Friday, December 30

கிழக்கு அரசியல்வாதி ஒருவருக்கு எதிராக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் ஆர்பாட்டம் (படங்கள்


கிழக்கு அரசியல்வாதி ஒருவருக்கு எதிராக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் ஆர்பாட்டம் (படங்கள்)மட்டக்களப்பு - காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினரால் இன்று (30) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலவச அப்பியாசப் புத்தகம் வினியோகிப்பதற்கு ஹிஸ்புல்லா கலாசார மண்டபம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று மாலை ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

காத்தான்குடியின் முக்கிய அரசியல்வாதி ஒருவரின் அழுத்தம் காரணமாக முற்பதிவு செய்யப்பட்டிருந்த ஹிஸ்புல்லா கலாசார மண்டபத்தினை வழங்க நகர சபைத் தவிசாளர் மறுப்புத் தெரிவித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக இயக்கத்தினர் தெரிவித்தனர்.

இன்று வெள்ளிக்கிழமை மாலை ஹிஸ்புல்லா கலாசார மண்டபத்தின் முன்னால் இயக்கத்தினர், மற்றும் பெற்றோர்கள் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஒருவாரத்துக்கு முன்னரே மண்டபத்துக்கான முற்பதிவு செய்யப்பட்டபோதும் மண்டபம் வழங்குவதற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் தாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.


கலாசார மண்டபம் முற்பதிவு செய்யப்பட்டிருந்த போதும் அம் மண்டபத்தினை இறுதி நேரத்தில் வழங்க முடியாது என காத்தான்குடி நகரசபை தவிசாளர் மறுப்புத் தெரிவித்ததாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் "ஏழை மாணவர்களுக்கு உதவி வழங்க மறுக்கும் பிரதி அமைச்சரே நீ என்ன தங்க மகனா", "தவிசாளரே மக்கள் வழங்கிய அதிகாரத்தை அவர்களுக்கெதிராகப் பயன்படுத்தாதே", "கல்விக்கு உயிர் கொடுத்த காவியத் தலைவரைப்பாரீர்" எனக் கோஷங்களை எழுப்பியதோடு சுலோகங்களையும் ஏந்தியிருந்தனர்.

காத்தான்குடி பிரதான வீதியில் உள்ள ஹிஸ்புல்லா கலாசார மண்டபத்தின் முன்பு ஆரம்பமாகிய ஆர்ப்பாட்டம், பிரதான வீதி வழியாக கடற்கரை வீதியில் உள்ள நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் மக்கள் அரங்குக்குச் சென்றது.

இதில், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொது மக்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பெருந்தொகையானோர் கலந்து கொண்டனர்.

கடந்த மூன்று வருடங்களாக வறிய நிலையிலுள்ள மாணவர்களுக்கு அப்பியாசப்புத்தகங்களை வழங்கிவரும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் இவ்வருடம் 8000 மாணவர்களுக்கு அப்பியாசப் புத்தகங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து ஏற்கனவே அவ்விநியோகத்தினை ஆரம்பித்துள்ளது.

அதன் ஒரு கட்டமாக இன்றைய தினம் 500 மாணவர்களுக்கு அப்பியாசப் புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டன.

அதனையடுத்து, மாணவர்களுக்கு வழங்க இருந்த அப்பியாசப் புத்தகங்கள் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினால் மாணவர்களுக்கு கடற்கரை வீதியில் உள்ள நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் மக்கள் அரங்கில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.    
கிழக்கு அரசியல்வாதி ஒருவருக்கு எதிராக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் ஆர்பாட்டம் (படங்கள்)

No comments:

Post a Comment