என்.வி.கியு தராதரம் மற்றும் ஆங்கில மொழி தேர்ச்சியுடையவர்களுக்கு வெளிநாடுகளில் அதிகம் கிராக்கி இருப்பதால் அவற்றில் மாணவர்கள் கூடிய கரிசனை செலுத்த வேண்டும் என்று கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.
இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் சாய்ந்தமருது தொழில் பயிற்சி நிலையத்தில் கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு தொழில் தகைமை சான்றிதழ் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை (13.02.2013) சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சாய்ந்தமருது தொழில் பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி ஏ.ஹாதீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் மேலும் பேசுகையில் கூறியதாவது;
"கொழும்பில் கல்லூரி ஒன்றினை நடாத்துபவன் என்றவகையில் மூன்றாம் நிலைக் கல்வியினுடைய சகல விடயங்களையும் நன்கறிந்தவனாக உள்ளேன். இந்த தொழில் பயிற்சி நிலையத்தில் பல்வேறுபட்ட கற்கை நெறிகளில் என்.வி.கியு தராதரத்தின் மூன்றாவது படியினை பூர்த்தி செய்து சான்றிதழ்களை பெறுகின்ற மாணவர்கள் சில விடயங்களை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.
வெளிநாடுகளில் இந்த மூன்றாம் நிலைக் கல்விக்கு கிராக்கி அதிகரித்து வருகின்றது. என்னுடைய மெற்றோ பொலிட்டன் கல்லூரியிலிருந்து கூடுதலான மாணவர்களை வெளிநாடுகளிற்கு அனுப்புகின்றோம்.
இந்த மாணவர்களை வெளி நாட்டிற்கு அனுப்புவதற்காக தயார்படுத்துகின்றபோது அவர்கள் ஆகக்குறைந்தது இந்த என்.வி.கியு தராதரத்தில் ஐந்தாவது படியினை அடைய வேண்டும். இவ்வாறு உங்களது தராதரங்களை ஐந்தாவது படிவரை கற்கின்றபோது வெளிநாடுகளில் உங்களுக்கான கிராக்கி அதிகரிக்கும்.
எனவே இத்தோடு உங்களது கல்வியை முடித்துக் கொள்ளாது, இன்னும் இரண்டு படிகளுக்கான கற்கை நெறியினை பூர்த்தி செய்ய வேண்டும். அவ்வாறு பூர்த்தி செய்கின்றபோது உங்களுக்கு சிறந்த எதிர்காலம் உண்டு.
இவ்வாறான தராதரங்களை பெற்றுக் கொண்டபோதிலும் ஆங்கில அறிவு இல்லாவிட்டால் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்க நேரிடும். எவ்வாறான சாள்றிதழ்களை வைத்திருந்த போதிலும் ஆங்கிலம் தெரியாவிட்டால் பயனில்லை. எனவே அனைவரும் உங்களது ஆங்கில ஆற்றலையும் மேம்படுத்திக் கொள்வதில் சிரத்தை எடுக்க வேண்டும்.
மாணவர்கள் கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாதபோது மனமுடைந்து, தங்களது வாழ்க்கை இத்தோடு முடிந்து விட்டதாக கவலை அடைகின்றனர். ஆனால் அவர்களாலும் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்யமுடியும். இவ்வாறான என்.வி.கியு தராதரங்களின் படிகளை பூர்த்தி செய்த பின்னர் பட்டப்பிடிப்பினையும் பூர்த்தி செய்வதற்கு வழிமுறைகள் உண்டு.
மாணவர்களுக்கு சரியான வழிகாட்டல் வழங்குகின்றபோது அவர்களின் திறமைக்கு ஏற்ப அவர்களது ஆற்றலை வளர்த்துக் கொள்ள முடியும். இவ்வாறான வழிகாட்டல் தேவைப்படுகின்ற மாணவர்கள் என்னை நாட முடியும். ஒரு கல்லூரியின் தவிசாளர் என்ற வகையில் அவர்களுக்கு என்னால் அறிவுரைகளை வழங்க முடியும்.
மாநகர சபையினை நான் பொறுப்பேற்றதில் இருந்து சகல விடயங்களிலும் அவதானமாக இருக்கின்றேன்.
அந்தவகையில் இவ்வாறான பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்கின்ற மாணவர்களுக்கு வாய்ப்புக்களை உருவாக்குகின்ற வகையில் எதிர்காலத்தில் மோட்டார் வாகன திருத்தும் மற்றும் மோட்டார் வாகன சேவிஸ் நிலையங்கள் போன்ற வியாபார ஸ்தாபனத்திற்கான அனுமதிப் பத்திரத்தை மாநகர சபையில் பெறுவதானால் குறித்த தொழிலுடன் தொடர்புடைய பாடநெறியினை பூர்த்தி செய்த ஒருவர் கடமையாற்றுகின்ற போதுதான் அவர்களுக்கான அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்ள முடியும் என்ற சட்டத்தினை அமுல்படுத்த உள்ளேன் என்பதை இவ்விடத்தில் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
இன்று உள்ளூராட்சி மன்றங்களில் சுருக்கெழுத்தாளர்களுக்கான தேவைப்பாடு காணப்படுகிறது. எனவே இப்பயிற்சி நெறியினையும் உங்களால் உள்வாங்க முடியுமானால் உள்வாங்குங்கள். இது தொடர்பில் உங்களது அமைச்சுடன் நான் கதைக்க வேண்டுமானாலும் கூறுங்கள் நான் கதைப்தற்கு தயாராக உள்ளேன்.
இந்த பிரதேசத்திற்காக என்னால் எனது காலப்பகுதிக்குள் முடியுமானவரை உதவிகளை செய்ய வேண்டும் என்று ஆர்வத்தோடு இருக்கின்றேன்" எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட தொழில் பயிற்சி அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் ஏ.ஏ.ஜாபீர், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர் என்.ஆரிப், சாய்ந்தமருது இளைஞர் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.ஏ.லத்தீப் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டனர்..
இந்நிகழ்வில் கனணி மற்றும் வீட்டு மின்னிணைப்பு கற்கை நெறிகளை பூர்த்தி செய்த 40 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன் இந்நிலையத்தின் நீண்ட நாள் தேவையாக இருந்து வந்த மல்டி மீடியா புரஜக்டர் ஒன்றை இதன்போது முதல்வர் அன்பளிப்பாக வழங்கினார்.
No comments:
Post a Comment