Saturday, July 7

மதுபான அனுமதி பத்திரம் கோரினேனா? என்னுடன் காழ்ப்புணர்ச்சி கொண்ட அரசியல் வாதிகளினால் பரப்பப்பட்ட கட்டுக் கதையே என்கிறார் பைஸால் காஸிம்!


மதுபான அனுமதிப்பத்திர விவகாரம் தொடர்பாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைஸால் காஸிம் அவர்கள் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது;
பாராளுமன்ற குழு அறையில் நடைபெற்ற அபிவிருத்தி தொடர்பான கூட்டம் ஒன்றில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பொத்துவிலில் உள்ள ரெஸ்டுரன்ட், ஹோட்டல்களுக்கு மதுபான விற்பனை அனுமதிப் பத்திரம் வழங்குமாறு அமைச்சர் பஷில் ராஜபக்ஷவிடம் கோரிகை விடுத்ததாக சில ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் குறித்து நான் விளக்கமளிக்க கடமைப்பட்டுள்ளேன்.
ஏனெனில் குறித்த செய்திகளை மையப்படுத்தி என்னை மட்டுமல்லாமல் எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த ஒருதலைப்பட்சமான, திரிபுபடுத்தப்பட்ட தகவல்களும் விமர்சனமும் எமது கட்சிக்கும் தனிப்பட்ட வகையில் எனது சுயகௌரவத்திற்கும் நற்பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்தி இருப்பதுடன் முஸ்லிம் சமூகத்திற்கு கூட பாரிய இழுக்கை ஏற்படுத்தியுள்ளது.

ஆகையினால்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தேசிய அமைப்பாளர் என்ற வகையிலும் அம்பாறை மாவட்டத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியிலும் குறித்த மதுபான அனுமதிப்பத்திரம் தொடர்பான சர்ச்சையை நானே அக்கூட்டத்தில் பிரஸ்தாபித்தவன் என்ற ரீதியிலும் திட்டமிட்டு திரிபுபடுத்தப்பட்ட அத்தகவல்கள் குறித்தும் அதன் பின்னணி குறித்தும் நான் விளக்கமளிக்க விளைகின்றேன்.

நடந்தது என்ன?
அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற குறித்த கூட்டத்தில் திவிநெகும வேலைத் திட்டம் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்ட பின்னர் சுற்றுலாத்துறை அபிவிருத்தி பற்றியும் ஆராயப்பட்டது. இதன்போது உல்லை மற்றும் அறுகம்பை பகுதிகளிலுள்ள பல ரெஸ்டுரன்ட் உரிமையாளர்களாலும் அவர்களது சங்கத்தினாலும் என்னிடம் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக அக்கூட்டத்தில் பிரஸ்தாபித்து ஒரு தீர்வினைக் கோரினேன்.
அதாவது இன்று கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறைக்கு மிகவும் பெயர்போன உல்லை மற்றும் அறுகம்பை பகுதிகளில் நாற்பதுக்கு மேற்பட்ட ரெஸ்டுரன்ட்கள் இயங்கி வருகின்றன. இவற்றுள் சிலவற்றுக்கு மதுபான அனுமதிப் பத்திரம் இருக்கின்ற அதேவேளை இன்னும் சிலவற்றுக்கு அவ்வனுமதிப் பத்திரம் இல்லாமல் செயற்படுகின்றன.
இந்நிலையில் அங்கு வருகின்ற சுற்றுலா பயணிகள் மதுபான அனுமதிப் பத்திரம் இல்லாத ரெஸ்டுரன்ட்களில் தங்குகின்ற போது, வேறு இடங்களில் இருந்து வாங்கி வருகின்ற மதுபானத்தை அருந்தி விட்டு போத்தல்களை இந்த ரெஸ்டுரன்ட்களிலுள்ள அறைகளிலும் வளாகத்திலும் போட்டு விடுகின்றனர்.
இதனால் சோதனைக்காக வருகின்ற மதுவரித் திணைக்கள அதிகாரிகளும் பொலிசாரும் குறித்த இந்த ரெஸ்டுரன்ட்களின் உரிமையாளர்களை கைது செய்வதோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஒவ்வொரு முறையும் ஐம்பதாயிரம் தொடக்கம் இரண்டு லட்சம் வரை தண்டம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு மதுபான அனுமதிப் பத்திரம் பெறாமால் இயங்குகின்ற பெரும்பாலான ரெஸ்டுரன்ட்கள் முஸ்லிம்களுக்கு சொந்தமானதாகும்.
முஸ்லிம் வர்த்தகர்கள் பாதிப்பு!
இந்த சட்ட நடவடிக்கைகள் காரணமாக தமது ரெஸ்டுரன்ட்களை நடாத்துவதில் பாரிய பிரச்சினைகளை எதிர்கொவதாகவும் தமது வியாபாரம் வெகுவாக பாதிக்கப்படுவதாகவும் இந்நிலை தொடர்ந்தால் இவற்றை மூடி விட்டு இந்த இடங்களையும் விற்று விட்டு நாம் வெளியேறுவதைத் தவிர எமக்கு வேறு வழி கிடையாது என்றும் எமது ரெஸ்டுரன்ட்களை விலைக்கு வாங்குவதற்கு பெரும்பான்மை வர்த்தகர்கள் தயாராக இருப்பதாகவும் முஸ்லிம் உரிமையாளர்கள் என்னிடம் அடிக்கடி முறையிட்டதோடு அவர்களது சங்கமும் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கு முகவரியிடப்பட்ட கடிதப் பிரதி ஒன்றை என்னிடம் வழங்கியிருந்தனர்.
ஆகையினால் சமூக ரீதியான இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்காக குறித்த அக்கூட்டத்தில் இதனைப் பிரஸ்தாபித்து அவர்களை சட்டத்தின் கெடுபிடிகளில் இருந்து தளர்த்துவதற்கும் அவர்களது வர்த்தக நடவடிக்கைகளை சுமுகமாக முன்னெடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தேன். யாரோ செய்கின்ற பிழைகைகளுக்காக இந்த வர்த்தகர்கள் தண்டிக்கப்படுவதில் இருந்து பாதுகாப்பளியுங்கள் என்றும் வலியுறுத்தினேன். ஆனால் ஒருபோதும் இவர்களுக்கு மதுபான விற்பனை அனுமதிப் பத்திரம் வழங்குமாறு நான் கோரிக்கை விடுக்கவில்லை.
குறித்த கூட்டத்தில் அமைச்சர்கள் றிசாத் பதியுதீன், ஆறுமுகன் தொடமான், பிரதி அமைச்சர்களான ஹிஸ்புல்லாஹ், பஷீர் சேகுதாவூத், கருணா, பாராளுமன்ற உறுப்பினர்களான அஸ்வர், ஹரீஸ், ஹுனைஸ் உட்பட பல எம்.பிக்கள் கலந்து கொண்ட இந்த பகிரங்கமான கூட்டத்தில் முஸ்லிம்கள் அருந்துவதற்கும் விற்பதற்கும் ஹராமாக்கப்பட்ட மதுபான விற்பனைக்கு நான் அனுமதிப் பத்திரம் கோரினேன் என்று ஊடகங்கள் வாயிலாக கூறப்படும் குற்றச்சாட்டு எந்தளவு நகைப்புக்கிடமானது என்பதோடு அது எந்தவொரு சராசரி மனிதனாலும் நம்ப முடியாத ஒரு கூற்று என்றும் புரிந்து கொள்ளலாம்.
அந்த எம்.பி.சத்தியம் செய்வாரா?
அதேவேளை அவ்வாறு நான் கோரிக்கை விடுத்தேன் என்று அக்கூட்டத்தில் கலந்து கொண்ட யாராவது ஓர் எம்.பி.பகிரங்கமாக கூற முடியுமா என்று நான் சவால் விடுக்கின்றேன். ஆனால் என்னுடன் தனிப்பட்ட ரீதியில் காழ்ப்புணர்ச்சி கொண்ட ஒரு முஸ்லிம் எம்.பி. அவரது நெருங்கிய நண்பர் என்று கூறப்படுகின்ற ஊடகவியலாளர் ‘மின்னல்’ ரங்காவிடமும் வேறு சில பத்திரிகையாளர்களிடமும் நடந்த விடயத்தை திரிபுபடுத்தி கூறி, ஊடகங்களில் வெளிப்படுத்துமாறு வற்புறுத்தியுள்ளார்.
இதன் பின்னணியிலேயே சில அரசியல்வாதிகளின் வேண்டுதலில் குறித்த செய்திகளும் என் மீதான் திட்டமிட்ட வீன்பழிக் குற்றச்சாட்டும் அதனை மையப்படுத்தி எமது கட்சி மீதான கண்டன விமர்சனமும் செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் பாரதூரமான – மிக வன்மையாக கண்டிக்கத்தக்க குறச்சாட்டாகும். குர்ஆன், ஹதீஸ் போதனைகளுக்கும் மனச்சாட்சிக்கும் விரோதமாக என்மீது வழி சுமத்தப்பட்டிருக்கிறது.
