Saturday, May 5

தம்புள்ள பள்ளியை அகற்ற முயன்றமைக்காக பௌத்தன் என்ற வகையில் வெட்கப்படுகிறேன்


எனது நிர்வாகத்தின் கீழுள்ள பகுதிகளில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் காக்கிச் சட்டையைக் கழற்றி விட்டு பதவியையும் இராஜினாமா செய்வேன் என அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரேமலால் ரணகல தெரிவித்தார்.
உருவ வழிபாடற்ற உள்ளத்தையும் சிந்தயையும் ஒருமுகப்படுத்தி ஏக இறைவனை வணங்குபவர்கள் முஸ்லிம்கள் மாத்திரமே. உண்மையில் இஸ்லாம் ஒரு சிறந்த மார்க்கமாகும் ஜனாதிபதிக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டி அண்மையில் வரிப்பத்தான்சேனைஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்ட அன்னதானம் வழங்கும் நிகழ்விலும் துஆப் பிரார்த்தனையிலும் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அவர் மேலும் தெரிவித்ததாவது, முஸ்லிம்களின் வேத நூலான புனித அல்குர்ஆனை நான் படித்து வருகின்றேன். முஸ்லிம்களின் சமய விடயங்களை தினமும் விளங்கி வருவதுடன் அவர்களின் சமயத் தலங்களையும் தரிசித்து வருகின்றேன். புனித மக்கா நகர் செல்லவும் பேரவா கொண்டுள்ளேன். மரணித்தவுடன் எவ்வித தாமதமுமின்றி ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் முஸ்லிம்களின் பணியை ஏனைய சமயத்தவர்கள் இன்று வரவேற்றுப் பேசுகின்றனர்.


இதுபோன்ற இஸ்லாத்தின் சிறந்த பழக்க வழக்கங்களால் இஸ்லாம் மார்க்கம் எதிர்காலத்தில் வேகமாகப் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கைத் திருநாட்டில் முஸ்லிம்கள் காலா காலமாக சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் உதவிக்கரம் நீட்டி வந்துள்ளனர். ஒரு சமயம் கொழும்பு புதுக்கடைப் பகுதியில் பௌத்தபிக்கு ஒருவர் வாகன விபத்துக்குள்ளான போதுஅவரின் உயிரைக் காப்பாற்றுவதற்காக இரத்தம்வழங்கியவர் முஸ்லிம் சகோதரர் ஒருவரேயாவார்.

இவற்றையெல்லாம் மறந்து இன்று தம்புள்ளை போன்ற பிரதேசங்களிலுள்ள முஸ்லிம்களின் பள்ளிவாசல்களை அகற்றுவதற்கு எனது இனத்தைச் சேர்ந்த சில தீய சக்திகள் முயற்சிப்பதையிட்டு ஒரு பௌத்தன் என்ற வகையில் நான்வெட்கித் தலை குனிய வேண்டியுள்ளது.

ஒற்றுமையுடன் வாழ்கின்ற சிங்கள, முஸ்லிம் மக்களிடையே பிரிவினையையும் குழப்பத்தையும் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இதனை இலங்கையின் எந்தவொரு குடிமகனும் அனுமதிக்க முடியாது. ஒவ்வொருவரும் தத்தமது சமயக் கடமைகளை நிறைவேற்றும் பொருட்டு இலங்கையின்எப்பாகத்திலும் சமயத் தலங்களை நிர்மாணிக்கஉரிமை பெற்றுள்ளனர் என்று அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment