்பட்டு இன்று மட்டக்களப்பு வாவியில் வந்து தரையிறக்கப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட தகவல் ஊடக அதிகாரி பி.ரீ.அப்துல் லத்தீப் தெரிவித்தார்.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு வாவியில் வந்திறங்கிய இவ்விமானத்தில் வந்த சிவில் விமான சேவை அதிகார சபை மற்றும் ஸ்ரீலங்கா விமான சேவை அதிகாரிகளை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் வரவேற்றார்

.



மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு எதிரேயுள்ள வாவியில் விமானம் இறக்கப்பட்டு கடற்படை இயந்திரப்படகுகள் மூலம் மட்டக்களப்பு பொது நூலகத்துக்கு முன்பாகவுள்ள மட்டக்களப்பு வாசல் பகுதியில் விமானத்தில் வந்த அதிகாரிகள் குழு இறக்கப்பட்டனர்.

இதன் போது விமான நிலைய அதிகாரசபையின் நிறைவேற்று அதிகாரி ஆர்.லூசியன், நிறைவேற்று பொறியியலாளர் கலாநிதி நாமலி ஸ்ரீசோம ,ஸ்ரீலங்கன் விமான சேவை உற்பத்தி வளர்ச்சி முகாமையாளர் சஞ்ஜீவ ஜெயதிலக ஆகியோருடன் பல பொறியியலாளர்கள் குழு வாவியில் இறக்கப்பட்ட விமானத்தில் வருகை தந்திருந்தனர்.

இந்த விமான பரீட்சார்த்தப் பணிகள் நிறைவுபெற்றதும் இந்தக் கடல் விமான சேவை கொழும்பிலிருந்து மட்டக்களப்பு ,பாசிக்குடா பகுதிகளுக்கு சேவையிலீடுபடுத்தப்படவுள்ளதாக அபிவிருத்தி முகாமையாளர் சஞ்ஜீவ ஜெயதிலக தமது தகவலில் தெரிவித்தார்.

இந்தப் பரீட்சார்த்த கடல் விமானம் மட்டக்களப்பு வாவியில் தரையிறங்குவதைக் கண்டு களிக்க பெருமளவிலான மக்கள் இப்பகுதியில் ஒன்று கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் இலகுவான பயணத்திற்கு இந்த விமான சேவை ஆரம்பிக்கப்பட வேண்டுமென்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, சிவில் விமான சேவைகள் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்தினவிடம் விடுத்த ஆலோசனைக்கமையவே இந்த சீபிளேன் கடல் விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ___

No comments:

Post a Comment