எதிர்வரும்
09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கல்முனையின் பொதுபல சேனாவின் கூட்டம்
நடைபெறவுள்ளது. இதுகுறித்து பல்வேறு சந்தேகங்கள் நிலவும் நிலையில், குறித்த
தினத்தில் பொதுபல சேனாவின் கூட்டம் நடைபெறுமென்று பொதுபல
சேனாவின் திட்டமிடல் அதிகாரி டாக்டர் டிலந்த விதானகே உறுதியாகத்
தெரிவித்துள்ளார்.
ஆனால், கல்முனையில் சுபத்ராம விகாரை ஒன்று
மாத்திரே உள்ளது. இதற்கு ஒரேயொரு பிக்கு மாத்திமே அங்கு கடமையாற்றுகிறார்.
சிங்கள குடும்பங்களே இல்லாத, முஸ்லிம்கள் செறிந்து வாழும் கல்முனையில்
பொதுபல சேனா கூட்டத்தை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளதன் பின்னணியில் சமூக
மட்டத்தில் பலத்த சந்தேகங்களை எழுந்துள்ளன.
பொதுபல சேனாவுக்கு எதிராக கல்முனை
மாநகரசபையில் பிரேரணை ஒன்றும் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் பொதுபல சேனாவின்
செயற்பாடுகளைக் கண்டித்து கல்முனை உள்ளிட்ட பல முஸ்லிம் பிரதேசங்களில்
பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
மேற்படி கூட்டத்தை கல்முனையில் பொதுபல
சேனா நடாத்துமேயானால் பாரிய வன்முறைகள் வெடிக்கும் அபாயம் உள்ளது. இதனால்
சிங்கள – முஸ்லிம் இனத்துக்கிடையே பாரிய முறுகல்நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக
கல்முனை பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டுவரும்
பெளத்த கடும்போக்கு அமைப்பான பொதுபல சேனா முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்ற,
முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ள கல்முனை மாநகரசபையில் கூட்டம் நடத்த
முற்படுவது வன்முறைகளை தூண்டுவதற்கான ஒரு முயற்சியே அன்றி வேறில்லை.
இதுதொடர்பாக கல்முனை மாநக மேயர் சிராஸ்
மீராசாஹிபுடன் தொடர்புகொண்டு கேட்டபோது, மேற்படி கூட்டத்தை நடாத்துவதற்கு
கல்முனை மாநகரசபையினால் எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை என்று
தெரிவித்தார்.
இதேவேளை, கல்முனையில் நடைபெறவுள்ள பொதுபல
சேனாவின் கூட்டத்தை தடுத்து நிறுத்துமாறு கிழக்கு மாகாணசபை உறுப்பினர்
ஏ.எம்.ஜெமீல் அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும்
தெரிவித்துள்ளதாவது; இதனை அரசாங்கம் அனுமதிக்குமாயின் பாரதூரமான விளைவுகள்
ஏற்படலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார். பொதுபல சேனா அமைப்பினர் இந்த
நாட்டில் சிங்கள – முஸ்லிம் கலவரமொன்றை ஏற்படுத்துவதற்கான பிரயத்தனங்களில்
ஈடுபட்டுள்ளனர்.
அதேவேளை கிழக்கு மாகாண சபையில் பொதுபல
சேனா அமைப்புக்கு எதிராக கண்டனப் பிரேரணையை சமர்ப்பித்து அதனை ஏகமனதாக
நிறைவேற்றி அரசின் கவனத்தை ஈர்த்து பேரின நடவடிக்கைகளை கட்டுப்படுத்த
வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினோம்.
பேரினவாத அமைப்புகளின் இவ்வாறான
நடவடிக்கைகளை அரசு தொடர்ந்தும் அனுமதிக்குமாயின் முஸ்லிம்களின் அதிகபட்ச
ஆணையைப் பெற்று கிழக்கு மாகாண ஆட்சிக்கு ஆதரவு கொடுத்துள்ள எமது முஸ்லிம்
காங்கிரஸ் மாற்றுத் தீர்மானங்களை எடுக்க நேரிடும் என்கின்ற செய்தியை மாகாண
சபையின் குழுத் தலைவர் என்ற ரீதியில் சொல்லி வைக்க விரும்புகின்றேன் என்று
அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(முஹம்மட் பிறவ்ஸ்)
No comments:
Post a Comment