Friday, May 10

கல்முனை மாநகர அபிவிருத்தி - ஜேர்மன் பிரதிநிதிகள் ஆராய்வு

கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஷ் மீராசாஹிப் தலைமையில் ஜேர்மன் நாட்டு பிரதிநிதி குழுவினருடனான மாநகர அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் முதல்வரின் செயலகத்தில் அண்மையில் நடைபெற்றது. 
ஜேர்மன் நாட்டு நியூனிக் நியுரன் பேக் நகரங்களிடமிருந்து நிதி உதவிகள் கிடைக்கப்பெற்று அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் அமுல்நடத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்கள், எதிர்காலத்தில் செயற்படுத்தக் கூடிய திட்டங்கள் தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
கல்முனை மாநகர பிரதேசத்தில் உள்ள பொலிவேரியன் கிராமத்தில் அமைக்கப்பட்ட 100 சுனாமி வீட்டுத்திட்டமானது மின் இணைப்பின்றி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இங்கு வாழ்கின்ற மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். எனவே குறித்த வீடுகளுக்கு மின் இணைப்பை வழங்குவதற்கு உதவுமாறு முதல்வரினால் ஜேர்மனியே குழுவினரிடம் கோரிக்கைவிடுக்கப்பட்டது.
 
அதனைத் தொடர்ந்து குறித்த குழுவினர் முதல்வருடன் பொலிவேரியன் கிராம சுனாமி வீட்டுத்திட்ட மக்களின் அவல நிலை தொடர்பில் நேரில் சென்று பார்வையிட்டு மக்களுடன் கலந்துரையாடினர். இதற்கான நிதி மூலங்களை பெற்றதும் முதல்வருடன் தொடர்பினை ஏற்படுத்தி குறித்த வீடுகளுக்கு இலவச மின் இணைப்பினை வழங்குவதற்கு ஆவன செய்வதாக தெரிவித்தனர். 
மாநகர ஆணையாளர் ஜே.லியாக்கத்அலி, பொறியியலாளர் ஹலீம் ஜௌசிர், யூ.என் ஹெபிடாட் நிறுவனத்தின் தொழில் நுட்ப ஆலோசகர் டொக்டர். பாஃமி, மாநகர சபை உறுப்பினர்களான ஏ.நிசார்டீன், ஐ.எம்.பிர்தௌஸ், சி.எம்.முபீத், எச்.எம்.எம்.நபார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment