Thursday, May 31

கல்முனை தேரரின் அறிவுரை

 


மதஸ்தலங்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அடாவடித்தனங்கள், மனிதநேயமற்ற செயற்பாடுகளை யார் செய்தாலும் அதனை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டுமானால் எல்லாமதங்களையும் நாம் மதிக்கப் பழகிக் கொள்ள வேண்டும். என கல்முனை விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா யூத் பரிமாற்று வேலைத்திட்டத்தின்கிழ் அம்பாறை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் கண்டி மாவட்ட ஸ்ரீ லங்கா இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். இவர்களுக்கான சந்திப்பு நிகழ்வு கடந்த செவ்வாய் கிழமை (29) சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் விசேட அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தனது உரையை தெளிவாக தமிழில் நிகழ்த்திய விகாராதிபதி தொடர்ந்தும் அங்கு உரையாற்றும்போது,
இலங்கையிலுள்ள மக்கள் அணைவரும் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வோடு ஒற்றுமையாக வாழ பழகிக் கொள்ள வேண்டும். ஒரு இனத்தவருடைய மத விடயங்களில் தலையிடுவதும், அநாகரிகமாக நடந்து கொள்வதும் எந்த மதத்திலும் குறிப்பிடப்படாத ஒன்றாகும். எல்லா மதங்களும் ஒற்றுமை, ஒழுக்கம், சமாதானம் என்ற நல்ல விடயங்களை சிறப்பாக எமக்கு எடுத்துக்கூறுகின்றது.
இஸ்லாத்திலுள்ள அஸ்ஸலாமு அலைக்கும் என்பதன் கருத்தை பாருங்கள் உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் என்று கூறுகின்றது. வணக்கம், அயுபோவன் என்ற சொற்களின் ஆழத்தை ஒவ்வொருவரும் படித்தறிய வேண்டும். அப்போதுதான் எமது மக்கள் அணைவரிடத்திலும் பேதிய மன பக்குவமும், புரிந்துணர்வும் வளரும். மதங்கள் சொல்லுகின்ற வழியில் எமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழலாம். வீணான சண்டை சச்சரவுகள் ஏற்படாது.
இந்த அரசாங்கம் ஏற்படுத்தியுள்ள இளைஞர் பாராளுமன்றம் என்பதும் மூவின மக்களும் ஒன்றுசேர்ந்து பழகி பரஸ்பரம் ஒற்றுமையுடன் வாழ்வதற்கான நிலையை ஏற்படுத்தும் என்பதே எனது விருப்பமாகும். இதனை நோக்காகக் கொண்டே எமது ஜனாதிபதியும் இவ்வாறான புதிய விடயங்களில் கூடிய கவனமெடுத்து வருகிறார்கள். எனக்கு இந்த நிகழ்வு பெரும் மன சந்தோசத்தை தருகிறது.
கல்முனையிலிருந்து நான் செல்வதற்கு எத்தனித்தாலும் என்னை இப்பகுதி தமிழ், முஸ்லிம் உறவுகள் செல்லவேண்டாம் என்று கூறுகின்றனர். காரணம் நான் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யாமல் பணிகளைச் செய்கின்றேன். ஒருவருடைய மத விடயத்தில் மற்ற இனத்தவரால் தீங்கு ஏற்படக்கூடாது. எதிர்கால சந்ததிக்காக சிறந்த நாட்டையும், ஒழுக்கமுள்ள சமூதாயத்தையும் கட்டியெழுப்ப இன,மத வேறுபாடுகளுக்கு அப்பால் நாம் அணைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்றும் கூறினர்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.எம்.ஏ. ஜவாத், ஏ.எம். ஜெமீல் உட்பட மதகுருமார்கள், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள், தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் உயர் அதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment