Friday, June 28

அடிக்கல் விழாக்களை நடத்தி காலம் கடத்தும் கல்முனை அரசியல்வாதிகள்!


கல்முனைப் பிரதேசத்தில் கடந்த பல வருடங்களாகக் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எந்தவொரு பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தையும் தற்போதய அரசியல்வாதிகள் எவரும் செய்வதாக இல்லை என இப்பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அபிவிருத்தி என்ற  பேரில் அடிக்கல் நடும் விழாக்கள், அங்குரார்ப்பன நிகழ்வுகள் என்பன மிகக் கோலாகலமாக ஏற்பாடுகள் செய்யப்படுகின்றனவே தவிர திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படுவதாக இல்லை எனவும் கூறுகின்றனர்.
அடிக்கல் நடும் விழாக்கள், அங்குரார்ப்பன வைபவங்கள் என்பனவற்றிற்கு கல்முனையிலிருந்து சாய்ந்தமருது வரை மற்றும் மருதமுனை பிரதான பாதைகள் பல்லாயிரக்கணக்கான ரூபா செலவிடப்பட்டு பச்சை நிறப் பொலித்தீன்களாலும்  பல நிற பல்புகளாலும் அலங்கரிக்கப்படுகின்றன.
பொது மேடை ஒன்று போடப்பட்டு கட்சியிலுள்ள முக்கியஸ்த்தர்கள் தொடக்கம் தலைவர் வரை நள்ளிரவையும் தாண்டி தமது பக்க நியாயங்களையும் தாங்கள் பொறுமை காத்திருப்பதையும் நாம் சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறோம் சரியான நேரத்தில் சரியான முடிவையும் எடுப்போம் எனவும் கூறுகின்றனர்.

கூட்ட ஆரம்பத்தில் காக்கா வெண்டி, காக்கா வெண்டி என்ற பாடல்கள் கம்பிரமாகப் பாடப்படுகின்றது, கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இசை முரசு ஈ.எம் ஹனிபாவின் பாடல்களும் இடையிடையே இசைக்க வைக்கப்பட்டு மக்களுக்கு தமது கருத்துக்களைக் கூறிவிட்டுச் சென்று விடுகின்றனர். கூட்டம் ஒன்றை நடாத்துவதற்காகவே அடிக்கடி ஏதாவது ஒன்றுக்கு அடிக்கல் நடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால் ,பெரு விழாக்கள் ஏற்பாடுகள் செய்து அடிக்கல் நட்ட வேலைத் திட்டங்கள், அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்ட செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று அவைகள் சரியாகப் பூர்த்தியாக்கப்பட்டு மக்களுக்காகக் கையளிக்கப்படுகின்றதா என்பதுதான் கேள்விக் குறி என்றும் இங்குள்ள மக்களால் கூறப்படுகின்றது.
திறப்பு விழாக்களைக் காணோம்!
கல்முனையில் அடிக்கல் நடுவதற்கும் அங்குரார்ப்பனம் செய்து வைப்பதற்கும் அதிக எண்ணிக்கையான விழாக்கள் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. ஆனால், திட்டங்கள் நிறைவேறி திறப்பு விழாக்கள் நடைபெறுவது என்பது அரிதிலும் அரிதாக இருப்பதாகவும் இங்குள்ள மக்களால் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
கல்முனையிலுள்ள தற்போதய அரசியல்வாதிகள் அடிக்கல் நடுவதில்தான் துரிதம் காட்டி அக்கறையுடன் செயல்படுகிறார்கள் என்பதற்கு நற்பிட்டிமுனையில் பாலர் பாடசாலைக்கு ஒரு அரசியல்வாதியால் வைக்கப்பட்ட அடிக்கல் உடைக்கப்பட்டு மற்றொரு அரசியல்வாதியால் மீண்டும் நடப்பட்டதும் இதற்காக ஒருவரை ஒருவர் கண்டித்துக் கொண்டதும் நல்ல உதாரணமாகும் என்றும் மக்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது.
அடிக்கல் நடும் வைபவங்கள்,அங்குரார்ப்பன நிகழ்வுகள் என்பனவற்றிற்கு ஏற்பாடு செய்யும் பிரமாண்டமான விழாக்களுக்கான செலவுகளை இங்குள்ள வறிய குடும்பங்களுக்கு ஏதாவது ஒரு செலவுக்கு பகிர்ந்து அளிப்பது சிறப்பானதாக அமையும் என்றும் இதனை இப்பிரதேச அரசியல்வாதிகள் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவது சிறப்பாக அமையும் எனவும் இங்குள்ள சமூக சீர்திருத்தவாதிகளால் ஒரு அபிப்பிராயமும் தெரிவிக்கப்படுகின்றது.
கல்முனையில் காட்சி தரும் முன்னாள் அமைச்சர் மன்சூரின் கட்டிடங்கள்! 
கல்முனைப் பிரதேசத்தில் முன்னாள் வர்த்தக, வாணிபத்துறை அமைச்சர் அல்-ஹாஜ் ஏ.ஆர் மன்சூர் அவர்களால் செய்யப்பட்ட பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் போன்று இன்று வரை இப் பிரதேச மக்களுக்குத் தேவையான எந்தவொரு பாரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை என்பது இங்குள்ள மக்களின் குறைபாடாகும்.
கல்முனை நகரில் பொது நூலகம், அரச செயலகக் கட்டிடத் தொகுதி, நீதிமன்றக் கட்டிடத் தொகுதி, பொதுச் சந்தைக் கட்டிடம்,கல்முனை அஷ்ரப் ஞாபகர்த்த ஆதார வைத்தியசாலை,சாய்ந்தமருது மற்றும் மருதமுனையில் அமைந்துள்ள பொது நூலகக் கட்டிடங்கள், பாடசாலை கட்டிடங்கள் என்பன போன்றவை ஏ.ஆர். மன்சூர் அவர்கள் செய்த சேவைகளில் மறக்க முடியாதவைகள். இவைகள்தான் தற்போதும் கல்முனையில் காட்சி தரும் கட்டடத் தொகுதிகளாகும்.
இது மாத்திரமல்லாமல் இவர் அரசின் உதவியை மட்டும் நம்பாமல் தனிப்பட்ட தனவந்தர்களையும் நாடி இப் பிரதேசத்திற்கு உதவி செய்தார். உதாரணத்திற்கு மர்ஹும் நளீம் ஹாஜியார் அவர்களோடு தொடர்பு கொண்டு அன்னாரின் உதவி பெற்று கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவிகளின் முக்கிய தேவைகளில் ஒன்றாக இருந்த விடுதி வசதியை பல இலட்சம் ரூபா செலவில் அன்று பூர்த்தி செய்து கொடுத்து உதவினார். இப்படியான சேவைகள் செயல்பாடுகள் தற்போதய அரசியல்வாதிகளிடம் இல்லாமல் இருப்பதுதான் இப் பிரதேச மக்களுக்கு ஏற்பட்டுள்ள மிகுந்த கவலையாகும்.எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதுள்ள அரசியல்வாதிகள் குறைந்தது கல்முனை பொது நூலகக் கட்டிடம், அரச செயலகக் கட்டடம்  கல்முனை பொதுச் சந்தைக் கட்டடம் எனபனவற்றிலுள்ள குறைபாடுகளைத் திருத்தி தற்காலத்திற்கு ஏற்ப நவீனப் படுத்துவதுடன் கல்முனையை அழகுபடுத்தக் கூடிய பாரிய அபிவிருத்திகளைத் தொடர வேண்டும் என்பதுவும் இங்குள்ள மக்களின் விருப்பமாகும்.
கல்முனைப் பிரதேசத்தில் அடிக்கல் நடும் விழாக்கள்  இல்லாமல் அபிவிருத்தி வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டு அவைகளை மக்களிடம் கையளிப்பதற்காக திறந்து வைக்கும் வைபவங்களைக் காண்பது எப்போது என்பதே கல்முனைப் பிரதேச மக்களின் விருப்பமாகும்.

No comments:

Post a Comment