அம்பாறை
கொனாகொல்ல பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன
விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் மேலும் மூவர் பலத்த
காயமடைந்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதைச் சேர்ந்த
குடும்பம் ஒன்று கொழும்பில் இருந்து கல்முனை நோக்கி காரில் பயணித்துக்
கொண்டிருந்தபோதே குறித்த கார் இன்று அதிகாலை 3.30 மணியளவில் கொனாகொல்ல
நெடுஞ்சாலையில் பள்ளம் ஒன்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து காரணமாக சாய்ந்தமருது 5ஆம்
பிரிவு பிரதான வீதியைச் சேர்ந்த ஜெமீலா அநூன் காரியப்பர் (வயது 65) என்பவரே
உயிரிழந்துள்ளார்.
இவர் கல்முனை பட்டின சபையின் முதலாவது
தவிசாளராக பதவி வகித்த மர்ஹூம் இஸ்மாயில் காரியப்பரின் மூத்த புதல்வியும்
மர்ஹூம் ஜெமீல் காரியப்பரின் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் கல்முனை மாநகர சபையின் பிரதி
முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் நாயகமுமான
சட்டத்தரணி நிஸாம் காரியப்பருக்கு இவர் மாமி முறையானவர் என்பதும்
குறிப்பிடத்தக்கது.
அவரது ஜனாஸா தற்போது அம்பாறை பொது
வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இன்று இரவு சாய்ந்தமருது
மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் எனவும் அவரது மருமகன் எஸ்.எம் அஜ்வத்
தெரிவித்தார்.
அதேவேளை அவருடன் பயணித்து காயமடைந்த மகள்
உட்பட மூன்று உறவினர்களும் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு
சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் எஸ்.எம் அஜ்வத் குறிப்பிட்டார்.
(அஸ்லம் எஸ்.மௌலானா)
No comments:
Post a Comment