Monday, February 20

நாடு, நகர சட்டமூலத்திற்கு கிழக்கு மாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர்கள் அரசிடம் ஆட்சேபம் தெரிவிப்பு

கிழக்கு மாகாண சபையில் நாளை திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ள நாடு மற்றும் நகரத் திட்டமிடல் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் கிழக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் எதிர்ப்பை தெரிவித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் மற்றும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களே இந்த எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

நாடு மற்றும் நகரத் திட்டமிடல் திருத்தச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல விடயங்கள் சிறுபான்மையிருக்கு பாதகமாக உள்ளது எனவும் அரசாங்கத்திடம் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சட்டமூலத்திற்கு கிழக்கு மாகாண சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிராக வாக்களிப்பார்கள் எனவும் அவர்கள் அரசாங்கத்திடம் குறிப்பிட்டுள்ளனர்.
நாடு மற்றும் நகரத் திட்டமிடல் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையிலான கிழக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி பிதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.
இச்சந்திப்பில் மீன்பிடி பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, கிழக்கு மாகாண சபையிலுள்;ள அமைச்சர்கள், சபைத் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் உள்ளடங்கிய குழுவினரும் பௌத்த சாசன மத விவகார அமைச்சின் செயலாளர் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
குறித்த திருத்தச் சட்டமூலத்தில் சிறுபான்மையினருக்கு பாதகமாக உள்ள விடயங்களை திருத்தியமைப்பதாக இதன்போது பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
அத்துடன் குறித்த சட்டமூலத்தில் மத வழிபாட்டுத் தலங்களை புத்தசாசன அமைச்சு வர்த்தமானி அறிவித்தல் மூலம் சுவீகரிப்பது என குறிப்பிடப்பட்டுள்ள 6.2 மற்றும் 21.2 ஆகிய சரத்துக்களில் திருத்தங்களை மேற்கொள்வது எனவும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
இதற்கிணங்க, கிழக்கு மாகாண சபைக்கு உட்பட்ட காணிகள் புத்தசாசன சமய விவகார அமைச்சு தேவை ஏற்படும்போது வர்த்தமானியில் பிரசுரிக்க முடியுமே தவிர சுவீகரிக்க முடியாது' என்ற திருத்தத்துடன் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் நாளை திங்கட்கிழமை நாடு மற்றும் நகர திட்டமிடல் திருத்தச் சட்டமூலத்தை சமர்ப்பிக்கவுள்ளதாக மாகாண சபை வட்டாரங்கள் தெரிவித்தன.
இவ்வாறு திருத்தங்களுடன் சமர்ப்பிக்கப்படும திருத்த சட்ட மூலத்தை அங்கீகரிப்பது என ஆளுங் கட்சியினர் தீர்மானித்துள்ளதாக கிழக்கு மாகாண சபையுடன் நெருங்கிய நபர் தெரிவித்தார்.
இதேவேளை, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இச்சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்தார்.
'குறித்த சட்டமூலத்தில் ஏதாவது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால், அது உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும்.
அவ்வாறு அறிவிக்காமையினால் எமது கட்சி குறித்த சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்கும்' என அவர் குறிப்பிட்டார்.
தொடர்பாடல் பிரச்சினை காரணமாக குறித்த சட்டமூலத்திற்கு மேல் மாகாண சபையில் இந்த திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபை உறுப்பினர்கள் வாக்களித்ததாக ஹசன் அலி மேலும் தெரிவித்தார்.
குறித்த திருத்தச் சட்டமூலம் இதுவரை மேல் மாகாண சபையில் மாத்திரம் நிறைவேற்றுள்ளப்பட்டுள்ளது. மேல் மாகாண சபையில் இந்த திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபை உறுப்பினர்கள் வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment