Sunday, June 24

கிழக்கு மாகாண சபை: உதுமாலெப்பைக்கு ஜெமீல் சவால்


ஜெய்கா திட்டத்தின் மூலம் கிழக்கு மாகாண சபை ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற வீதி அபிவிருத்தித் திட்டங்களுக்கு அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸோ மாகாண அமைச்சர் உதுமாலெப்பையோ உரிமை கோர முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.
‘ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூலம் அரசியல் முகவரிகளை பெற்றுக் கொண்ட இந்த அமைச்சர்கள் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள், அபிலாஷைகள், பாதுகாப்பு மற்றும் இருப்பு தொடர்பில் சற்றும் அக்கறையற்ற நிலையில் அபிவிருத்திக் கோஷம் எழுப்புகின்றனர்.
அத்துடன், முஸ்லிம் காங்கிரஸையும் அதன் தலைவர் ரவூப் ஹக்கீமையும் விமர்சித்து வருவதானது மிகவும் கண்டிக்கத்தக்கது’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாய்ந்தமருது பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற வீதி அபிவிருத்தி அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்ட கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பை; ‘நாங்கள் செய்கின்ற அபிவிருத்திகளைப் போன்று தனது நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்திகளை செய்ய முஸ்லிம் காங்கிரஸ் தலைவரால் முடியுமா?’ என சவால் விடுத்திருந்தார்.
இது குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது,
“எனது சொந்த ஊரான சாய்ந்தமருது மண்ணில் வைத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையும் அதன் தலைவர் ரவூப் ஹக்கீமையும் அபிவிருத்தியை மையப்படுத்தி கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பை விமர்சித்து சவால் விட்டிருப்பது தொடர்பில் பதிலளிக்க வேண்டிய கடப்பாடு எனக்கிருக்கிறது.
உண்மையில் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களினால் உருவாக்கப்பட்டு ஒரு சமூக விடுதலை இயக்கமாக கட்டியெழுப்பப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீமின் தலைமைத்துவத்தின் கீழ் இன்றும் அந்த இலட்சியத்துடனேயே பயணிக்கிறது.
இதன்போது கட்சியும் தலைமைத்துவமும் பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்து பல சதிகளையும் சிதைவுகளையும் எதிர்கொண்ட போதிலும் தனது அடிப்படை கொள்கை கோட்பாடுகளில் இருந்து விலகிச் செல்லவில்லை.
ஆனால் இந்த சமூக இயக்கத்தின் மூலம் அரசிய முகவரிகளை பெற்று கட்சிக்கு துரோகமிழைத்து விட்டவர்கள் சமூக நலனில் சற்றும் அக்கறையில்லாமல் பேரினவாதத்திற்கு முண்டு கொடுத்துக் கொண்டு மாற்றுக் கட்சிகளில் அமைச்சர்களாக வலம் வருகின்றனர்.
இவர்கள் இந்த இயக்கத்தையும் அதன் தலைவர் ரவூப் ஹக்கீமையும் கண்மூடித்தனமாக விமர்சிப்பதானது மிகவும் கண்டனத்துக்குரிய செயலாகும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பொறுத்தவரை சில வீதி அபிவிருத்தி கொந்தராத்துகளுக்காக, மறைந்த தலைவரால் வகுக்கப்பட்ட கட்சியின் அடிப்படை கொள்கை கோட்பாடுகளை ஒரு போதும் விட்டுக் கொடுக்க முடியாது.
இத்தகைய கொந்தராத்துகளுக்காக முஸ்லிம்களின் உரிமைகளை விலை பேசுவதற்கு தலைவர் ரவூப் ஹக்கீம் தயாரில்லை. அதனால் சில அபிவிருத்திகள் எங்களுக்கு கிடைக்காமல் போகலாம். அதையிட்டு எமது கட்சியோ மக்களோ அலட்டிக் கொள்ள போவதில்லை.
கிழக்கு மாகாண சபையில் கொண்டு வரப்பட்ட சிறுபான்மையினருக்கு எதிரான மிக முக்கிய மசோதாக்களான 13ஆவது திருத்தச் சட்டம் மற்றும் நாடு நகர அபிவிருத்தி திருத்தச் சட்டம் ஆகிய இரண்டையும் தலைவர் ஹக்கீமின் ஆலோசனையின் பேரில் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளாகிய நாம் எதிர்த்ததனாலேயே அவை வாபஸ் பெறப்பட்டன என்பதை உலகமே அறியும்.
உண்மையில் நாடு நகர அபிவிருத்தி திருத்தச் சட்டத்தை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரித்து. எனினு; அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் இன்று தம்புள்ள மஸ்ஜிதுக்காக நாம் போராட முடியாது.