குறித்த அக்கூட்டத்தில் ‘நான் மதுபான அனுமதிப் பத்திரம் கோரவில்லை’ என்று நான் சத்தியம் செய்கிறேன். ‘இல்லை பைசால் காஸிம் மதுபான அனுமதி பத்திரம் கோரினார்’ என்று ஊடகவியலாளர்களுக்கு பொய்த் தகவல் வழங்கிய அந்த எம்.பி.யினால் சத்தியம் செய்ய முடியுமா என்று நான் சவால் விடுக்கின்றேன்.
மஹிந்த சிந்தனையின் பிரகாரம் மது ஒழிப்பு திட்டமான ‘மதட தித’ கொள்கையின் கீழ் ஒரு நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ மது விற்பனைக்கான அனுமதிப் பத்திரம் வழங்கப்பட மாட்டாது என்கின்ற விடயமும் அந்த அதிகாரம் சுற்றுலாத்துறை அதிகார சபைக்கே உண்டு என்பதும் எனக்கு தெரிந்துள்ள நிலையில் இக்கூட்டத்தில் அதற்கான அனுமதியை நான் கோருவேனா?
அதுவும் எனது அரசியல் எதிரி உள்ளிட்ட ஐம்பதுக்கு மேற்பட்ட எம்.பி.க்கள் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் மதுபான அனுமதிப் பத்திரம் வழங்குமாறு பகிரங்கமாக கோரிக்கை விடுப்பேனா?
அது தவிர மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களின் காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.ஒருவர் தனக்கு வேண்டிய ஒருவருக்கு மதுபான அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொடுத்தமைக்காக அவர் தலைவரினால் கட்சியில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டார் என்கின்ற சரித்திரமும் அதன் பாரதூர தன்மையையும் தெரிந்து வைத்துள்ள நான் எனது அரசியலுக்கே பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய மதுபான அனுமதிப் பத்திரத்தை வழங்குமாறு பகிரங்க கூட்டம் ஒன்றில் கோரிக்கை விடுப்பேனா?
இது எல்லாவற்றையும் விட முஸ்லிம்களுக்கு ஹராமாக்கப்பட்ட மதுபானம் தொடர்பில் எனது மனச்சாட்சிக்கு முரணாக எந்தவொரு நடவடிக்கையிலாவது நான் ஈடுபடுவேனா? நிச்சயமாக இல்லை. அதற்கு எனது மனச்சாட்சி இடம்தராது.
ஆனால் இவ்வளவும் இருக்க முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பது போல் குறித்த விடயம் திட்டமிட்டு திரிபுபடுத்தப்பட்டு எனக்கெதிராக விஷமப் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இது மிகவும் கீழ்த்தரமான – அரசியல் நாகரீகமற்ற விடயமாகும். இது அந்த அரசியல்வாதிகளின் வங்குரோத்து நிலையின் உச்சமாகும்.
வங்குரோத்து அரசியல்வாதிகளின் எண்ணம் ஒருபோதும் ஈடேராது!
எமது தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுடன் நான் வெளிநாட்டுப் பயணங்களில் இணைந்து செல்வதையும் கிழக்கின் முதலமைச்சர் வேட்பாளராக நான் களமிறங்கலாம் என்று ஊடகங்களில் எனது பெயர் பிரஸ்தாபிக்கப்படுவதையும் மக்கள் மத்தியில் அது பரவலாக பேசப்படுவதையும் அமபாரை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட எம்.பிக்களுள் நான் அபிவிருத்திப் பணிகளையும் மக்கள் சேவைகளையும் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றேன் என்பதையும் ஜீரணிக்க முடியாததன் காரணமாகவே அவர்கள் இந்தக் கட்டுக் கதையை அவிழ்த்து விட்டிருக்கிறனர்.
இதன் மூலம் கட்சியில் இருந்தும் தலைமைத்துவத்துடனான நெருக்கமான உறவில் இருந்தும் மக்கள் மத்தியில் இருந்தும் என்னை தூரப்படுத்துவதற்கும் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அவர்களுக்கும் எனக்கும் முரண்பாடு தோன்றியுள்ளதாக தெரிவித்து எனது அபிவிருத்தி திட்டங்களை முடக்குவதற்கும் அவர்கள் முயற்சி செய்கின்றனர். ஆனால் அவர்களது சதித்திட்டம் ஒருபோதும் நிறைவேறாது என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கின்றேன்.
என்னைப் பொறுத்தளவில் சாராயம் விற்றோ, ஊழல் மோசடி செய்தோ, பொதுச் சொத்துகளை கொள்ளையடித்தோ, பள்ளிவாசல் சொத்துக்களை சூரையாடியோ, வட்டிக்குப் பணம் கொடுத்தோ, சிட்டுக்குருவி லேஹியம் விற்றோ பிழைப்பு நடத்த வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. நான் ஹலாலான வழியில் சம்பாதித்து மக்கள் பணிக்காக முடிந்தளவு செலவு செய்து வருகின்றேன்.
இந்நிலையில் தவறான வழியில் நடக்கின்ற சிலர் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது வீண்பழி சுமத்தி, எனது நற்பெயருக்கு அபகீர்த்தியை உண்டுபண்ணி, என்னை திட்டமிட்டு பழிவாங்க முயற்சித்தாலும் அவர்களது எண்ணம் ஒருபோதும் ஈடேராது என்பதை மீண்டுமொருமுறை உறுதியாக தெரிவித்துக் கொள்கின்றேன்.

 தொடர்பான முன்னைய செய்தி :

No comments:

Post a Comment