Sunday, May 19

ஒலுவில் கடலில் மீட்கப்பட்ட பங்களாதேஷ் நாட்டவர்கள் திருப்பியனுப்பப்பட்டனர்

ஒலுவில் கடற்பரப்பில் கடந்த பெப்ரவரி மாதம் கடற்படையினரால் மீட்கப்பட்ட 61 பங்களாதேஷ் நாட்டவர்கள் இன்று தமது நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இலங்கையிலுள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டிலேயே இவர்கள் இன்றைய தினம் மிஹின் லங்கா விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
பங்களாதேஷிலிருந்து படகு மூலம் மலேசியா நோக்கிப் பயணித்த பங்களாதேஷ் மற்றும் மியன்மாரைச் சேர்ந்த  138 பேர்  அப் படகு கவிழ்ந்ததன் காரணமாக இலங்கையின் ஒலுவில் கடற்பரப்பில் தத்தளித்தபோது இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டனர்.
பின்னர் இவர்கள் நீதிமன்ற உத்தரவின்பேரில் பூசா மற்றும் மிரிஹான தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களில் பங்களாதேஷ்வாசிகள் 61 பேர் மாத்திரம் அந்நாட்டு தூதரகத்தால் அடையாளம் காணப்பட்டு இன்றைய தினம் தமது நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இதேவேளை மீட்கப்பட்ட மியன்மாரைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்தும் தடுப்பு முகாம்களிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கோரி இலங்கை வெளிவிவகார அமைச்சு மியன்மாருக்கு அறிவித்தபோதிலும் அங்கிருந்து இதுவரை எந்தவித பதிலும் கிடைக்கவில்லை என அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment