ஆழ்கடல் கொள்ளையர்களினால் கல்முனை இயந்திரப்படகு மீனவர்களின் மீன்கள்
வலையுடன் வெட்டப்பட்டு திருட்டுத்தனமாக கொண்டு செல்லப்படுவதோடு
அச்சுறுத்தல்கள் மற்றும் உயிராபத்துக்களுக்கும் ஆளாகிவருவதாக அம்பாறை
மாவட்ட ஆழ்கடல் இயந்திரப்படகு கூட்டுறவு மீனவர் சங்கத்தின் தலைவர்
தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணத்தில் இயந்திரப்படகு மூலம் அதிகம் ஆழ்கடல்
மீன்பிடித்துறையில் ஈடுபட்டு வரும் பிரதேசமாக கல்முனை பிரதேசம்
காணப்படுகின்றது. இங்கு 247 பெரிய இயந்திரப்படகுகள் மீன்பிடித்துறையில்
ஈடுபடுத்தப்பட்டுவருவதுடன் சுமார் 8000 மீனவர் குடும்பங்கள் நன்மை பெற்று
வருகின்றன.
மீன்பிடித்துறையில் அதிக பங்களிப்புச் செய்துவரும் இப்பிரதேச மீனவர்கள்
நாளாந்தம் எதிர் நோக்கி வரும் பிரச்சினைகள் மற்றும் துயரச்சம்பவங்களை பல
முறைகள் எடுத்துக் கூறியும் மீன்பிடி அமைச்சோ அல்லது மீன்பிடித்திணைக்களமோ,
பொலிஸாரோ, பிரதேச செயலகமோ, அதிகாரிகளோ கவனத்தில் கொண்டதாக இல்லை.
நேற்று முன்தினம் இரவு(02) மீன்பிடிக்குச் சென்றிருந்த இயந்திரப்படகுகளின்
வலைகளும், மீன்களும் திருட்டுத்தனமாக வெட்டியெடுத்துச் செல்லப்பட்டள்ளன.
இவ்வாறு திருடப்பட்ட மீன்களை தூர இடத்திலிருந்து வரும் கூளர் வாகனங்கள்
மூலம் கொண்டு செல்லப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். இதனை எமது சங்கம்
மீன்பிடி திணைக்கள அதிகாரிகளிடம் தெரிவித்து விட்டு, கல்முனை பொலிஸாரிடமும்
முறைப்பாடு செய்துள்ளது. இவ்வாறு 1990ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வரும்
சம்வங்களால் பல மீனவர்களின் உயிரிழப்புக்கள் மட்டுமல்லாது மீன்பிடி
படகுகள், உபகரணங்கள், சொத்துக்கள் இழப்புக்களுக்கும், நஷ்டத்திற்கும்
ஆழாகிவருகின்றனர். மேலும் இதனால் பிரதேச மற்றும்; இன மோதல்களும்
ஏற்படுவதற்கான பல சந்தர்ப்பங்கள் ஏற்பட்ட போதிலும் அவைகள் சங்கத்தனூடாக
சமரசமாக தீர்த்து வைக்கப்பட்டு வந்துள்ளன.
எனவே தொடர்ச்சியாக இப்பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் ஆழ்கடல் மீன் பிடிக்கான
அச்சுறுத்தல்கள், ஆபத்துக்கள், இழப்புகள் தொடர்ந்தும் இடம்பெறாவண்ணம்
கடற்தொழில் மீன்பிடித்துறையில் நேரடித் தொடர்புடைய மீன்பிடித்தினைக்களம்
நடவடிக்கை எடுத்து பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கையினை உடன்
மேற் கொள்ள வேண்டும் என அம்பாறை மாவட்ட இயந்திரப்படகு கடற்தொழில் மீனவர்
கூட்டுறவுச் சங்கம் அனைவரினதும் சார்பாக கோரிக்கை விடுப்பதாக
தெரிவிக்கின்றது.
No comments:
Post a Comment