Sunday, July 8

அழுத்தங்களுக்கு அடிபணிந்து சேவையாற்றவேண்டியுள்ளது - பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில்


சம்மாந்துறை பிரதேச இளநிலைப் பட்டதாரிகள் அமைப்பின் ஏற்பாட்டில் சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் அவர்கள் இரண்டாவது தடவையும் உபவேந்தராக தெரிவு செய்யப்பட்டதை கௌரவிக்கும் நிகழ்வு  06. 07.2012ல் இடம் பெற்றது.


இந்நிகழ்வில் உரையாற்றிய உபவேந்தர் பேராசிரியர்; எஸ்.எம்.எம். இஸ்மாயில் சுமார் மூவாயிரத்துக்கு மேற்பட்ட இளம் இரத்தங்களோடு போராட வேண்டியுள்ளது. அத்துடன், நூற்றுக்கு மேற்பட்ட கல்விமான்களோடு எங்களது கருத்துக்களை மெய்பித்து அதனை செயற்படுத்திக் காட்டவேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது. அதற்கு மேலாக நிருவாக ரீதியான சில அணுகுமுறைகளைக் கடைபிடிக்க வேண்டியுள்ளது. அத்துடன் அங்கு வேலை செய்யும் ஏனைய தொழிலாளர்களோடு ஒரு இயல்பு நிலையான தொடர்புகளை வைத்திருக்க வேண்டிய தேவைப்பாடும் இருக்கின்றது. இதற்கு மேலாக, சமூக அழுத்தங்கள் அரசியல் அழுத்தங்கள் மற்றும் மேலாதிக்க செயற்பாட்டாளர்களின் அழுத்தங்கள் போன்றவற்றுக்கு நாங்கள் அடிபணிந்து அல்லது அவர்களது அழுத்தங்களின் மத்தியில் தான் தொழிலாற்ற வேண்டியுள்ளது.


நாளந்தம் தொலைபேசி அழைப்புக்களுக்கும் பிட்டிசன்களுக்கும் பதிலளிக்க வேண்டியுள்ளது. மற்றும் நிருவன ரீதியான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியுள்ளது.

அனேகமான பல்கலைக்கழகங்களில் தற்போது தொழிற்சங்க நடவடிக்கைகள் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றன. கடந்த மூன்று வாரகாலமாக கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டங்கள் இடம் பெற்றன. தற்போது கடந்த நான்காம் திகதி முதல் கல்விசார் ஊழியர்களின் வேலை நிறுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. தென்கிழக்குப் கல்கலைக்கழகத்தில் கல்விசார், கல்விசாரா நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் இந்நிலை உயர்கல்வி அமைச்சுக்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் ஏனைய பல்கலைக்கழகங்கள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளன. சில பல்கலைக்கழகங்கள் பகுதியளவில் முடங்கியுள்ளன. இதனைக் கூட சிலர் வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்கின்றார்கள்.

இப்படியான சூழலில்தான் இளம் விரிவுரையாளர்களின் உதவியோடு உலக வங்கிக்கு ஒரு திட்டத்தை வரைந்து 100 மில்லியன் ஒரு திணைக்களத்திற்கும், மற்றுமொரு திணைக்களத்திற்கு 69 மில்லியனும் அதேபோன்று பல்கலைக்கழகத்தின் ஏனைய வளர்ச்சிக்கு 70 மில்லியன் ரூபாய்களும் கிடைக்கப் பெற்றன. அது கூட சந்தர்ப்பவசமாகவே கிடைத்ததாகக் கூறினார்.

கடந்த காலங்களில் இந்த பல்கலைக்கழகம் யுத்தத்தின் பிடியில் இறுகிக் கொண்டு எதற்கு எடுத்தாலும் யுத்தம், ஹர்த்தால் அல்லது இயற்கை அனர்த்தங்களைப் பேசிக் கொண்டுதான் எங்களது காலத்தைக் கழித்தோம். மாறாக, பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியைப் பற்றி பேசவில்லை. ஆனால், நாங்கள் தற்போது பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியில் மும்முரமாக செயற்பட்டு பாரிய அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி இருக்கின்றோம் எனக் குறிப்பிட்டார்.

சம்மந்துறையில் உள்ள பிரயோக விஞ்ஞான பீடத்தை சிலர் வேறொரு இடத்துக்கு நகர்த்திச் செல்ல முற்பட்டனர். அவர்களின் முயற்சிக்கு சாவுமணி அடித்தாற் போல் நாங்கள் அங்கும் விடுதி மற்றும் ஆய்வு கூட வசதிகளை மேம்படுத்துவதற்காக பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம்.இவ்வாறு பாரிய அழுத்தங்களுக்கு மத்தியிலேயே தாங்கள் செயலாற்றிக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.

இந்நிகழ்வின் போது சம்மாந்துறையைச் சேர்ந்த கல்வி மான்களாலும் சமுக அமைப்புக்களாலும் உபவேந்தருக்கு பொன்னாடைகளும் நினைவுசின்னங்களும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.






No comments:

Post a Comment