Friday, June 7

கல்முனையிலிருந்து அம்பாறைக்கு மாற்றப்பட்டுள்ள பொது பல சேனாவின் ஒன்றுகூடல்


எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கல்முனையிலும் அம்பாறையிலும் பொதுபல சேனா ஒன்றுகூடலை நடாத்துவதற்கு ஏற்கனவே திட்டமிட்டிருந்தது. சிங்களவர்களே இல்லாத, முஸ்லிம்கள் செறிந்து வாழும் கல்முனையில் இந்த ஒன்றுகூடலுக்கு எதிராக பலத்த எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.

இந்நிலையில், கல்முனையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழ் மக்களுடனான பொதுபல சேனாவின் ஒன்றுகூடல் அம்பாறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறித்த தமிழ் மக்களை அம்பாறைக்கு வருமாறு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.

கல்முனையில் காலை 9 மணிக்கும், அம்பாறையில் பிற்பகல் 2 மணிக்கும் இந்த ஒன்றுகூடல் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கல்முனையில் பொதுபல சேனா ஒன்றுகூடலை நடத்தினால் பாரிய கலவரங்கள் வெடிக்கும் என்ற அச்சத்தினால் குறித்த தமிழ் மக்களுடனான ஒன்றுகூடல் அம்பாறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கல்முனை சுபத்ராம விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரருடன் தொடர்புகொண்டு இதுகுறித்து கேட்டபோது, கல்முனையில் பொதுபல சேனா கூட்டம் நடத்துவது பற்றி தனக்கு அறிவிக்கப்படவில்லையென்றும் அம்பாறையில்தான் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால், கல்முனையில் தமிழ் மக்களுடன் பொதுபல சேனா ஒன்றுகூடல் ஒன்றை நடாத்துவதற்கு திட்டமிட்டிருந்ததாகவும், அங்குள்ள தமிழ் மக்கள் அம்பாறையில் ஒன்றுகூடலை நடத்துமாறு கோரிக்கை விடுத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அம்பாறையில் நடைபெறவுள்ள கூட்டத்திற்கே, குறித்த தமிழ் மக்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள். அம்பாறையில் நடைபெறும் பொதுபல சேனாவின் கூட்டம் ஒரு மாநாடு அல்ல என்றும், அது அம்பாறை மக்களுக்கு பொதுபல சேனாவின் செயற்பாடுகள் குறித்து விளக்கமளிக்கும் கொள்கை விளக்க கூட்டமென்றும் பொதுபல சேனா சார்பாக பேசக்கூடிய டிலந்த விதானகே தெரிவித்தார்.

இதுகுறித்து அம்பாறை மாவட்ட முப்படைகளின் கட்டளைத் தளபதி சார்பாக பேசக்கூடிய சார்ஜன்ட் அரபாத்துடன் தொடர்புகொண்டு கேட்டபோது, கல்முனையில் பொதுபல சேனா கூட்டம் நடத்துவது பற்றி அறியத்தரவில்லை என்று தெரிவித்தார். அத்துடன் கல்முனையில் எந்த இடத்தில், எத்தனை மணிக்கு கூட்டம் நடைபெறுமென தெரியவந்தால், அதுகுறித்து நடவடிக்கை எடுக்க முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கல்முனையில் பொதுபல சேனா கூட்டம் நடத்துவது தொடர்பில் அங்குள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் பலத்த எதிர்ப்பை வெளியிட்டுள்ள நிலையிலேயே குறித்த ஒன்றுகூடல் அம்பாறைக்கு மாற்றப்பட்டுள்ளது. சிங்களவர்களே இல்லாத கல்முனையில் தமிழர்களுடன் பொதுபல சேனா ஏன் ஒன்றுகூடலை நடத்தவேண்டுமென்ற புதிய கேள்வியும் தற்போது அங்குள்ள மத்தியில் எழுந்துள்ளது.

மறுமுனையில், கிழக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக “திராவிடன் சேனை” எனும் அமைப்பினால் துண்டுப்பிரசுரங்களும் வெளியிடப்பட்டிருந்தன. இந்நிலையிலேயே பொதுபல சேனா தமிழ் மக்களுடன் ஒன்றுகூடலை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment