Wednesday, May 8

நோர்வேயின் அகதிகள் பேரவைக்கு கல்முனையில் பாராட்டு



நோர்வேயின்  அகதிகள் பேரவை இலங்கையில் தனது பணியினை நிறைவு செய்து நாடு திரும்ப உள்ளனர். இதற்கமைவாக அம்பாறை மாவட்டத்திற்கான  நோர்வேயின்  அகதிகள் பேரவையின் கல்முனை அலுவலகத்தின் செயற்பாடு இன்றுடன் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. இதன் நிறைவு தின நிகழ்வுகள் இன்று (07.05.2013) காலை அதன் சட்ட ஆலோசகர்களான சட்டத்தரணி றிம்சியா கால்டீன் மற்றும் சட்டத்தரணி ஜெசீந்தா ராஜேந்திரன் ஆகியோரின் தலைமையில் சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த அமைப்பு சுனாமி அனர்த்தத்தின் பின்னர் 8 வருட காலமாக அம்பாறை மாவட்டத்தில் செயற்பட்டது. தகவல், சட்ட ஆலோசனை மற்றும் சட்ட உதவி என்பவற்றினை மேற்படி அமைப்பு மக்களுக்கு இலவசமாக வழங்கிவந்தது. 
மேற்படி அமைப்பு நிதிப் பற்றாக்குறையின் காரணமாகவே இலங்கையில் தனது பணியினை நிறைவு  செய்து நாடு திரும்புவதாக அதன் இலங்கை நாட்டிற்கான பணிப்பாளர் ஈகல் கிவர்மோ இதன்போது தெரிவித்தது குறிப்பிடத் தக்கதாகும்.
இந்நிகழ்வில் நோர்வேயின்  அகதிகள் பேரவையின் செயலாளர் நாயகம் டொரில் பிரிக்கி, இலங்கை நாட்டிற்கான பணிப்பாளர் ஈகல் கிவர்மோ, கல்முனை மேல் நீதி மன்ற நீதிபதி சுவர்ணராஜா, கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.பி.முகைடீன், சம்மாந்துறை நீதவான் கருணாகரன், அம்பாறை மாவட்டத்தில் காணப்படும் பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், மேலதிக மாவட்ட பதிவாளர்கள், நோர்வேயின்  அகதிகள் பேரவையின் அம்பாறை மாவட்ட அலுவலகத்தின் சட்ட உத்தியோகத்தர் ஆயிசா சித்தீகா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment