Wednesday, May 8

அம்பாறை மாவட்டத்தில் ஜும்ஆ பிரசங்கத்தில் வீதி விபத்துக்கள் குறித்து பொது மக்களுக்கு உபதேசம்



அம்பாரை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் வீதிப் போக்கு வரத்து ஒழுங்குகளைக் கடைப் பிடிப்பதன் ஊடாக ' சமாதானம், ஒற்றுமை, பாதுகாப்பு அபிவிருத்தியை நோக்கி அணிதிரள்வோம்' எனும் தலைப்பிலான பொலிஸ்-உலமாக்கள் மாநாடு (06.05.2013) சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தில் இடம் பெற்றது.
சம்மாந்துறைப் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எஸ்.எம்.சம்சுதீன் தலைமையில் இடம் பெற்ற இம்மாநாட்டில் அம்பாரை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும், முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான சட்டத்தரணி அஜித் றோஹன பிரதம அதிதியாகவும், அம்பாரை மாவட்ட மோட்டார் போக்கு வரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி பியந்த பண்டார கௌரவ அதிதியாகவும்  கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டில் சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர், காரைதீவு, மாவடிப்பள்ளி, மாளிகைக்காடு,சம்மாந்துறை, வீரமுனை, சொறிக்கல்முனை, வளத்தாப்பிட்டி, மல்வத்த போன்ற பிரதேசங்களிலுள்ள பள்ளிவாசல்களின்  நம்பிக்கையாளர் சபையினர், இப்பிரதேசங்களில் மக்களை நல்வழிப்படுத்திக் கொண்டிருக்கும் உலமாப் பெருமக்கள், கடமையில் ஈடுபட்டிருக்கும் பொலிசார், மோட்டார் போக்கு வரத்துப் பொலிசார் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியேட்சகர் சட்டத்தரணி அஜித் றோஹன ' இன்று இலங்கையில் 431 பொலிஸ் நிலையங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவைகளில் மிக அதிகமான குற்றச்செயல்களும், முறைப்பாடுகளும், விபத்துக்களும் சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவில் தான் இடம் பெற்றுள்ளன. இவர்களுக்கு அறிவுரைகள், அச்சுறுத்தல்கள், தண்டனைகள், நீதிமன்றத் தண்டனைகள் என வழங்கியும் மாற்றங்கள் ஏதுமில்லை. ஆனால் முஸ்லிம் மக்கள் வெள்ளிக் கிழமைகளில் அவர்களது பள்ளிவாசல் 'குத்பா' பிரசங்கங்களை நன்கு மதிப்பதும், அதன்படி நடப்பதனையும் நாமறிவோம். எனவே இங்கிருக்கும் உலமாக்கள், பள்ளிவாசல் நிருவாகிகளின் உதவிகள் மூலம் விபத்துக்கள் அற்ற, சமாதான, அபிவிருத்திப் பூமியை நோக்கிப் பயணிக்க நாம் ஒன்றுபடுவோம்' எனக் கேட்டுக் கொண்டார்.( கடந்த கால அகோர விபத்துக் காட்சிகளும் நவீன இலத்திரனியல் ஊடகங்கள் மூலம் காண்பிக்கப்பட்டன).
இறுதியாக வெள்ளிக்கிழமை  குத்பா பிரசங்கங்களிலும், இரவு நேர இசாத் தொழுகையின் பின்னரும்  பள்ளிவாசல்கள் மூலம் பொதுமக்களுக்கு அறிவுரை செய்வதென்றும், கடந்த காலங்களில் நடைபெற்ற விபத்துக்களின் விபரங்கள் தொகுக்கப்பட்ட காட்சிகள், பொதுமக்கள் கூடுமிடங்களில் பெரிதாகப் பார்வைக்கு வைப்பதென்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இறுதியில் நிந்தவூர் ஜும்ஆப்பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல்ஹாஜ்.ஏ.எம்.இஸ்மாயில், செயலாளர் அல்ஹாஜ்.ஏ.எம்.றஸீன் ஆகியோர்களினால் சிரேஷ்ட பொலிஸ் அத்தியேட்சகர் அஜித் றோஹனவிற்கு பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment