Wednesday, May 22

பொத்துவில் முஸ்லிம்களுக்கு பொதுபல சேனா நேரடி அச்சுறுத்தல்..?


பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பூவரசடித்தோட்ட முஸ்லிம்களின் காணிகளுக்குள் செல்லத்தடை போட்டார்கள் பொதுபலசேனா அமைப்பை சேர்ந்தவர்கள் என்று தங்கள் அடையாளப்படுத்தியவர்கள் என்று தெரிவிக்கிறார்கள் அக்காணிகளின் உரிமையாளர்கள்.
கடந்த 16ம் திகதி வியாழக்கிழமை பொத்துவில் பசறிச்சேனையை சேர்ந்த பொதுமக்கள் மேற்படி தங்களது சொந்தக்காணிக்குள் சென்றவேளையில் அவ் இடத்திற்கு வந்த 5 நபர்கள் தங்களை பாதுகாப்புப்படை என்றும், ஆமுதுறு என்றும், வானபரிபாலன அதிகாரிகள் என்றும் அடையாளப்படுத்தியதுடன் காணிகள் எங்களுக்குச் சொந்தமானது என்றும் இக் காணிகளுக்குள் முஸ்லிம்கள் வருகை தரக்கூடாது என்றும் அப்படி வருகை தரும் பட்சத்தில் நடவடிக்கை மேற்கொள்வோம் எனக் கூறியதுடன் கடிதம் ஒன்றிலும் கையொப்பம் இடுமாறு கூறி கையொப்பம் வாங்கிச்சென்றுள்ளனர்.
மயிலான் ஓடை பூவரசடித்தோட்டப்பகுதியில் உள்ள நாவலாறு பகுதியில் சுமார் 530 ஏக்கர் காணிகள் முஸ்லிம்களுக்கு உள்ளன, இவற்றில் சுமார் 2 அல்லது 3 சதவீதம் மட்டுமே தமிழ், சிங்கள சகோதரர்களுக்கு சொந்தமானவையாகும். அப்பகுதியில் உள்ள விகாரைக்கென சுமார் 2500 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பிடப்படும் காணிகள் சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் வேளாண்மை செய்யப்பட்டுவந்தது இதற்கு பின்னர் வெள்ளம் தாக்கியதால் இங்கு வேளாண்மை செய்கை குறைவடைந்தது பின்னர் யுத்தம் நிலவியதால் பலவருடகாலமாக காணிச்சொந்தக்காரர்கள் அங்கு செல்லவில்லை. அக்காலத்தில் காடுகள் வளர்ந்து காணப்பட்டது. அப்பிரதேசத்தில் சிலர் தங்களது அன்றாடத் தொழிலாக செங்கற்கள் வெட்டுவதனை செய்து வந்தார்கள் சிலர் இப்போதும் செய்து வருகிறார்கள்.
வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் இம் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட சதித்திட்டம் தீட்டப்படுவதாக ஐயம் கொண்டுள்ளனர். காணிகளுக்குரிய அனுமதிப்பத்திரம் தங்களுக்கு உள்ளதாகவும், காணிகளில் பலவருடங்களாக விவசாயம் மேற்கொண்டமைக்கான ஆதாரங்கள் கூட தங்களிடம் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமல்லாது இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய முடியாமல் ஐயப்படுவதாகவும், இது தொடர்பாக பொத்துவில் பிரதேச செயலாளர், பொத்துவில் பிரதேசசபை தவிசாளர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகம் ஆகியோருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும், ஏனைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் சம்பவ இடத்திற்கு சென்று வந்தவர்களும், வட்டவிதானையும் தெரிவித்தார்கள்.

No comments:

Post a Comment