அது போன்று நாட்டின் பல பகுதிகளிலும் பல மஸ்ஜித்கள் எம்மிடமிருந்து பறிபோய் இருக்கும். இத்தகைய சட்டமொன்றை அரசின் பங்காளிக் கட்சியாக இருந்து கொண்டு நாம் தைரியத்துடன் முழு மூச்சாக எதிர்த்த காரணத்தினாலேயே மாகாண சபை உறுப்பினர்களான எங்களுக்கு கமநெகும திட்டத்திற்கான தலா 15 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு மறுக்கப்பட்டது.
ஆனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இத்தகைய சமூக ரீதியான நடவடிக்கைகளை காட்டிக் கொடுத்து அரச உயர் மட்டத்தினருக்கு நல்ல பிள்ளைகளாக தம்மை இனம் காட்டிக் கொண்டு இந்த மாற்றுக் கட்சி அமைச்சர்கள் சில சலுகைகளைப் பெற்றுக் கொண்டு அபிவிருத்திக் கோஷம் எழுப்புகின்றனர்.
இவர்கள் போன்று சலுகைகளுக்காக சமூகத்தின் உரிமைகளை விலை பேசுவதற்கு நாம் ஒரு போதும் தயாராக மாட்டோம். அதற்கு எமது தலைமை அனுமதிக்கவும் மாட்டாது.
எவ்வாறாயினும் இன்று கிழக்கில் மேற்கொள்ளப்படுகின்ற வீதி அபிவிருத்தி நடவடிக்கைகள் ஜெய்கா திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண சபை ஊடாக முன்னெடுக்கப்படுகின்றது என்பதே உண்மையாகும்.
அதற்கு யார் வீதி அபிவிருத்தி அமைச்சராக இருந்தாலும் ஒதுக்கப்பட்டிருக்கின்ற நிதியின் மூலம் வேலைகள் தாமாக நடந்து கொண்டு செல்லும் என்பது சிறு பிள்ளைக்கும் தெரியும். இதற்கு அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸோ மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் உதுமாலெப்பையோ உரிமை கோர முடியாது.
ஆனால் இதனை வைத்துக் கொண்டு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் உதுமாலெப்பை சுய அரசியல் லாபம் தேடுவதும் முஸ்லிம் காங்கிரசையும் தலைவர் ரவூப் ஹக்கீமையும் விமர்சிப்பதும் மக்களை பிழையாக வழி நடாத்த முற்படுவதும் கண்டிக்கத்தக்க அரசியல் நாகரிகமற்ற செயற்பாடாகும்.
எவ்வாறாயினும் இவர்களைது இந்த பூச்சாண்டி அரசியல் எமது மக்களுக்கு புதிதான ஒன்று அல்ல என்பதையும் அதற்கு அவர்கள் சோரம் போக மாட்டார்கள் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் அரசின் பங்காளிக் கட்சியாக இருந்து கொண்டு முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் மற்றும் இருப்பு தொடர்பில் கூடிய அக்கறையுடன் செயற்பட்டு வருகின்ற முஸ்லிம் காங்கிரஸ் விரைவில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக திகழும்.
அதன் மூலம் கிடைக்கும் அரசியல் அதிகாரத்தின் ஊடாக இப்போது மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்திகளை விட பன் மடங்கான திட்டங்களை முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுக்கும் என்பதையும் உறுதியாகக் கூறிக் கொள்கின்றேன்.
இதற்காக கடந்த சில மாதங்களாக தலைவர் ஹக்கீம் தலைமையில் முஸ்லிம் காங்கிரஸ் உயர்மட்டக் குழு, கட்டார் மற்றும் குவைத் போன்ற அரபு நாடுகளுக்கு விஜயம் செய்து பேச்சுவார்த்தைகளை நடத்தியிருப்பதோடு நகல் திட்டங்களையும் தயாரித்து வைத்துள்ளது என்பதையும் இந்த சந்தர்ப்பத்தில் மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றேன்.
இதை விடுத்து வீதி கொந்தராத்து வியாபாரம் செய்வதற்கோ அதற்காக முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை விலை பேசுவதற்கோ முஸ்லிம் காங்கிரஸ் எனும் எமது சமூக பேரியக்கம் தயாரில்லை என்பதை மாகாண அமைச்சர் உதுமாலெப்பை போன்றோருக்கு மீண்டும் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.
முடிந்தால் அமைச்சர் அதாவுல்லா, மாகாண அமைச்சர் உதுமாலெப்பை போன்றோர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் எமது பிரதிநிதிகள் போன்று சமூகத்திற்காக குரல் எழுப்பிக் கொண்டு ஏதாவது ஒரு அபிவிருத்தியை செய்து காட்டட்டும் பார்க்கலாம் என பகிரங்க சவால் விடுக்கின்றேன்” என்றார்.

1 comment:

  1. சவால் விட்டு விட்டே ஊரையும் ஊர் மக்களையும் நாசமாக்கி போட்டானுகள் . வைக்கல் கொட்டிலில் ௦௦௦௦௦௦படுக்கும் 00 மாதிரி

    ReplyDelete