க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகளில் சித்தியடையத் தவறிய
மற்றும் தொழில்வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அம்பாறை மாவட்ட
இளைஞர், யுவதிகளை தொழிற்பயிற்சி கற்கைளுக்கு இணைத்துக் கொள்வதற்கான
விழிப்பூட்டல் செயமர்வுகள் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளன. இளைஞர் விவகாரம்
மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் கீழியங்கும் இலங்கை மனித வள
அபிவிருத்தி மன்றம் இதனை ஏற்பாடு செய்துள்ளது.
இம்மாவட்டத்திலுள்ள தமிழ் மொழிமூல இளைஞர் யுவதிகளுக்கான செயலமர்வு
சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் இம்மாதம் 29ஆம் திகதி புதன்
கிழமையும், சிங்கள மொழிமூல இளைஞர்களுக்கான செயலமர்வு அம்பாறை நகர சபை
மண்டபத்தில் எதிர்வரும் 30ஆம் திகதி வியாழக்கிழமையும் நடைபெறவுள்ளது.
சாதாரண தரம் சித்தியடையத் தவறுகின்ற இளைஞர்கள் தமது எதிர்காலம் சூனியமாகி
விடுவதாக எண்ணுகின்றனர். சமூகமும் அவர்களை பயனற்றவர்களாகவே நோக்குகின்றது.
ஆனால் இவ்வாறானவர்கள் என்.வி.கியு. எனப்படும் தேசிய தொழில்சார் தகமை
அப்படையில் தொழிற்பயிற்சி கற்கைநெறிகளை தொடர்வதன் ஊடாக ஒரு பட்டதாரிக்கு
சமமான தகுதியுடன் வெளியேற முடியும் என்பதை தெளிவுபடுத்துவதே இதன்
நோக்கமாகும்.
எனவே இதனைக் கருத்திற்கொண்டே தேசிய மனிதவள அபிவிருத்தி மன்றமானது
திறனபிவிருத்தி அமைச்சின் கீழியங்கும் ஏனைய தொழில்சார், தொழில்நுட்பப்
பயிற்சி நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து இந்த செயலமர்வுகளை பிரமாண்டமான
முறையில் நடாத்தி வருகின்றது.
இதற்கமைய திருமலை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான செயலமர்கள் நடைபெற்றது.
அம்பாறை மாவட்டத்திற்காக ஏற்பாடு செய்யப்படும் செயலமர்வுகளில்; 1500 முதல்
2000 வரையான இளைஞர் யுவதிகள் பங்குபற்றுவார்கள் என
எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை, தொழில்நுட்பப் பயிற்சித் திணைக்களம்,
தேசிய தொழில் பயிலுனர் கைத்தொழிற்பயிற்சி அதிகார சபை, மனிதவள அபிவிருத்தி
மன்றம், கடல்சார் பல்கலைக்கழகம் மற்றும் இளைஞர் சேவைகள் மன்றம் ஆகியவற்றின்
சேவைகள் மற்றும் தொழில்வாய்ப்புக்கள் குறித்து இதன்போது
விளக்கமளிக்கப்படும்.
No comments:
Post a Comment