Thursday, May 2

கல்முனை மாநகர சபையின் ஆளும் கட்சியினர் கொழும்பிற்கு அழைப்பு


கல்முனை மாநகர சபையின் மாதாந்த கூட்டத்தினை பகிஷ்கரித்த ஆறு உறுப்பினர்கள் உட்பட ஆளும் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்டுப்பாட்டிலுள்ள கல்முனை மாநகர சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையே அண்மையில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த சர்ச்சை தொடர்பில் கட்சியின் தலைமைக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.


இதனையடுத்தே ஸ்ரீலங்கா முஸ்லின் காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் அனைவரும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் எதிர்வரும் 7ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள விசேட கூட்டத்தில் கலந்துகொள்வதற்கே இவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

கல்முனை மாநகர சபையின் பிரதி மேயர் நிசாம் காரியப்பர் உட்பட ஆறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற மாதாந்த கூட்டத்தினை பகிஷ்கரிப்பு செய்தனர்.

கல்முனை மாநகர சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களின் குழுக்கூட்டத்தில் மேயர் சிராஸ் மீராசாஹிப் மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.உமர் அலியுடன் நடந்து கொண்ட விதத்திற்கு அதிருப்தியினை வெளியிடவே ஆறு உறுப்பினர்களும் மாதாந்த கூட்டத்தினை பகிஷ்கரிப்பு செய்துள்ளனர்.

கல்முனை மாநகர சபையின் பிரதி மேயர் நிசாம் காரியப்பர், ஆளும் கட்சி உறுப்பினர்களான ஏ.எல்.எம்.முஸ்தபா, ஏ.எம்.றகீப், ஏ.எம்.பறக்கதுல்லாஹ், ஏ.ஏ.பஸீர் மற்றும் எம்.எஸ்.உமர் அலி ஆகிய உறுப்பினர்களே இந்த கூட்டத்தினை பகிஷ்கரிப்பு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment