(அஸ்லம் எஸ்.மௌலானா)
ஒலுவில் துறைமுக அபிவிருத்திக்கென இரண்டாம் கட்டமாக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்குரிய நஷ்டஈட்டுத் தொகையை மேலும் தாமதிக்காமல் துரிதமாக பெற்றுத் தருவதற்கு உரிய நடவடிக்கை எடுத்து உதவுமாறு முஸ்லிம் அமைச்சர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஒலுவில் துறைமுக அபிவிருத்திக்கென இரண்டாம் கட்டமாக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்குரிய நஷ்டஈட்டுத் தொகையை மேலும் தாமதிக்காமல் துரிதமாக பெற்றுத் தருவதற்கு உரிய நடவடிக்கை எடுத்து உதவுமாறு முஸ்லிம் அமைச்சர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் சார்பில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ஏ.எல்.எம்.அதாஉல்லா, றிஷாட் பதியுத்தீன் ஆகியோருக்கு மகஜர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அந்த மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
“ஒலுவில் துறைமுக அபிவிருத்திக்கென இரண்டாம் கட்டமாக 2008ம் ஆண்டு 39 பேருக்கு சொந்தமான காணிகள் சட்டப்படி சுவீகரிக்கப்பட்டது. அதன்படி 2008.06.04ஆம் திகதி 1552/12ம் இலக்க அதி விஷேட வர்த்தமானிப் பத்திரிகையில் இது பிரகடனம் செய்யப்பட்டது.
இக்காணிகள் சுவீகரிக்கப்பட்டு விலை மதிப்புத் திணைக்கள உத்தியோகத்தர்களின் மதிப்பீட்டின் பிரகாரம் நிர்ணயிக்கப்பட்ட நஷ்டஈட்டுத் தொகை இது வரையிலும் எமக்கு கிடைக்கவில்லை. இது ஜனநாயகத்திற்கும் மனிதநேயத்திற்கும் முரணான செயலாகும்.
அரசு எமக்கான நஷ்டஈட்டுத் தொகையினை துரிதமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி துறைமுக அதிகார சபை தலைவருக்கு பல தடவைகள் எழுத்து மூலம் தெரிவித்தும் கூட தற்போது 3 வருடங்கள் பூர்த்தியாகியும் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அதன் காரணமாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் 2011.10.07 இல் இவ்விடயம் சம்பந்தமாக எம்மால் முறைப்பாடு செய்யப்பட்டது.
குறித்த மதிப்பீட்டுத் தொகை அதி கூடியதென்றும் இது சம்பந்தமாக மீள்பரிசீலனை செய்வதற்காக மதிப்புத் திணைக்கள உயர் அதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் அவரின் அறிக்கை கிடைத்தவுடன் நஷ்டஈடு வழங்குவது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க முடியுமென்றும் துறைமுக அதிகார சபையின் அத்தியட்சகரினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு 2012.03.09 ஆம் திகதி அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
ஆனால் விலைமதிப்புத் திணைக்களத்தினால் மதிப்பீட்டுத் தொகை சம்பந்தமாக பரீட்சித்துப் பார்த்ததன் பிற்பாடு மீள்பரீசிலனை செய்யப்பட மாட்டாது (குறைக்கப்பட மாட்டாது) என அத்திணைக்கள உயரதிகாரியினால் காணி, காணி அபிவிருத்தி அமைச்சுக்கும் துறைமுக அதிகார சபைக்கும் தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்திற்கும் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளருக்கும் 2011.12.30 ஆம் திகதிய கடித மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சினை சம்பந்தமாக ஜனாதிபதி அவர்களுக்கும் பல தடவைகள் எழுத்து மூலம் தெரிவிக்கப்பட்டது. கடைசியாக 2012.02.14 ஆம் திகதி தெரிவிக்கப்பட்டிருந்தும் இதுவரையில் துறைமுக அதிகார சபையினால் சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை.
இவ்வாறு காணிகளை இழந்த மக்கள் கடந்த மூன்று வருடங்களாக ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. 2009 ஆம் ஆண்டு விலை மதிப்புத் திணைக்களத்தால் மதிப்பீடு செய்யப்பட்ட காணிகளுக்குரிய தொகை அதிகூடியது என பொறாமையின் காரணமாக சில விஷமிகளால் அனுப்பப்பட்ட போலிக் கடிதங்களை காரணம் காட்டி பொறுப்பு வாய்ந்த உயரதிகாரிகள் பல நொண்டிச் சாட்டுக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இது மிகவும் மனவேதனைக்குரிய விடயமாகும். அரச விலை மதிப்பீடு பற்றி விமர்சனம் செய்வதற்கு எவருக்கும் அருகதையில்லை. ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்காக சுமார் 10,000 ஏக்கர் தனியார் காணிகள் சுவீகரிக்கப்பட்டு அனைவரது நஷ்டஈடும் வழங்கப்பட்டு விட்டது. ஆனால் நாங்கள் சிறுபான்மையினர் என்பதனாலா இழுத்தடிப்புக்கள் நடைபெறுகின்றன?
ஒரு சமூகத்தினரின் உரிமைகள் மறுக்கப்பட்டு அவர்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது அவர்களின் பிரச்சினைகளை தார்மீகக் கடமையாகும். இத்தன்மை எமது மறைந்த தலைவரிடம் நூறுவீதம் இருந்தது. அமைச்சுப் பதவிகளை தக்க வைத்துக் கொள்வதற்காக அவர் அநீதியைக் கண்டு ஒருபோதும் மௌனியாய் இருந்ததில்லை. இவைகள் மறைந்த தலைவர் கற்றுத்தந்த பாடங்கள். நீங்கள் மூவரும் மறைந்த தலைவரின் அரசியல் பாசறையில் வளர்ந்தவர்கள். நீங்கள் மூவரும் மிகவும் பலம் பொருந்திய மூன்று துருவங்களைப் போன்றவர்கள். ஏனெனில் நீங்கள் மூவரும் இப்போது கெபினட் அமைச்சர்கள – தேசியத் தலைவர்கள் – ஜனாதிபதியுடன் மிக நெருக்கமாக பழகுபவர்கள்.
அது மட்டுமல்ல ஜெனிவா சர்வதேச மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரேரணைகள் கொண்டு வரப்பட்டபோது எட்டு முஸ்லிம் நாடுகளின் ஆதரவையும் திரட்டிக் கொடுத்தவர்கள். எனவேதான் மேற்படி காணிப் பிரச்சினைக்கு ஒரு தீர்வினைப் பெற்றுத்தர முடியாவிட்டால் நீங்கள் தேசியத் தலைவர்களாகவும் கெபினட் அமைச்சர்களாகவும் இருப்பதில் அர்த்தமில்லாமல் போய்விடும்.
மேற்படி காணிகளை இழந்தவர்களின் பிரச்சினையை அதி உத்தம ஜனாதிபதி அவர்களினால் மட்டுமே தீர்த்து வைக்க முடியும். ஆகவே ஒலுவில் துறைமுக அபிவிருத்திக்காக காணிகளை இழந்தவர்களுக்குரிய நஷ்டஈட்டுத் தொகையினை நீங்கள் மூவரும் ஒருமித்து ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று துரிதமாகப் பெற்று தருவதற்கு ஆவன செய்யுமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இம்மகஜரின் பிரதிகள் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ்,.பைசால் காசீம், ஹஸன் அலி, கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெவ்வை, கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப், பிரதி மேயர் நிஸாம் காரியப்பர், அட்டளைச்சேனை பிரதேச செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment