Monday, February 20

நாடு மற்றும் நகர திருத்த சட்டமூலம்; முஸ்லிம் காங்கிரஸ் எதிர்ப்பு

SLMC logo 1_CI
நாடு மற்றும் நகர திட்டமிடல் திருத்த சட்டமூலத்தை எதிர்ப்பது என்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று ஞாயிற்றுக்கிழமை தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது என அக்கட்சியின் பொது செயலாளர் ஹசன் அலி தெரிவித்தார்.


‘இச்சட்ட மூலத்தின் ஊடாக மாகாண சபைகளுக்குள்ள அதிகாரங்கள் பறிக்கப்படுகின்றன. இதனால் சிறுபான்மையினத்தவர் பாதிக்கப்படுகின்றனர். இதனாலேயே இச்சட்ட மூலத்தை எதிர்க்கின்றோம்’ என அவர் குறிப்பிட்டார்.
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டவுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் ஊடாகவே நாடு மற்றும் நகர திட்டமிடல் திருத்த சட்ட மூலத்திற்கு தீர்வு காண வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிணங்க எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபையில் இச்சட்டமூலம் முன்வைக்கப்பட்டால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்த்தே வாக்களிப்பர் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி தெரிவித்தார்.
குறித்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமார்பிக்கப்பட்டால் ஆளும் தரப்பிலுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு என்ன என வினவியதற்கு, அப்போதும் எதிராகவே வாக்களிப்போம் என அவர் குறிப்பிட்டார்.
நாடு மற்றும் நகர திட்டமிடல் திருத்த சட்ட மூலம் இதுவரை மேல் மாகாண சபையில் மாத்திரம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment