Thursday, May 9

பலகோடிகளை ஏப்பம்விட்ட அரசியல்வாதி - கல்முனையில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேசத்திலுள்ள நிறுவனமொன்றின் வளாகத்துக்குள் புகுந்த பொதுமக்கள் நேற்று புதன்கிழமை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுடுபட்டனர். குறித்த நிறுவன உரிமையாளரால் தாம் நிதி ரீதியாக ஏமாற்றப் பட்டமை தொடர்பிலேயே பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர். 
சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மானிய அடிப்படையில் வாகனங்களை வழங்குவதாக  கூறிய – மேற்படி நிறுவனத்தின் உரிமையாளர், அவ்வாறே வாகனங்களையும் வழங்கியுள்ளார். ஆயினும், குறித்த வாகனங்கள் குத்தகை நிறுவனங்களிடம் அடகு வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. 
குத்தகை நிறுவனங்கள் வாகனத்தைப் பெற்றுக் கொண்ட பொதுமக்களிடம் மாதாந்த குத்தகைப்  பணத்தினைச் செலுத்துமாறு தற்போது அறிவித்துள்ளது. அவ்வாறு குத்தகைப் பணத்தினைச் செலுத்த முடியாதவர்களின் வாகனங்களை குத்தகை நிறுவனங்கள் பறித்தெடுத்துள்ளன. 
இதனையடுத்தே, தாம் ஏமாற்றப்பட்டமையினை பொதுமக்கள் அறிந்து கொண்டனர். வாகனத்துக்கான முழுத் தொகையினைச் செலுத்திய பின்னரும், தற்போது குத்தகை நிறுவனங்களுக்கு அதேபோன்றதொரு தொகையினையும், அதற்கான வட்டியினையும் தாம் செலுத்த வேண்டியுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.
இதனால், மானிய விலையில் வாகனங்களை வழங்கியதாகக் கூறப்படும் நபரை பொதுமக்கள் அணுகியபோதும் அவர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. இதனால், ஏமாற்றப்பட்டதாகக் கூறப்படும் பொதுமக்கள் இது குறித்து கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். ஆயினும், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கான நிவாரணங்கள் எவையும் இதுவரை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
இதேவேளை, வாகனங்களுக்காக பணம் செலுத்திய சிலருக்கு இதுவரை வானமோ அல்லது அவர்கள் செலுத்திய பணமோ திரும்பக் கிடைக்கவில்லை எனவும் அறிய முடிகிறது. 
இதனையடுத்தே, நேற்றைய தினம் - குறித்த நிறுவன வளாகத்துக்குள் நுழைந்த பாதிக்ப்பட்ட பொதுமக்கள் சுலோகங்களை ஏந்தி – ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ், முஸ்லிம் சிங்கள சமூகங்களைச் சேர்ந்த 600 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் பொத்துவில் தொடக்கம் களுவாஞ்சிகுடி வரையிலான பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.  இதன்படி, பல கோடி ரூபாய்கள் பொதுமக்களிடமிருந்து இவ்வாறு மோசடி செய்யப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 
நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மேற்படி நபர் - கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். எஸ். தில்லைநாதன் எனும் பெயரைக் கொண்ட இவர் - அரசியல் கட்சியியொன்றின் மூலம் கடந்த காலங்களில் தேர்தலில் போட்டியிட்டவராவார்.

No comments:

Post a Comment