சாய்ந்தமருதில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மீனவர் வாசிகசாலை மற்றும் பீச் பாக் என்பவற்றின் சுற்று மதில்களையும் மீனவர் ஓய்வு மண்டபம் உள்ளிட்ட மூன்று கட்டிடங்களையும் ஏழு நாட்களுக்குள் உடைத்து அகற்றுமாறு கரையோரப் பாதுகாப்பு திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.
கல்முனை மாநகர சபையினால் நிர்மாணிக்கப்பட்ட சாய்ந்தமருது மீனவர்
வாசிகசாலை அண்மையில் அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் திறந்து வைக்கப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று கல்முனை மாநகர சபையினால் சாய்ந்தமருது கடற்கரையில்
அமைக்கப்பட்டு, இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பீச் பாக்கின் சுற்றுமதில்
நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன.
அத்துடன் கல்முனை மாநகர சபையினால் மீனவர் ஓய்வு மண்டபம் எனும் பெயரில் கட்டிடம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
ஏனைய இரண்டு கட்டிடங்களும் தனியாரினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளவையாகும்.
இவற்றின் நிர்மாணப் பணிகளுக்காக கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தின்
அனுமதி பெறப்படவில்லை எனத் தெரிவித்தே இவ்வைந்து நிர்மாணங்களையும் உடைத்து
அகற்றுமாறு அத்திணைக்களம் உத்தரவிட்டுள்ளது என
தெரிவிக்கப்படுகிறது.
இதற்கான கட்டளைப் பத்திரம் நேற்று வியாழக்கிழமை குறித்த இடங்களில்
ஒட்டப்பட்டுள்ளன. இக்கட்டளைப் பத்திரம் ஓட்டப்பட்டத்தில் இருந்து ஏழு
நாட்களுக்குள் இவை உடைத்து அகற்றப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேவேளை இக்கட்டளை தொடர்பில் ஆட்சேபனைகள் ஏதும் இருக்குமாயின் மூன்று
நாட்களுக்குள் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளருக்கு
மேன்முறையீடு செய்ய முடியும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தின் அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக-
முறையற்ற விதத்தில் மேற்படி நிர்மாணங்கள் இடம்பெறுவது தொடர்பில் தமது
திணைக்களம் சம்மந்தப்பட்டோருக்கு பல தடவை சுட்டிக்காட்டி வந்தது.
எனினும் அவை குறித்து கவனம் செலுத்தாமல் தன்னிச்சையாக நிர்மாணப் பணிகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளமையினாலேயே இந்நடவடிக்கையை எடுக்க வேண்டிய தேவை
ஏற்பட்டுள்ளது” என திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment