Monday, April 29

அக்கரைப்பற்று வலயத்தில் ஆசிரியர் தட்டுப்பாட்டை நிவர்த்திக்க கிழக்கு மாகாண அமைச்சரவை அங்கீகாரம்!

Ampara MPC (1)அக்கரைப்பற்றுக் கல்வி வலயத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப கிழக்கு மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெவ்வை தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்ட்டதாவது,
அக்கரைப்பற்று வலயத்திற்குட்பட்ட பொத்துவில் பிரதேச கல்விக் காரியாலய பாடசாலைகளில் 97 ஆசிரிய வெற்றிடங்களும் அட்டாளைச்சேனை பிரதேச கல்விக் காரியாலய பாடசாலைகளில் 31 ஆசிரிய வெற்றிடங்களும் அக்கரைப்பற்று பிரதேச கல்விக் காரியாலய பாடசாலைகளில் 5 ஆசிரிய வெற்றிடங்களும் மொத்தமாக அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் 133 ஆசிரிய வெற்றிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் நிலவி வருகிறது.

இதனால் மாணவர்ளின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவும்  பல பாடசாலைகளின் கல்வி வளர்ச்சி பாதிப்படைந்துள்ளது. இவ் ஆசிரிய வெற்றிடங்கள் தொடர்பாக பல பாடசாலைகள் மூடப்பட்டும், ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றும் வருகின்றன.
குறிப்பாக பொத்துவில் கல்விக் கோட்டத்தில் தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்ப மாட்டோம் என பெற்றோர்கள் ஒன்றிணைந்து கோரிக்கை விடுத்தும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் வருவதனால்  பொத்துவில் பிரதேச பாடசாலைகளில் வழமையான கல்வி நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டு வருகின்றன.
கிழக்கு மாகாண சபையினால் புதிதாக வழங்கப்படவுள்ள ஆசிரிய நியமனத்தின் போது அக்கரைப்பற்று வலய பாடசாலைகளில் நிலவுகின்ற 133 ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புவததில் கூடிய கவனம் செலுத்தப்படும் எனவும் இவ்விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவைக்கு என்னால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரைவப் பத்திரத்துக்குரிய அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இதன் நிமித்தம் கிழக்கு மாகாண சபையினால் புதிதாக வழங்கப்படவுள்ள ஆசிரிய நியமனத்தின் போது அக்கரைப்பற்று வலயக்கல்வி பாடசாலைகளில் நிலவி வருகின்ற ஆசிரிய பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்

No comments:

Post a Comment