கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு தேர்தல் நடைபெறுமாக இருந்தால் பல புதிய முகங்களை வேட்பாளராக களமிறக்குவதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.
கிழக்கு மாகாண சபை கலைக்கப்படுவது உறுதியாக்கப்பட்டுள்ள நிலையில் வேட்பாளர் தெரிவு தொடர்பாக அக் கட்சி மிகத் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது.
இதன் அடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸ் அண்மையில் இணைந்து கொண்ட ஹாபிஸ் நஸீர் அஹமட் மட்டக்களப்பு மாவட்டத்தில் தலைமை வேட்பாளராக போட்டியிடவுள்ளார். அம்பாறை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம். மன்சூரின் புதல்வர் றஹ்மத் மன்சூரை கல்முனை சார்பாகவும் சம்மாந்துறை சார்பாக சவூதி அரேபிய தூதுவராலயத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி ஐ.எல்.எம்.மாஹிரையும் சாய்ந்தமருது சார்பாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவர் அப்துல் மஜீத்தையும் அட்டாளைச்சேனை சார்பாக கட்சியின் ஸ்தாபக பொதுச் செயலாளர் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூரையும் களமிறக்குவதற்கு மு.கா.தலைவர் விரும்பியுள்ளதாக தெரியவருகின்றது.
கல்முனை பிரதேசத்தில் மு.கா. சார்பாக உள்ள மாகாண சபை உறுப்பினர் களுக்கு மக்கள் செல்வாக்கு இல்லாத நிலையில் அவர்களை மீண்டும் களமிறக்கி கட்சியை தோல்வியடையச் செய்ய ஹக்கீம் விரும்பவில்லை என்றும் அதனாலேயே புதிய முகங்களை களமிறக்குவதற்கு அவர் யோசித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கல்முனை மாநகர சபை மேயர் சிராஸ் மீராசாஹி களமிறக்கி சட்டத்தரணி நிசாம் காரியப்பரை மேயராக்கும் ஒரு திட்டமும் முஸ்லிம் காங்கிரஸ் உயர் மட்டத்திடம் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இது இவ்வாறிருக்க முதலமைச்சர் வேட்பாளராக ஹாபிஸ் நஸீர் அஹமட் அல்லது மாகாண சபை உறுப்பினரும் கட்சியின் பிரதித் தவிசாளரும் ஓய்வு பெற்ற பொலிஸ் அத்தியட்சகருமான எம்.அப்துல் மஜீத் ஆகிய இருவரில் ஒருவரை நியமிப்பதற்கும் ரவூப் ஹக்கீம் ஆராய்ந்து வருவதாகக் கூறப்படுகின்றது.
முஸ்லிம் காங்கிரஸ் இவ்வாறான முடிவில் இருக்கின்ற போது பிரதி அமைச்சர் பசீர் சேகுதாவுத் அலிசாஹிர் மௌலானாவை முதலமைச்சராக்குவதற்கு விரும்பியுள்ளதாகவும் அது தொடர்பாக மிக இரகசியமான முறையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அவர்கள் இருவரும் சந்தித்துள்ளதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.
இந்த விடயம் மு.கா. தலைவருக்கு எட்டியுள்ளதாகவும் இதனாலேயே ஹாபிஸ் நஸீரை களமிறக்குவதற்கு ஹக்கீம் உறுதியாகவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. மு.கா. மாகாண சபை உறுப்பினர்களாக உள்ள கல்முனை ஜவாத்தும் சாய்ந்த மருது ஜெமீலும் தங்களுக்கு போட்டியிட சந்தர்ப்பம் வழங்காவிட்டால் அமைச்சர் அதாவுல்லாவுடன் சேர்ந்து போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரியவருகிறது.
No comments:
Post a Comment