Wednesday, March 13

பொத்துவில் மண் மலை சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி; மு.கா.வுக்கு மக்கள் நன்றி தெரிவிப்பு!


Presentation1பொத்துவில் முஹூது மஹா விகாரை அதன் தற்போதைய அமைவிடத்திலேயே இருக்கும் என்று நேற்று செவ்வாய்கிழமை (12) அம்பாறை செயலகத்தில் அரச அதிபர் நீல் த அல்விஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவையிட்டு அதற்கு ஒத்துழைப்பு நல்கிய நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் மற்றும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கு அவ்வூர் மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்;டது.
நேற்று அம்பாறை செயலகத்தில் நடைபெற்ற பிரஸ்தாப கூட்டத்தை தொடர்ந்து ஸ்ரீலங்கா  முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் தலைமையில் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் அன்று மாலை பொத்துவில்லுக்கு விஜயம் செய்து பிரதேச சபையில் அதன் தவிசாளர் எம்.எஸ்.எம்.வாசித்தின் ஏற்பாட்டில் அவரது அலுவலகத்தில் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் பங்குபற்றினர்.
அண்மைக் காலமாக பொத்துவில் பிரதேசத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து அங்கு வசிக்கும் மக்கள் மத்தியில் காணப்படும் அச்ச உணர்வை தணிப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் உயர்மட்டக் குழு மேற்கொண்ட விஜயம் பெரிதும் வரவேற்கத்தக்க தென்று தெரிவிக்கப்பட்டது.

உள்நாட்டு, வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளையும் ஊர் மக்களையும் பெரிதும் கவரும் நூறு வீதம் முஸ்லிம்கள் வாழும் மண்மலை பிரதேசத்தில் உத்தேச முஹூது மஹாவிகாரை விஸ்தரித்து அமைக்கப்படுவதற்கான முஸ்தீபுகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலைமையில், அமைச்சர் ஹக்கீமின் வலியுறுத்தலின் பேரில் அம்பாறை செயலகத்தில் மாவட்டச் செயலாளர் நடத்திய முக்கிய கலந்துரையாடலின் போது அந்த விகாரை தற்போது காணப்படும் இடத்திலேயே அமைந்திருக்கும் என்று மேற்கொள்ளப்பட்ட முடிவு தமக்கு ஆறுதலை அளித்திருப்பதாகவும் அதற்கு உரிய ஒத்தாசைகளையும் வழங்க முடியுமென்றும் ஊர் மக்கள் கூறினர்.
பொத்துவிலின் தற்போதைய நிலைமையை அதன் பின்னணியோடு தொடர்புபடுத்தி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அப்துல் மஜீத் மிகவும் காரசாரமாக எடுத்து விளக்கினார்.  தவிசாளர் வாசித் உட்பட உலமாக்களும் ஊர் மக்களும் தமது கருத்துக்களை தெரிவித்தனர்.
தேவையற்ற பாதுகாப்புக் கெடுபிடிகள் அவ்வப்போது நிகழ்ந்த வண்ணம் இருப்பதையிட்டும் விசனம் தெரிவிக்கப்பட்டது.
பொத்துவில் பிரதேச மக்களுக்கு தற்பொழுது நேரடி அரசியல் அதிகாரமும் பிரதிநிதித்துவமும் தேசிய மட்டத்திலோ மாகாண மட்டத்திலோ இல்லாத பெரும் குறையை அவ்வூர் மக்கள் அமைச்சர் ஹக்கீமின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
அதற்கான தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
பொத்துவில் ஜம்இய்யதுல் உலமா பிரதிநிதிகளும் முக்கிய ஆலோசனைகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இக் கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி. ஹஸன் அலி, ஏனைய அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், எச்.எம்.எம். ஹரீஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல், ஏ.எல்.எம்.நஸீர், ஏ.எல். தவம் ஆகியோர் பங்குபற்றினர்.
Pottuvil visit (4)Pottuvil visit (2)Pottuvil visit (1)

No comments:

Post a Comment