Monday, June 18

நிந்தவூர் வைத்தியசாலையை மாகாண தள வைத்தியசாலையாக தரமுயர்த்த முதலமைச்சர் இணக்கம்!


நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையை சகல வசதிகளும் கொண்ட மாகாண தள வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இணக்கம் தெரிவித்துள்ளார்.
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினருடனான சந்திப்பின்போதே முதலமைச்சர் இந்த இணக்கப்பாட்டை வெளியிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்களின் இல்லத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற இச்சந்திப்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் ஏ.எல்.ஏ.மஜீத், நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலை பொறுப்பதிகாரி எம்.ஐ எம்.மாஹிர், அபிவிருத்திக் குழு பிரதித் தலைவர் நஸீர் அஹ்மத், பொருளாளர் ஏ.எல்.அன்வர்தீன், டாக்டர் ஜாபீர், டாக்டர் றசீட் உட்பட மற்றும் பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது வைத்தியசாலையில் நிலவி வருகின்ற குறைபாடுகள் குறித்தும் அதன் அவசரத் தேவைகள் தொடர்பாகவும் முதலமைச்சரிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. அத்துடன் இதனை மாகாண தள வைத்தியசாலையாக தரமுயர்த்தித் தர வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர், அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக் எடுப்பதாக உறுதியளித்தார்.
அதேவேளை இவ்வைத்தியசாலையின் மகப்பேற்றுப் பிரிவை இப்பகுதி மக்களுக்கு பயன்மிக்க வகையில் சிறப்பாக இயக்குவதற்கு மகப்பேற்று மருத்துவ நிபுணர் ஒருவரையும் மேலதிக வைத்தியர்களையும் நியமித்து உதவுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளையும் முதலமைச்சர் ஏற்றுக் கொண்டார். அத்துடன் சிற்றூழியர்கள் உட்பட ஆளணிப் பற்றாக்குறையையும் நிவர்த்தி செய்து தருவதாக முதலமைச்சர் உத்தரவாதமளித்தார்.
இக்கலந்துரையாடலைத் தொடர்ந்து இவ்வைத்தியசாலைக்கு வந்து அங்கு நிலவும் குறைபாடுகளையும் தேவைகளையும் நேரடியாக கண்டறியுமாறு கேட்கப்பட்டபோது அதற்கு உடன்பட்ட முதலமைச்சர் குறித்த வைத்தியசாலைக்கு சென்று சகல பிரிவுகளையும் பார்வையிட்டார்.
சுனாமி அனர்த்தத்தினால் முற்றாக் அழிவுற்ற இவ்வைத்தியசாலை பின்லாந்து நிறுவனமொன்றின் நானூறு மில்லியன் செலவில் மீள் நிர்மாணம் செய்யப்பட்டதாகவும் ஆளணிப் பற்றாக்குறை மற்றும் சில தேவைப்பாடுகளால் மக்கள் முழுமையான பயன்களைப் பெறும் வகையில் இப்பெறுமதி மிக்க வைத்தியசாலையை செயற்படுத்த முடியாதிருப்பதாக வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரால் முதலமைச்சரிடம் கவலையுடன் எடுத்துரைக்கப்பட்டது. அத்துடன் சில பெறுமதி வாய்ந்த கருவிகள் கூட பயன்படுத்தப்படாமல் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இவற்றை மிகவும் அக்கறையுடன் கேட்டறிந்து கொண்ட முதலமைச்சர் தனது பதவிக் காலத்தில் இவ்வைத்தியசாலையின் தேவைகளையும் குறைபாடுகளையும் இயன்றளவு நிவர்த்தி செய்து தருவதாகவும் இதனை சகல வசதிகளும் கொண்ட மாகாண தள வைத்தியச்சலையாக தரமுயர்த்துவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பதாகவும் உறுதியளித்தார்.அத்துடன் இவ்வைத்தியசாலையின் அபிவிருத்தியில் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் எடுத்து வருகின்ற அக்கறையையும் முயற்சிகளையும் தாம் மிகவும் பாராட்டுவதாகவும் குறிப்பிட்டர்.

No comments:

Post a Comment